இன்று "அவருடைய" சத்தம்
ஜூன் 6
🔸️ உத்தம கிறிஸ்தவ ஜீவியத்திற்கு துன்பம் உண்டு! 🔸️
அப்போஸ்தலர் மூலமாய் ஆதியில் சபை உருவானபோது, அவர்கள் அச்சபை மக்களிடத்தில் "நாம் அநேக உபத்திரவங்களின் வழியாய் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்க வேண்டும்" எனக்கூறி அவர்களை திடப்படுத்தினார்கள் (அப். 14:22). ஆம், புதிய உடன்படிக்கையில் பரலோக ராஜ்யத்தில் பிரவேசிக்க வாஞ்சிக்கும் ஒருவன் உபத்திரவங்களின் வழியாய்தான் பிரவேசித்திட முடியும். பவுல் தீமோத்தேயுவிடம், "கிறிஸ்து இயேசுவுக்குள் தேவபக்தியாய் நடக்க மனதாயிருக்கிற யாவரும் துன்பப்படுவார்கள்" (2 தீமோத்தேயு 3:12) என ஆணித்தரமாகக் கூறினார். "துன்பப்படுதலுக்கு" எதிர்பதமான ஜீவியம் "புகழ் பெறுதல்" என்பதேயாகும்.
இந்த இரண்டிற்கும் உள்ள வேறுபாட்டை லூக்கா 6-ம் அதிகாரத்தில் இயேசு சுட்டிக்காட்டினார். நீதியின் நிமித்தம் துன்பப்படும் ஜீவியத்தை சுட்டிக்காட்டி "மனுஷகுமாரன் நிமித்தமாக ஜனங்கள் உங்களைப் பகைத்து, .... தள்ளி விடும்போது.... சந்தோஷப்பட்டு களிகூருங்கள்.... அவர்களுடைய பிதாக்கள் தீர்க்கதரிசிகளுக்கும் அப்படியே செய்தார்கள்" (வசனம் 22, 23). ஆனால் இதற்கு நேர்மாறான மனுஷரின் புகழ்ச்சியைப் பெறும் ஜீவியத்தை சுட்டிக்காட்டி, "எல்லா மனுஷரும் உங்களைக் குறித்துப் புகழ்ச்சியாய் பேசும்போது உங்களுக்கு ஐயோ; அவர்கள் பிதாக்கள்....கள்ளதீர்க்கதரிசிகளுக்கும் அப்படியே செய்தார்கள்" என்றார் (வசனம் 26).
துன்பப்படும் ஜீவியத்தில் நீதியின் நிமித்தமே நாம் துன்பப்பட வேண்டும். மெய்யாய் கிறிஸ்துவை பின்பற்றுகிறவர்களாகிய நாம் எங்கிருந்தாலும் நீதியாயும், நேர்மையாயும் நடந்து கொள்கிறோம். உதாரணமாய் ஒரு மருத்துவமனையில் மருத்துவராகப் பணியாற்றும் நீங்கள் "கருக்கலைப்பு" செய்வதற்கு திட்டவட்டமாய் மறுப்பீர்கள்! ஏனென்றால், இவ்வித செயல் மனுஷகொலை என்பதை திட்டமும் தெளிவுமாக நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். இதன் நிமித்தமாய் நீங்கள் துன்பப்படவோ அல்லது வேலையை விட்டு நீக்கப்படும்படியோ நிலை ஏற்படக்கூடும்! அல்லது மெய் தேவனை ஆராதிக்கிற நீங்கள் புறஜாதியாரின் விக்கிரகங்களின் பண்டிகைக்கு நன்கொடை தர மறுப்பீர்கள்! இதன் நிமித்தமும் நீங்கள் ஏதாகிலும் ஒரு விதத்தில் துன்பம் அடைவீர்கள் என்பதும் நிச்சயம். மேலும், இயேசுவின் சுவிசேஷத்தின் நிமித்தமும் நாம் துன்பம் அடைந்திடக்கூடும்! ஆனால் இயேசுவோ இத்தகைய சமயத்தில்தான் நம்மை "பாக்கியவான்கள்" எனக்கூறி மகிழ்ச்சி அடைகிறார்.
ஜெபம்:
அன்பின் தந்தையே! உமது சத்தியத்தின் நீதியின்படி வாழும் எங்களுக்கு வரும் துன்பங்களை ஏற்றுக் கொள்ளவும், அதுவே பரலோக ராஜ்யத்திற்குள் பிரவேசிக்கும் பாக்கியம் எனவும் உணர்ந்து ஜீவிக்க கிருபை தாரும்! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.
எழுதியவர்:
சகோதரர் சகரியா பூணன்.
"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".
From:-
https://t.me/hisvoicetoday
0 Comments