இன்று "அவருடைய" சத்தம்
ஆகஸ்ட் 10
🔸️ வாழ்வில் "நன்மை உண்டாயிருக்க" அடங்கியிருத்தல் வேண்டும்! 🔸️
இப்பூமியில் தனக்கு அருளப்பட்ட பெற்றோர்களாகிய யோசேப்பும் மரியாளும் எவ்வளவுதான் குறைகள் உள்ளவர்களாய் இருந்தாலும், ஆண்டவராகிய இயேசு நாசரேத்தில் வாழ்ந்த காலங்களில் அவர்களுக்குத் தாழ்மையுடன் அடங்கியிருந்தார். அது ஏனென்றால், அவ்வாறு அடங்கியிருக்கும்படி அவருடைய பரமபிதா விரும்பினார். அவ்வளவுதான்! ஆகவே யோசேப்பும், மரியாளும் குறை உள்ளவர்களாய் இருந்தார்களா என்பது கேள்வி அல்ல! மாறாக, அடங்கியிருக்கும்படி பிதாவானவர் யாரை இயேசுவுக்கு நியமனம் செய்து வைத்திருந்தார் என்பதே முக்கியமான கேள்வியாய் இருக்கிறது!
யோசேப்பும் மரியாளும் தேவனுக்கு பயந்து வாழ்ந்தவர்கள் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. ஆகிலும் அவர்கள் பழைய உடன்படிக்கையின் கீழ் இன்னமும் கிருபைக்கு கீழாக வரவில்லை. ஆகவே, அவர்களுக்குள் பாவத்தின் மீது வெற்றி கொண்ட வாழ்க்கை கிடைத்திருக்காது என்பதை நாம் நிச்சயிக்க முடிகிறது.
இன்றும் புதிய உடன்படிக்கையில் பிரவேசிக்காத தம்பதியர்கள் தங்களுக்குள் சண்டையும், கசப்பும் கொண்டிருப்பதுபோலவே, ஆண்டவராகிய இயேசுவின் பெற்றோரும் இருந்திருக்கக்கூடும்.
அப்படியிருந்தும், பூரணம் நிறைந்த தேவ மைந்தராகிய அவர், பூரணமற்ற அந்த இருவருக்கும் முற்றிலுமாய் அடங்கியிருந்தார்! இவ்வாறு பூரணமற்ற அதிகாரங்களுக்கு அடங்கியிருப்பதே முதல்-மாதிரி அடிச்சுவடுகளாய் இருக்கின்றது.
ஆண்டவராகிய இயேசு சென்ற அதே பாதையில் நாமும் சென்றிட மனதுள்ளவர்களாய் இருந்தால், தேவன் நமக்கு மேலாய் நியமனம் செய்த எந்த அதிகாரத்திற்கும் நாமும் அடங்கி நடக்க ஆர்வம் கொண்டவர்களாக இருக்க வேண்டும்... அந்த அதிகாரங்கள் எவ்வளவு குறையுள்ளதாய் இருந்தாலும், அது ஒரு பொருட்டல்ல! இதுவே பிள்ளைகளாய் இருப்பவர்களுக்குத் தரப்பட்ட முதல் கற்பனையாய் இருக்கிறது! இவ்வாறு அதிகாரங்களுக்கு அடங்கியிருக்கும் பிள்ளைகளுக்கு "நன்மை உண்டாயிருக்கும்" என்றே தேவன் வாக்களித்திருக்கிறார்!
இதிலிருந்து அதிகாரங்களுக்கு அடங்கியிருக்கும் விஷயத்தில் தேவன் அதிகமான முக்கியத்துவத்தை வைத்திருக்கிறார் என்பதை நாம் புரிந்துகொள்ள முடிகிறது. நம்முடைய பிள்ளைகளின் வாழ்வில் "நன்மை நடக்கும்படி விரும்புகிறவர்களாய்" இருந்தால், நம் பிள்ளைகளுக்கு கீழ்ப்படியவும், அடங்கியிருக்கவும் நாம் கற்றுத்தர வேண்டும்!
ஜெபம்:
பரலோகப் பிதாவே! இயேசுவின் மாதிரிப்படியே பிள்ளைகளாகிய நாங்கள் ஆளுகைக்கு அடங்கி நடந்து எங்கள் ஜீவியத்தில் "நன்மை" பெற்று வாழ உதவி செய்தருளும்! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.
எழுதியவர்:
சகோதரர் சகரியா பூணன்.
"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".
From:-
https://t.me/hisvoicetoday



0 Comments