இன்று "அவருடைய" சத்தம்
ஜூன் 20
🔸️ செயலைவிட நம் அந்தரங்க நோக்கத்தில் தூய்மையாய் வாழக்கடவோம்! 🔸️
பழைய ஏற்பாடு மனுஷருடைய வெளிப்படையான "செயலை" வலியுறுத்துகிறது. ஆனால், புதிய ஏற்பாட்டிலோ ஒரு தீய செயலுக்குள் நம்மை நடத்தும் ஒவ்வொரு அந்தரங்கமான "நோக்கங்களையே" வலியுறுத்திக் கூறுகிறது. இவ்வாறு அந்தரங்க நோக்கங்களுக்கு இயேசு அதிக முக்கியத்துவம் கொடுத்ததற்கு காரணம், கடைசி நாளில் தேவன் நம்முடைய வெளிப்படையான வார்த்தைகளையும், செயலையும் மாத்திரம் அல்ல, நம்முடைய ஒவ்வொரு அந்தரங்க நோக்கங்களையும் நியாயம் தீர்ப்பார் என்பதினிமித்தமே ஆகும்.
பழைய ஏற்பாட்டு தரத்தின்படி தேவன் ஜனங்களை உள்ளான அந்தரங்க ஜீவியத்தின்படி நியாயந்தீர்க்கவில்லை. அது ஏன் என்பதை மத்தேயு 19-ம் அதிகாரத்தில் இயேசு விளக்கிக் கூறினார். இந்த அதிகாரத்தில், பரிசேயர்கள் இயேசுவிடம் வந்து, "தள்ளுதற் சீட்டைக் கொடுத்து மனைவியை தள்ளிவிடலாம் என்று மோசே ஏன் கட்டளையிட்டார்?" எனக் கேட்டார்கள். அதற்கு பதிலளித்த இயேசு, "உங்கள் இருதய கடினத்தின் நிமித்தமே மோசே அவ்வாறு கட்டளையிட்டான்" எனக்கூறினார் (வசனம் 7, 8). அதாவது, பழைய ஏற்பாட்டு ஜனங்கள் பரிசுத்தாவியைப் பெறாதபடியால், அவர்களின் இருதயம் கடினமாய் இருந்தது. இதனிமித்தமே அவர்களின் அந்தரங்க ஜீவியத்தில் உயர்ந்த தரத்தை அவர்களிடமிருந்து தேவன் எதிர்பார்க்கவில்லை! எனவேதான் தாவீது அநேகம் மனைவிகளை வைத்துக்கொள்ள அனுமதிக்கப்பட்ட செயல் தொடங்கி, அநேகக் காரியங்களை தேவன் பழைய உடன்படிக்கையில் அனுமதித்திருந்தார். ஆனால், இப்போதோ தேவன் நமக்கு பரிசுத்தாவியானவரைக் கொடுத்துவிட்டார்!
இப்பரிசுத்த ஆவியானவர் நம்மிடத்திலுள்ள கடினமான இருதயத்தை எடுத்துப்போட்டு இப்போது மென்மையான இருதயத்தை நமக்குள் தருகிறார். இதனிமித்தமே பழைய உடன்படிக்கையின் பரிசுத்தவான்கள் அடைந்த ஜீவிய தரத்தைக் காட்டிலும் உயர்ந்த தரத்தை இப்போது நம்மில் எதிர்பார்க்கிறார்.
இவ்வாறு புதிய உடன்படிக்கையின் உயர்ந்த நீதியின்படி வாழ்பவர்களைச் சுட்டிக்காட்டியே, "பரலோகராஜ்யத்தில் சிறியவனாய் இருக்கிறவன், பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்களைக் காட்டிலும் பெரியவனாய் இருப்பான்" எனக் கூறினார். ஆம், பழைய ஏற்பாட்டில் கடைசியாக வந்த மாபெரும் தீர்க்கதரிசியாகிய யோவான் ஸ்நானகனைக்காட்டிலும் பெரியவனாயிருப்பான் என்றே இயேசு குறிப்பிட்டார் (மத்தேயு 11: 11,12).
ஜெபம்:
அன்பின் பிதாவே! எங்கள் அந்தரங்க வாழ்வில் உயர்ந்த தரத்தை எதிர்நோக்கி, உமது தூய ஆவியை எங்களுக்குள் தந்தமைக்கு நன்றி! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.
எழுதியவர்:
சகோதரர் சகரியா பூணன்.
"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".
From:-
https://t.me/hisvoicetoday



0 Comments