இன்று "அவருடைய" சத்தம்
ஏப்ரல் 8
🔸️ 'இலேசான' உபத்திரவங்களே நித்திய 'கன' மகிமை தருகிறது! 🔸️
பல வருடங்களுக்கு முன்பாக 'பெர்கென்' நகரில் வாழ்ந்த ஒரு சகோதரன், இவ்விஷயத்தில் ஒரு நல்ல மாதிரியாய் பிரகாசித்து ஜொலித்திருக்கிறார். அச்சகோதரனின் மனைவி முழுக்க முழுக்க தீய குணத்தினால் நிறைந்தவள். ஆகிலும் அச்சகோதரன் தன் மனைவியை அழகுறக் கையாண்ட விதமோ. . .மிகவும் அற்புதம்! இந்த அருமை சகோதரன் தன் மனைவிக்கு முன்பாகவே மரித்துவிட்டார். இச்சகோதரன் மரணப்படுக்கையிலிருந்து மரித்துக் கொண்டிருந்த கடைசி சமயத்தில், அவனுடைய மனைவி இந்த சகோதரன் அருகே வந்து பயங்கர தீய வார்த்தைகளைக் கொட்டித் திட்டினாள். ஆம், உண்மையிலேயே அச்சம்பவம் கொடூரமாய்த்தான் இருந்தது. ஆனால் விந்தையிலும் விந்தை யாதெனில், இந்த அருமை சகோதரன் பூரண சற்குணத்தோடு அச்சம்பவத்தைத் தாங்கிக் கொண்டார்!! இவ்வாறிருக்க, இதுபோன்ற 'அருமையை' அநேக சகோதரர்கள் இழந்து விட்டார்களே. இவர்கள் 'ஒத்துப்போக முடியாத மனைவியைப்' (impossible wife) பெற்றிருந்த ஒரே காரணத்திற்காக, வெள்ளப் பிரவாகத்திற்குள் மூழ்கி மாய்ந்தே போனார்கள்...!
"அதிசீக்கிரத்தில் நீங்கும் இலேசான நம்முடைய உபத்திரவம் மிகவும் அதிகமான நித்திய கன மகிமையை உண்டாக்குகிறது" (2 கொரி 4:17) என தேவ வார்த்தை கூறுவதைப் பார்த்தீர்களா! அதாவது, நீங்கள் உபத்திரவத்தை வேதம் சொல்லுகிறபடியே ஏற்றுக்கொண்டு, அவைகளைச் சரியான முறையில் கையாளுவீர்கள் என்றால், நீங்கள் பெற்றுவிடும் நித்திய கன மகிமை ஒப்பிட முடியாத அளவிற்கு திரட்சியாய் இருக்கும்!! அப்படியிருந்துவிட்டால். . .!
எந்த மானிடப் பிறவியும் அல்லது எந்த கொடிய தீய சம்பவங்களும் உங்கள் பூரித்த செழிப்பான வாழ்க்கைக்கு எவ்விதத்திலும் பங்கம் ஏற்படுத்திடவே முடியாது!!
ஜெபம்:
அன்புள்ள பரம பிதாவே! எங்களுக்கு வரும் உபத்திரவங்களை "கஷ்டம்" என எண்ணாமல் ஞானமாய் கையாண்டு, நித்திய கன மகிமையை சுதந்தரிக்க கிருபை தாரும்! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.
எழுதியவர்:
சகோதரர் சகரியா பூணன்.
"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".
From:-
https://t.me/hisvoicetoday



0 Comments