இன்று "அவருடைய" சத்தம்
மே 25
🔸️ தெய்வ பக்திக்கு ஏற்படும் நிந்தையைவிட, நீர் எங்களோடு இருப்பதே பாக்கியம்! 🔸️
ஆதியாகமம் 39 ஆம் அதிகாரத்தில் வாலிபனாகிய யோசேப்பின் நிகழ்ச்சி இன்றைய வாலிபர்களுக்கு சவால்விடும் ஓர் சாட்சியாகும்! இந்த ஏழை வாலிபன் யோசேப்பு, ஓரு கவர்ச்சி மிக்க வல்லமை பொருந்திய ஸ்திரீயினால் கடும் சோதனைக்கு ஆளானபோது, எவ்வாறு தேவனுக்கு உண்மை உள்ளவனாய் நிலைத்திருந்தான் என்பதையே இந்த அதிகாரம் பறைசாற்றுகிறது! வாலிபர்கள் தங்கள் வாலிபத்தின் வேசித்தனத்திற்கு விலகி வாழ்ந்திட ஒரே ஒரு வழி தான் உண்டு....ஆம், வேசித்தனத்திற்கு தூண்டும் ஸ்தலத்தை விட்டே விலகி ஓடுவதுதான் அந்த வழியாகும் (1கொரி. 6:18). இதைத்தான் யோசேப்பு செய்தான்! தன்னோடு வேசித்தனம் செய்யும்படி பார்வோனின் பிரதான அதிபதியின் மனைவி யோசேப்பை கட்டாயப் படுத்தினாள் (ஆதி.39:7). ஆனால் யோசேப்போ, மறுத்துவிட்டான்! அது மாத்திரமல்லாமல், அவள் இருக்கும் இடத்திற்கு அருகில் செல்வதற்குக்கூட மறுத்து விட்டான் (வசனம் 10). "முடியாது" என சும்மா சொல்வதற்கு பதிலாக, அவனோ அந்த சோதனை தோன்றும் முகாந்திரத்தை விட்டே விலகி ஓடினான். அந்தப் பொல்லாத பெண்மணி அவனைப் பின்தொடர்ந்து தேடி நெருங்கிய போதெல்லாம் யோசேப்பு எங்காவது தூரம் சென்று விடுவான்! ஆம், உங்களை சோதிப்பவர்களைச் சுற்றியே நீங்கள் தயங்கி நின்று கொண்டிருந்தால், நீங்கள் ஒருக்காலும் அந்த சோதனையை ஜெயித்திட முடியாது! இந்த பாலிய சோதனையிலிருந்து "விலகி ஓடும்" புருஷர்களையே இன்றும் தேவன் தேடுகிறார்!
திடீரென்று ஒருநாள் இக்கட்டான வேளையில், அவனை அவள் பிடித்துக் கொண்டாள். அச்சமயத்தில் தன் அங்கியை அவள் பிடித்துக்கொள்ள விட்டு விட்டு, தன்னையோ அவள் கையிலிருந்து பலவந்தமாய் விடுவித்து ஓடிவிட்டான் இந்த உத்தம யோசேப்பு! கடுங்கோபம் கொண்ட அவள், "யோசேப்பு தன்னை விபச்சாரம் செய்ய முயற்சிப்பதாக" பொய்யாய் குற்றம் சாட்டினாள்! அவள் கணவன் வெகுண்டெழுந்து, யோசேப்பை சிறையில் அடைத்தான்!!
தேவனுக்குப் பயந்து வாழ்ந்ததினிமித்தம் யோசேப்பு அடைந்த துன்பங்கள் ஏராளம்! தன் சகோதரரிடமிருந்து பொறாமை, ஒரு பெண்மணியின் பொய் குற்றச்சாட்டு....சிறைச்சாலை! அந்த நாட்களில் சிறைச்சாலை என்பது எலிகளும், புழுக்களும், கரப்பான் பூச்சிகளும் ஏராளமாய் நிறைந்த கொடிய பாதாளமாகவே இருந்தது! இருப்பினும், "கர்த்தரோ யோசேப்போடே இருந்தார்" (ஆதி. 39:21). நீங்கள் தேவனுக்குப் பயந்து தீமையைவிட்டு விலகி ஓடி வாழ்ந்துவிட்டால், அதுபோதும்... உங்களைச் சூழ எவ்வித நெருக்கங்கள் இருந்தாலும், கர்த்தர் உங்களோடு இருப்பார்....அது ஒன்றே போதும்!
ஜெபம்:
அன்பின் தந்தையே! உமக்கு பயந்து பாவத்தை வெறுப்பதால் ஏற்படும் துன்பங்களை ஒரு பொருட்டாக எண்ணாமல், அவ்வேளையில் எங்களோடு இருக்கும் உம்மை காணும் கண்களைத் தந்தருளும்! ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.
எழுதியவர்:
சகோதரர் சகரியா பூணன்.
"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".
From:-
https://t.me/hisvoicetoday
0 Comments