இன்று "அவருடை" சத்தம்
ஜூன் 26
🔸️ ஒருவருக்கொருவர் கசப்பை அனுமதித்துவிடக் கூடாது! 🔸️
நாவைக் குறித்து கவனம் கொள்ளும் புத்திமதிகளை குடும்பத்திலுள்ள கணவனும் மனைவியும் தங்களுக்குரியதாய் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஏனென்றால், கொலோசெயர் 3:19-ல்
"புருஷர்களே, உங்கள் மனைவிகளில் அன்புகூருங்கள், அவர்கள்மேல் கசந்து கொள்ளாதிருங்கள்" என நாம் வாசிக்கிறோம். இந்த வசனம் புருஷர்களாகிய நீங்கள் கசப்பான வார்த்தையைப் பேசுவதை மாத்திரம் குறிப்பிடவில்லை. மாறாக, நீங்கள் உங்கள் இருதயத்திற்குள் கசப்பாய் இருப்பதையே இவ்வசனம் குறிப்பிடுகிறது. நீங்கள் ஒரு வார்த்தையும் பேசாமலே "கசப்பான ஆவி" கொண்டவர்களாய் இருக்க முடியும். இதைத்தான் எபிரேயர் 12:15-ல் "கசப்பான வேர்" என வேதம் குறிப்பிடுகிறது. இக்கசப்பு உங்கள் உதடுகளில் "கனிகளாய்" இன்னமும் தோன்றவில்லைதான்! ஏனெனில், இக்கசப்பு உங்கள் உள்ளத்தில் ஆரம்ப வேராக மாத்திரமே உள்ளது. உங்கள் மனைவி ஏதோ செய்த அல்லது பேசியவைகள் உங்கள் உள்ளத்திற்குள் கசப்பை உண்டுபண்ணி இருக்கக்கூடும். அல்லது "இவள் ஏன் இன்னமும் தன் பெற்றோர்களோடு பிடிப்பு கொண்டவளாய் இருக்கிறாள்" என்ற சிறிய கசப்பான எண்ணம் உங்கள் உள்ளத்தில் தோன்றியிருக்கக்கூடும். இவைகளை நீங்கள் பேசவில்லைதான்! ஏனெனில், உங்கள் வீட்டில் வாக்குவாதமும் சண்டையும் உண்டாகக் கூடாதே என்ற எண்ணம் உங்களுக்குள் இருந்திருக்கலாம். ஆனால், "கசப்பின் வேர்" உங்கள் இருதயத்திற்குள் முளைத்துவிட்டதே!
இந்த வேர் அப்படியே இருந்துவிடும் என்று எண்ணுகிறீர்களா? நீங்கள் விரும்பாவிட்டாலும்கூட இந்த வேருக்கு சாத்தான் தண்ணீர் ஊற்றி அதை வளரச் செய்து விடுவான். இவ்விதமாய் கசப்பின் வேரை செழித்து வளரச் செய்வதற்கு சாத்தான் எப்போதுமே ஆர்வம் கொண்டவனாக இருக்கிறான். கசப்பின் வேரைக் களைவதற்கு நீங்கள் கவனம் கொள்ளாதபடியால், திடீரென்று ஏதோ ஒருநாளில் கசப்பான வார்த்தைகளோ அல்லது செய்கைகளோ உங்களிடமிருந்து வெளிப்பட்டுவிடும். ஆம், குற்றம் சாட்டும் ஆவிக்கும், கசப்பான ஆவிக்கும் எதிராக உங்கள் இருதயத்தை காத்துக் கொள்ள வேண்டும். இவை யாவும் உங்கள் இருதயத்திற்குள் தோன்றி முளைத்திடும்போதே நீங்கள் அதைப் பிடுங்கி எறிந்துவிட வேண்டும்!
ஜெபம்:
பரம தகப்பனே! குடும்பத்தில் ஒருவருக்கொருவர் யாதொரு சூழ்நிலையிலும் "கசப்பான வேர்" தோன்றாமல் எங்களை உமது வல்லமையால் காத்து கொள்ள கிருபை தாரும்! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.
எழுதியவர்:
சகோதரர் சகரியா பூணன்.
"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".
From:-
https://t.me/hisvoicetoday
0 Comments