இன்று "அவருடைய" சத்தம்
மே 29
🔸️ இக்கொடிய காலத்தில், வேத வசனமே நம் ஜீவிய ஆதாரம்! 🔸️
ஒரு பாதிரியார் தன் சபையிலிருந்த மக்களிடம் "உங்களைப் போன்ற அதிகம் படிக்காதவர்களால் வேதப் புத்தகத்தை புரிந்து கொள்ளவே முடியாது" எனக் கூறியிருந்தார். ஆனால் அந்த சபையில் இருந்த ஒரு சகோதரனுக்கு தற்செயலாய் ஒரு புதிய ஏற்பாடு கிடைத்தபடியால் அதை அவர் வாசிக்கத் தொடங்கினார். அதன் பலனாய் அவர் வெகு சீக்கிரத்தில் இரட்சிக்கவும்பட்டார்! ஒருநாள் அந்தப் புதிய ஏற்பாட்டை தனக்குமுன் விரித்துவைத்து அவர் படித்துக் கொண்டிருக்கையில், பாதிரியார் அவர் வீட்டிற்கு வந்துவிட்டார். "நீ என்ன வாசித்துக் கொண்டிருக்கிறாய்?" எனக் கேட்கவும், அந்தப் புத்தகம் "வேதாகமம்" என அந்த சகோதரன் பதிலுரைத்தார். உடனே அந்தப் பாதிரியார் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, "வேதப்புத்தகத்தை நீ படிக்கலாகாது" எனக் கூறினார். "ஏனெனில் இந்த வேத புத்தகம் கற்றுத்தேர்ந்த அறிஞர்களுக்கு மாத்திரமேயாகும்" எனவும் கூறினார்!!
அதற்கு அந்த சகோதரன் "ஆனால்.... ஐயா! இந்த புத்தகத்தை வாசித்ததின் விளைவாய் நான் இரட்சிக்கப்பட்டுவிட்டேன்! அதுமாத்திரமல்லாமல், நான் கிறிஸ்துவுக்குள் வளர்வதற்கு திருவசனமாகிய களங்கமில்லாத ஞானப்பாலின்மேல் நான் வாஞ்சையாய் இருக்க வேண்டும் எனவும் இதோ 1 பேதுரு 2:3 வசனம் எனக்குக் கூறுவதையும் நான் காண்கிறேன்" என்றார்.
அதற்கு அந்தப் பாதிரியார் "அது சரிதான், ஆகிலும் பாதிரியாராகிய எங்களைத்தான் பால் கறக்கிறவர்களாக தேவன் நியமனம் செய்து, நாங்கள்தான் உங்களுக்குப் பால் கறந்து தரும்படி வைத்திருக்கிறார்!" என பெருமிதத்தோடு பதில் கூறினார்.
அதற்கு அந்த சகோதரன் சற்றும் தயங்காமல் "எனக்கும் கூட ஒவ்வொரு நாளும் பால் கொண்டு வந்து தரும் பால்காரன் இருந்தான். ஆனால் அவன், பாலில் தண்ணீர் கலப்பதை நான் சீக்கிரத்தில் கண்டுபிடித்து விட்டேன். ஆகவே, இந்தப் பால்காரனுக்கு பதிலாய் ஒரு பசுவை வாங்கிவிட நான் தீர்மானித்துவிட்டேன். ஐயா, இப்போது எனக்கு சுத்தமான பால் கிடைக்கிறது!" என தைரியத்துடன் பதிலளித்துவிட்டான்.
அன்பார்ந்த சகோதர சகோதரிகளே, நாமாக வேதவசனத்தை ஆராய்ந்து கற்றால் மாத்திரமே கறையற்ற உபதேசமாகிய சுத்தமான பாலை நாம் பெற்றிட முடியும். பாவம் நிறைந்த இருளான இவ்வுலகத்தில் நாம் முன்னேறி நடந்து செல்ல நமக்கு கிடைத்திருக்கும் "ஒரே வெளிச்சம்" தேவவசனம் மாத்திரமேயாகும்!
ஜெபம்:
அன்பின் பிதாவே! இன்றைய கலப்பட உபதேசங்கள் மத்தியில், நீர் தந்தருளிய "களங்கமில்லா ஞானப்பாலாகிய" உம் வசனத்தை கவனமாய் பற்றிவாழ உதவி செய்தருளும்! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.
எழுதியவர்:
சகோதரர் சகரியா பூணன்.
"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".
From:-
https://t.me/hisvoicetoday
0 Comments