இன்று "அவருடைய" சத்தம்
ஜூன் 27
🔸️ 'கர்த்தருடைய ஜெபம்' நம் ஜீவியத்தையே மாற்ற வேண்டும்! 🔸️
ஆவிக்குரிய மனிதன், ஒரு ஈவைக்கூட தேவனிடத்திலிருந்து பெறாவிட்டாலும், ஈவுகளை வழங்குகிறவர்மீது கொண்டிருக்கும் அவனின் சினேகமோ சிறிதுகூட குறைந்திடாது!!
நாம் ஆவிக்குரிய மனம் உடையவர்களாக இருக்கிறோமா? இல்லையா? என்பதை கண்டுகொள்வதற்கான பரிசோதனைகளில் கீழ்காணும் கேள்விக்குரிய விடையும் ஒன்றாகும். "தேவன் நம் ஜெபங்களுக்குப் பதில் தருவார் என எதிர்பார்த்திருந்த ஜெபத்திற்கு பதில் தராவிட்டாலும், மனநிறைவோடு இருப்பதுபோதும் என்று திருப்தியாக இருக்கின்றோமா?"
இன்று ஏன் அனேக விசுவாசிகள் தங்கள் ஜெபங்களுக்கு தேவன் பதில் அளிக்காததினிமித்தம் குறை கூறி முறுமுறுக்கிறார்கள்? ஏனென்றால், இவர்கள் அவரின் ஈவுகளை மாத்திரமே விரும்புகிறார்கள். ஈவுகளை வழங்குகிறவர் மீதோ இவர்களுக்கு நாட்டம் இருப்பதில்லை! இப்படிப்பட்டவர்களே கெட்ட குமாரனைப் போல இருக்கிறார்கள். இந்த கெட்ட குமாரன் தன் தகப்பனிடம் இருந்து பெற விரும்பியதை பெற்றவுடன் தகப்பனின் சமூகத்தை விட்டு விலகி உல்லாசமாக இருக்க சென்றுவிட்டான். இவனுக்கு வேண்டியதெல்லாம் தகப்பனின் சொத்துக்கள்தான்! இவன் தகப்பனின் ஈவுகளைத் தின்று தீர்த்த பின்பே மீண்டுமாகத் தகப்பனிடம் வந்தான். அதுவும், ஏதாவது தகப்பனிடம் கிடைக்கும் என்ற எண்ணத்துடனேதான் வந்தான்!! (லூக்கா 15 11-24)
கர்த்தருடைய ஜெபத்தில் 50% தேவனையும் அவரின் மகிமையும் குறித்தே இருப்பதைக் கவனித்தீர்களா? அவர் கற்றுத்தந்த ஜெபத்தின்படி ஜெபிக்க வேண்டும் என தீர்மானித்து, ஒரு சடங்காச்சாரமான முறையில், "ஆண்டவரே, உம்முடைய நாமம் மகிமைப்படுவதையே முதலாவதாக நானும் விரும்புகிறேன்" என்ற ஒரு வாக்கியத்தை ஒரு நிமிடம் ஜெபித்துவிட்டு, அடுத்த ஒரு மணி நேரத்தில் நாம் விரும்புகிற உலகப் பொருட்களின் நீண்ட பட்டியலை அவரிடம் கொடுப்பது முறையாகுமா? எனவே, இங்கு நாம் கூறுவதெல்லாம் ஒரு குறிப்பிட்ட ஜெப வடிவத்தை அல்ல! மாறாக, நம் முழு நோக்கமும் மாற்றப்பட்டு, தேவனும் அவரின் மகிமையுமே பிரதானச் சிந்தையாக நம்மில் இருப்பதற்கு நம் மனம் புதிதாக சீர் பொருந்தப்படவேண்டும். இந்த மாற்றத்தையே கர்த்தருடைய ஜெபம் நம்மில் கொண்டுவர வேண்டும்!
ஜெபம்:
அன்பின் பிதாவே! உம்மையும் உம் மகிமையை தேடுவதுமே எங்கள் ஜெப வாழ்வின் மையமாய் மாறிட அருள் செய்தருளும்! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.
எழுதியவர்:
சகோதரர் சகரியா பூணன்.
"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".
From:-
https://t.me/hisvoicetoday
0 Comments