இன்று "அவருடைய" சத்தம்
ஆகஸ்ட் 5
🔸️ நம்மை இளைப்பாறச் செய்திடும் தேவன்! 🔸️
நம் ஆவிக்குரிய நிலைமை நம் சரீர நிலைமையை ஓரளவு சார்ந்திருக்கிறது எனக் கூறிட முடியும். நாம் எலியாவை குறித்து வாசிக்கிறோம். அவன் வானத்திலிருந்து அக்கினியையும் மழையையும் ஜெபித்து இறக்கினான்! இந்நிகழ்ச்சிக்குப் பிறகு, அவன் மிகவும் சோர்வுற்று, தேவன் தன் ஜீவனை எடுத்துக்கொள்ளும்படி ஜெபித்தான். 850 கள்ளத் தீர்க்கதரிசிகளுக்கு முன்பாக மகா தைரியமாய் நின்ற இம்மனுஷன், யேசபேல் என்ற ஒரு ஸ்திரீயின் அச்சுறுத்தலுக்குப் பயந்து ஓடி ஒளிந்ததைப் பாருங்கள்! (1இராஜா. 18, 19). இது எப்படி ஆகும்? சுமார் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக இந்த எலியா தானாகவே புசித்துப் பிழைத்து வந்தான். இந்த அவனுடைய சரீர பெலனெல்லாம் கர்மேல் மலையின்மேல் சம்பவித்த உச்சக்கட்டமான நிகழ்ச்சியோடு முற்றிலும் தொய்ந்து பெலனற்றுப் போனது.
இவ்வாறு சோர்வுற்று சூரைச் செடியின் கீழ் அமர்ந்திருந்த எலியாவிற்கு தேவன் ஒரு பிரசங்கத்தைச் செய்யவே இல்லை! இல்லவே இல்லை!! மாறாக, தேவன் ஒரு தூதனை அனுப்பி, எலியாவுக்குச் சுடச்சுட அடையும், தண்ணீரும் கொடுத்தார். எலியா புசித்தான்; குடித்தான்; உறங்கினான்! அவன் விழித்தெழும்பியவுடன் மீண்டும் அவனுக்கு தேவன் சூடான அடையும் தண்ணீரும் கொடுத்தார்!! (1இராஜா. 19:1-8) .
எலியா பெலனிழந்து தொய்ந்து போனான் என்பதை தேவன் அறிந்திருந்தார். இப்போது அவனுக்குத் தேவையாயிருப்பதெல்லாம் நல்ல போஷாக்கே அல்லாமல்... போதனையல்ல! இதையும் தேவன் அறிந்திருந்தார். இன்று நமக்கும் வேளாவேளைகளில் நீண்ட பிரசங்கமல்ல, வயிற்றுக்கு நல்ல போஜனமும், ஓய்வுமே தேவையாயிருக்கிறது.
இன்று சில கிறிஸ்தவர்கள் தங்கள் சரீரங்களை குறித்து நூதன ஆவிக்குரிய கொள்கை கொண்டிருக்கிறார்கள். இவர்கள் மிகத் தீவிரமாய் "நான் தேவனுக்காக பற்றியெரிய விரும்புகிறேன்" எனக் கூறுவார்கள். இவர்கள் முனைந்து சென்று காலையும், மதியமும் இரவும் தேவனுக்காக 'ஊழியங்கள்' செய்கிறார்கள். இவ்விதம் வாரத்தில் ஏழு நாட்களும்.... ஒவ்வொரு வாரமும் செய்து கொண்டே இருக்கிறார்கள். பின்பு இவர்கள் சோர்வுற்று, தொய்ந்து வீழ்ந்து விடுகிறார்கள்! இப்படிப்பட்டவர்களுடைய கிரியைகள் யாவும் மனுஷீகமான வைராக்கிய கிரியைகளே ஆகும். இவர்களின் சோர்வு, சரீரப் பிரகாரமாக ஏற்பட்டதே அல்லாமல், ஆவிக்குரிய எந்த காரணமும் இல்லை. இப்படிப்பட்டவர்களைப் பார்த்தே ஆண்டவர், "வாருங்கள், ஓரிடத்தில் தனித்து சற்றே இளைப்பாறும்படி போவோம்!" எனக் கூற வேண்டியதாய் உள்ளது!! (மாற்கு 6:31).
ஜெபம்:
அன்புள்ள தந்தையே! களைப்படையும் எங்கள் சரீரத் தேவையை உணர்ந்து எங்களுக்கு உதவி செய்திடும் உமது அன்பை எண்ணி வியக்கிறோம்! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.
எழுதியவர்:
சகோதரர் சகரியா பூணன்.
"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".
From:-
https://t.me/hisvoicetoday



0 Comments