இன்று "அவருடைய" சத்தம்
ஏப்ரல் 28
🔸️ இறுதிவரை ஒத்தவேஷம் தரியாத உத்தம ஊழியர்கள் வேண்டும்! 🔸️
கர்த்தருக்கு முன்பாக ஊழியம் செய்வது, தரத்தின் அடிப்படையில் மனிதர்களுக்கு முன்பாய் ஊழியம் செய்வதிலிருந்து முற்றிலும் வேறுபட்டதாகும். கர்த்தருக்கு முன்பாக ஊழியம் செய்வது, பொன், வெள்ளி, விலையேறப்பெற்ற கற்களால் கட்டுவதாய் முடியும்!
தங்கள் காலங்களில், கொஞ்சம் கூட ஒத்துப் போகாமல் தேவனுக்காய் உறுதியாய் நின்ற உத்தம சாட்சிகளால் வேதம் நிறைந்திருக்கிறது.
ஒத்த வேஷம் தரியாதவர்களில் நோவா ஓர் உன்னத சாட்சி. அவன் 120 வருடங்கள் பிரசங்கித்தான்! ஆனால் ஒருவர்கூட அந்தச் செய்தியில் ஆர்வம் கொள்ளவில்லை!! ஏன்? ஏனெனில், அவன் ஒரு கட்டுக்கதை கூறி கிலுகிலுப்பூட்டும் பிரசங்கி அல்ல! "நீதியை பிரசங்கிக்கும் பிரசங்கி!!!" (2பேதுரு.2:5).
ஆனால் இந்த 120 வருடங்களில் கொஞ்சமும் சோர்வடையாமல் நிலைத்து நின்றபடியால், அவன் முழுக்குடும்பமும் இரட்சிக்கப்பட்டது! ஆம், பிரசங்கியின் குடும்பத்திற்குத்தானே அவருடைய அந்தரங்க வாழ்க்கை தெரியும். அவர்கள் மனம் மாறவில்லை என்றால் அது அநேகமாய் அப்பிரசங்கியின் மாய்மாலத்தை இவர்கள் கண்டதால் ஏற்பட்ட விளைவாய்தான் இருக்க வேண்டும். ஆனால் நோவாவோ வாழ்ந்து காட்டி நீதியை பிரசங்கித்தவன்.
ஒருவேளை சாத்தான், நோவா நீதியை பிரசங்கித்த சில வருடங்களுக்குப்பின் கொஞ்சம் 'பலன்' கிட்டும்படி பிரசங்க தரத்தை குறைக்கும்படி சோதித்திருக்கக்கூடும். ஆனால் நோவா, தான் எவ்வளவு ஊழியம் செய்திருக்கிறேன் என்பதை காட்டும் ஜெப சுற்றறிக்கையை 'அமெரிக்கா' அனுப்பி பணம் பெறவேண்டிய அவசியம் இல்லையே! அவன் தேவனுக்கு மாத்திரமே ஊழியக்காரன்!! எனவே அவன் ஒத்தவேஷம் தரிக்க மறுத்தான். சற்றே எண்ணிப் பாருங்கள்! 120 வருடங்கள்! ஒருவர்கூட இரட்சிக்கப்படவில்லை. ஆனால் நோவாவோ கடைசிவரை உண்மை உள்ளவனாய் இருந்ததால், அவன் குடும்பம் மாத்திரம் இரட்சிக்கப்பட்டது!! இன்றும் இவ்விதமான சத்தியத்தில் உறுதியான குடும்பங்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.
ஜெபம்:
பரம தந்தையே! எங்கு பார்த்தாலும் 'மனிதருக்காக' சத்தியத்தை இழந்து 'ஒத்தவேஷம் தரித்திடும்' ஊழியங்கள் மத்தியில், உமக்கு முன்பாய் வாழ்ந்து உத்தம ஊழியம் செய்திட எங்களுக்கு உதவும்! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.
எழுதியவர்:
சகோதரர் சகரியா பூணன்.
"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".
From:-
https://t.me/hisvoicetoday



0 Comments