இன்று "அவருடைய" சத்தம்
ஆகஸ்ட் 12
🔸️ ஒரே வீட்டில் ஒருவர் ஏற்றுக்கொள்ளப்பட்டு, ஒருவர் கைவிடப்பட முடியும்! 🔸️
ஒரே வீட்டில், ஒரே வாழ்க்கை சூழ்நிலைகளில், மெய் தேவனைக் குறித்த ஒரே போதனையில் வளர்ந்து வந்த இரு பிள்ளைகள்! அப்படியிருந்தும், இவர்கள் இருவரின் வாழ்க்கையின் முடிவும் ஒருவருக்கொருவர் முற்றிலும் வித்தியாசமான முடிவை அடைந்தது!! கர்த்தராகிய இயேசுவும் தன் மணவாட்டிக்காய் திரும்ப வரும்போது, ஒரே படுக்கையில் இருவர் இருந்தாலும், ஒருவர் எடுத்துக் கொள்ளப்பட்டு, ஒருவர் கைவிடப்படப் முடியும் என்று எச்சரித்தார். ஒரு சபையில் இருவர் ஐக்கியப்பட்டிருந்தாலும், ஒருவர் ஏற்றுக் கொள்ளப்பட்டும், ஒருவர் தள்ளப்படவும் முடியும்!
நாம் மிகவும் நெருங்கிப் பழகும் ஒருவருக்கு சகல காரியமும் நன்றாய் நடந்தேறுகிறது என்பதைக் காணும்போது, நம்முடைய மனோபாவம் எப்படியிருக்கிறது? 'அந்த சகோதரன்' எப்போதும் பாவத்தின்மேல் வெற்றியைக் குறித்தே பிரசங்கிப்பதையும் காண்கிறோம்! மெய்யாகவே அந்த சகோதரனின் வாழ்வில் பதட்டமோ, கோபமோ, பொறுமையின்மையோ ஒரு சிறு தடயம்கூட இல்லாதிருப்பதையும் காண்கிறோம்! அதற்குப் பதிலாக, அவர் வாழ்வில் தொடர்ச்சியான வெற்றியும், சந்தோஷமும் பெருகிக்கொண்டே போவதையும் காண்கிறோம்!!
ஆனால் அந்தோ, இதற்கு நேர் எதிரிடையாக நம் வாழ்க்கையோ துயர் நிறைந்ததாயும், பதட்டத்தின் புகையால் சூழப்பட்டதாயும், இவ்வுலகில் வெற்றி வாழ்க்கை வாழ முடியும் என்பதை நாம் விசுவாசியாததினிமித்தம் தோல்வியின் படுகுழிக்குள் தடுமாறிக் கொண்டிருப்பதையும் காண்கிறோமா?
'இப்போது' நமக்குள் பொறாமையின் வேர் மெதுவாய் தழுவிப் படர்கிறதல்லவா? அந்த சகோதரன் வீழ்ச்சியடைந்தால் மகிழும் பொருட்டு, எங்காவது ஓரிடத்திலாவது அவர் விழமாட்டாரா என்ற ஆர்வம் நம்மைப்பற்றியிருக்கிறதா? எப்படியாவது அந்த சகோதரனை சிலருடைய கண்களுக்கு முன்னால் கீழே இழுத்து தள்ள வேண்டும் என்ற ஆசையால் நிறைந்திருக்கிறோமா? நன்றாய் அறிந்து கொள்வோம்.... இதுவே நம்மை அழிக்க வகைதேடும் துன்மார்க்கத்தின் ஆவி!!
இந்த அருவருப்பான ஆவியை உடையவராய் இருந்துகொண்டே, நம்மை நாமே "நான் கிறிஸ்துவின் சரீரத்தில் அங்கமாயிருக்கிறேன்" எனவும் சொல்லிக் கொள்கிறோம்! நம்முடைய இந்த மனோபாவம் திட்டவட்டமாக கிறிஸ்துவின் ஆவி அல்லவே அல்ல! நாம் சேற்றில் சிக்கி அமிழ்வதை விட, எவ்வளவு சீக்கிரம் இந்த "அருவருப்பின் நாற்றத்தை" நம்மால் உணர முடிகிறதோ, அதுவே நமக்கு நல்லது!
ஜெபம்:
எங்கள் பரலோக பிதாவே! எங்களோடு சேர்ந்து வாழும் சகோதர சகோதரிகளிடம் பொறாமை கொண்டு, கைவிடப்படாதிருக்க கிருபை தாரும்! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.
எழுதியவர்:
சகோதரர் சகரியா பூணன்.
"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".
From:-
https://t.me/hisvoicetoday
0 Comments