இன்று "அவருடைய" சத்தம்
ஆகஸ்ட் 4
🔸️ நம் சரீர தேவைகள்மீது அக்கறை கொண்ட தேவன்! 🔸️
இன்றைய கிறிஸ்தவ உலகில், சரீரத்தை குறித்த போதகம் இரண்டு எதிர் முனைகளில் போதிக்கப்படுகிறது. ஒரு கூட்டத்தார் துறவற ஒழுக்கத்தைப் போதித்து, "சரீரத்தின் ஒவ்வொரு சுகத்தையும் வெறுத்து, இந்த சரீரத்தை ஒதுக்கிக் கீழ்ப்படுத்தாவிட்டால் பரிசுத்தமாய் இருக்க முடியாது" எனக் கூறுகிறார்கள். ஆனால் சரீரம் மாத்திரமே பாவத்திற்குக் காரணமல்ல என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.
பாருங்கள், சாத்தானுக்கு ஒரு சரீரமில்லை. ஆகிலும் அவன் முழுக்க முழுக்க பாவத்தினால் நிறைந்திருக்கிறான். அதேசமயம் ஆண்டவராகிய இயேசுவோ ஒரு சரீரத்தை உடையவராயிருந்தும், ஒருபோதும் பாவம் செய்யவேயில்லை! இப்பாழும் துறவற ஒழுக்கத்தின் போதகம், "திருமண உறவுகூட" பாவம் என்றே போதிக்கின்றது! ஆனால் மனுஷனுக்குள்ளிருக்கும் காம ஆசையை தேவனே சிருஷ்டித்து அதையும் "நல்லது" என்றே கூறினார் (ஆதி.1:31) என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.
உணவின் மீதுள்ள விருப்பமும், இளைப்பாறியிருக்கும் விருப்பமும், காம விருப்பமும் மனிதனின் சரீரத்திற்கேற்ற விருப்பங்களாகவே தேவன் படைத்து அவைகள் யாவையும் 'நலம்' என்றே கண்டார்.
மேற்கூறிய விருப்பங்களில் ஒன்றைக் குறித்தாகிலும் நாம் வெட்கப்படவேண்டிய அவசியமே இல்லை. நாம் மிகுந்த ஜாக்கிரதையாகயிருக்க வேண்டியதெல்லாம், ஏதாகிலும் இந்த விருப்பங்களில் ஒன்றை, தேவன் விலக்கி வைத்திருக்கும் வழிகளால் நாம் பூர்த்தி செய்யாமல் இருந்திட வேண்டும். அவ்வளவுதான்!!
மேற்கூறிய துறவற - ஒழுக்கப் போதனைக்கு முற்றிலும் மாறுபட்ட இன்னொரு எதிர்முனைப் போதகம் யாதெனில், "நாம் ஐசுவரியவானாய் மாறுவதற்கு தேவன் விரும்புகிறார்" என சில கிறிஸ்தவக் குழுக்கள் போதிக்கும் போதனையே ஆகும். இதன் விளைவாய், சரீரமும் அதன் சுகமும் விக்கிரகத்தைப் போலவே போற்றி வணங்கப்படுகிறது!
ஆனால் ஆண்டவராகிய இயேசுவின் போதகமோ குன்றின் ஒரு முனையில் நின்று போதிக்கும் 'துறவற-ஒழுக்கப்' போதகமுமல்ல!! உலகப் பொருட்களுக்காகவும், சரீரத்திற்காகவும் அதிக முக்கியத்துவம் கொடுத்து மூழ்கியிருக்கச் செய்யும் குன்றின் மறுமுனைப் போதகமுமல்ல!! மாறாக, அவருடைய போதகம் நம்முடைய சரீரத்தின் அத்தியாவசியத் தேவைகளுக்காக அக்கறை கொண்டு 'அதன்மூலம்' நாம் தேவனை முழு இருதயமாக ஆராதிப்பதற்கே வகைசெய்கிறது!!
ஜெபம்:
எங்கள் பரம பிதாவே! எங்கள் ஆவிக்குரிய தேவைகளைப் பூர்த்தி செய்ய விருப்பம் கொண்டதைப்போலவே, எங்கள் சரீர தேவைகளையும் பூர்த்தி செய்ய விரும்பும் உம்முடைய அன்பிற்கு நன்றி! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.
எழுதியவர்:
சகோதரர் சகரியா பூணன்.
"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".
From:-
https://t.me/hisvoicetoday



0 Comments