இன்று "அவருடைய" சத்தம்
ஜூலை 23
🔸️ ஜீவியம் இல்லாத உபதேசம் கூடாது! 🔸️
எது ஆரோக்கியமான உபதேசம்? நீதிமானாக்கப்படுதலையும் பரிசுத்தமாகுதலையும் இன்னும் பல சத்தியங்களையும் விளங்கிப் பேசுவதை ஆரோக்கியமான உபதேசம் என வேதம் குறிப்பிடவில்லை என தீத்து 2:1-10 வசனங்கள் தெளிவாகவே நமக்கு கூறுகின்றன. அல்லது மனுஷீக பாரம்பரியங்களிலிருந்து நம்மை விடுதலை செய்த உபதேசங்களுக்காக நன்றி உள்ளவர்களாக இருக்கிறோமே, அதுவும்கூட ஆரோக்கியமான உபதேசத்திற்கு போதுமான தகுதி அல்ல! ஆம், நமக்கு இரட்சிப்பை அருளி, இந்த உலகத்தில் நாம் எவ்வாறு ஜீவிக்க வேண்டும்? என போதிக்கும்படியே தேவகிருபையானது நமக்கு வெளிப்பட்டிருக்கிறது என்றே 11,12-ம் வசனங்கள் தொடர்ந்து கூறுகின்றன.
ஆகவே, நாம் பெற்ற உபதேசங்களை நம்முடைய ஜீவியம் அலங்கரித்தால் மாத்திரமே, அந்த உபதேசம் பிறரை கவர்ந்து கொள்ளும்படி இருந்திட முடியும்! ஒரு சரீரத்திற்கு எலும்புகளே ஒரு வடிவத்தையும் உறுதியையும் தருகின்றன என்பது உண்மைதான்... ஆனால், நம்முடைய எலும்பை மூடியிருப்பதற்கு சதைகள் இல்லாவிட்டால், அந்த எலும்புக்கூடு விகாரமாக இருப்பதைப் போலவே, ஒரு தேவ பக்தியான வாழ்க்கை வாழாமல் வெறும் உபதேசங்களை மாத்திரம் பெற்றிருப்பவர்கள், பிறருக்கு விகாரமாகவே இருக்கிறார்கள்!
சிறந்த உபதேசங்களைப் பெறாத ஒருவனைவிட, சிறந்த உபதேசங்களைப் பெற்றவன் "ஒரு சிறந்த வாழ்க்கையை" கொண்டிருப்பான் என நாம் எண்ணக்கூடும்! ஆனால், உபதேசங்களைப் பெறாத மற்றவர்களை நாம் சற்று நேர்மையுள்ள இருதயத்தோடு பார்த்தால், பிற மார்க்கத்தில் உள்ளவர்கள்கூட அதிக அன்புள்ளவர்களாயும், அதிக தயவுள்ளவர்களாயும் இருக்கிறார்கள் என்பதைக் காண முடியும்! இவ்வாறு உபதேசங்களே இல்லாத ஒருவனுடைய சிறந்த நடக்கையை நாம் காணும்போது, அது நம்மை தேவனுக்கு முன்பாக ஒரு தொடர்ச்சியான தாழ்மைக்குள் நடத்தி, நொறுங்குண்டு, நம்மை அதிகமாய் மனந்திரும்பச் செய்ய வேண்டுமல்லவா!?
அதிகமாய் பெற்றவனுக்கு அதிகமான பிரதிபலன் உண்டு என வேதம் கூறாமல்.... அதனிமித்தம் அதிக தண்டனையின் அபாயமே காத்திருக்கிறது என லூக்கா 12:47,48 வசனங்களில் காண்கிறோம். ஏனென்றால், உபதேசங்களை அறிகிற அறிவில் வளர்ந்த நாம், அந்த உபதேசத்திற்கு ஏற்ற ஜீவியம் நமக்கு இல்லை என்றால், நம் சரீரத்திலிருந்து துருத்திக்கொண்டு வெளியே நிற்கும் எலும்புகளைப் போலவே நாம் காணப்படுவோம்!! ஆம், ஜீவிக்கக்கடவோம்!!
ஜெபம்:
எங்கள் பரம பிதாவே! உபதேச பரவசத்தில் நாங்கள் இருந்துவிடாமல், அதன்படி வாழ்ந்து உம்முடைய நாமத்தை மகிமைப்படுத்த எங்களுக்கு உதவியருளும்! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.
எழுதியவர்:
சகோதரர் சகரியா பூணன்.
"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".
From:-
https://t.me/hisvoicetoday
0 Comments