Header Ads Widget

LightBlog

Ticker

6/recent/ticker-posts

ஜூலை 10

 இன்று "அவருடைய" சத்தம்


ஜூலை 10

 

🔸️ நொறுங்குண்ட ஜீவியம் கொண்டவர்களே தேவனுடைய ஊழியத்துக்குத் தேவை! 🔸️


நொறுங்காத ஒரு மனிதனிடத்தில் "தன்னுடைய ஆவிக்குரிய அதிகாரத்தை" தேவன் ஒருக்காலும் ஒப்புக்கொடுப்பதே இல்லை! அப்படிச் செய்வது, அபாயம் நிறைந்ததாகும்!! ஆம், பரிசுத்தாவியின் வல்லமையை ஒருவன் பெற்றுவிட்டால், அது போதுமானது அல்ல... அவன் நொறுங்கவும் வேண்டும்!! இந்த நொறுங்குதலின் அனுபவம், தேவன் ஏற்பாடு செய்யும் வெவ்வேறு சூழ்நிலைகளில் "தேவன் நம்மை நொறுக்குவதற்கும் நம்மைத் தாழ்த்துவதற்கும்" நாம் மனப்பூர்வமாய் அனுமதிக்கும்போது மாத்திரமே கிடைத்திடும். "கர்த்தரோ அவரை நொறுக்க விருப்பம் கொண்டவராயிருந்தார்" (ஏசாயா 53:10) என்றே இயேசுவைப்பற்றி கூறப்பட்டிருப்பதைக் காண்கிறோம். ஆம், இவ்வாறாக மாத்திரமே, நாம் ஆவிக்குரிய அதிகாரத்தைப் பெற்றுக் கொள்ள முடியும்.


உடைபட்டு நொறுங்காத எந்த ஒரு மனுஷனையும் அல்லது மனுஷியையும் தேவன் ஒருக்காலும் பயன்படுத்துவதே இல்லை!!


தேவன் உங்களுக்கென்று ஒரு திட்டத்தை வைத்திருக்கிறார். அந்தத் திட்டத்தை இவ்வுலகிலுள்ள ஒரு மானிடன்கூட குலைத்துப்போடவே முடியாது.... ஆம், எத்தனை தீவிரமாய் உங்களை கீழே இழுத்துவிட முயன்றாலும் அது முடியாது!! தேவனுடைய திட்டத்தில் ஒவ்வொன்றிற்கும் ஒரு காலமும் நேரமும் உண்டு. ஆகவே, 'ஒருவர்கூட' தேவனுடைய திட்டத்தை உங்கள் ஜீவியத்தில் தடை செய்திடவே முடியாது!! 


ஒரு சகோதரனுடைய சில ஊழிய முறைகள் தவறாக இருந்தபோதும், தேவன் அந்த சகோதரனின் ஊழியத்தில் அபிஷேகத்தை எப்படி தந்தார்? என நீங்கள் சிலசமயங்களில் ஆச்சரியப்பட்டிருக்கக்கூடும். அது ஏனெனில், நீங்கள் நினைத்ததுபோல் "உபதேசத்திற்கு" தேவன் அத்தனை முக்கியத்துவம் தரவில்லை என்ற உண்மைதான்! 


இன்றும்கூட நாம் 'எதை எதையோ' முக்கியம் என எண்ணுகிறோம். ஆனால், அவைகளைத் தேவன் 'முக்கியம்' என எண்ணுவதில்லையே! அதுபோலவே, "முக்கியமில்லை" என நாம் கருதும் அனேக காரியங்கள் தேவனுக்கு "முக்கியம்" உள்ளதாய் இருக்கிறது!! அடிப்படை ரீதியில் "தாழ்மையை" மிக முக்கியமாகவே தேவன் எப்போதும் கருதுகிறார். அதுபோலவே, "பண ஆசையிலிருந்து விடுபடுவதையும்" மிக முக்கியமாக தேவன் கருதுகிறார்.  


இன்றைய விசுவாசிகள், வேதாகம உபதேசங்களில் தாங்கள் சரியாக இருப்பதினிமித்தம் மேன்மை பாராட்டிவிட்டு, மிக முக்கியமான தங்கள் குணாதிசயத்திற்கு உரியவைகளை அசட்டை செய்வதை ஒரு சாதாரண செயலாகவே நாம் எங்கும் காண்கிறோம்.         


 ஜெபம்:

எங்கள் பரம தந்தையே! உபதேசத்தைவிட "நொறுங்குண்ட மனிதனே" உமது ஊழியத்திற்கு தகுதியாய் இருப்பதை அறிந்திட உதவியதற்கு உமக்கு நன்றி! நொறுங்குண்ட ஜீவியம் செய்திட கிருபை தாரும்! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.


 எழுதியவர்:

சகோதரர் சகரியா பூணன்.


"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".


From:-

https://t.me/hisvoicetoday




Post a Comment

0 Comments