இன்று "அவருடைய" சத்தம்
ஆகஸ்ட் 13
🔸️ தேவனுடைய பிரமாணத்தில் பாரபட்சம் இல்லை! 🔸️
மனிதர்கள் மத்தியில் தேவன் ஓரவஞ்சகம் காட்டவேமாட்டார். அவர் பிரமாணமோ என்றென்றும் நிலைத்து நிற்கிறது! தன்னைத் தாழ்த்துகிறவன் "எவனோ" அவன் உயர்த்தப்படுவான்! தன்னை உயர்த்துகிறவன் "எவனோ" அவன் தாழ்த்தப்படுவான்! தன் ஒரே புதல்வனான இயேசுவிடம்கூட தேவன் எந்த "ஸ்பெஷலும்" காட்டவில்லை. இயேசு தம்மைத்தாமே தாழ்த்தினபடியால் மாத்திரமே, தேவன் அவரைத் தன் வலது பாரிசம் மட்டும் மேலாக உயர்த்தினார் என பிலிப்பியர் 2:8,9-ல் நாம் தெளிவாய் வாசிக்கிறோம். அவர் தேவகுமாரன் என்பதற்காக அல்லவே அல்ல... ஒரு மனிதனாக அவர் தன்னைத் தாழ்த்தியபடியால், அப்படியாயிற்று!!
நாம் மனுஷ வர்க்கமாய் எவ்வாறு தேவனுடைய இயற்கை பிரமாணங்களுக்கு கீழ்ப்பட்டிருக்கிறோமோ, அதேபோல இயேசுவும் ஒரு மனிதனாக, அதே பிரமாணங்களுக்குக் கீழ்ப்பட்டு வாழ்ந்தார். எந்த மனிதனையும் தேவன் நடத்துவது போலவே தன் சொந்த குமாரனையும் நடத்தினார்.
இயேசுவுக்கு தேவன் என்ன செய்தாரோ அதையே அவர் நமக்கும் செய்வார்! இயேசு வாழ்ந்ததுபோலவே நம்மை நாமே தாழ்த்தினால், நாமும் நிச்சயமாய் அவரைப்போலவே உயர்த்தப்படுவோம்!! அதில் சந்தேகமேயில்லை.
நாம் நன்மை செய்தால் நம் முகமும் உயர்த்தப்பட்டு, மகிழ்ச்சியினால் ஒளிர்விட்டுப் பிரகாசிக்கும்! தேவன், காயீனிடம் "நீ நன்மை செய்யாதிருந்தால், பாவம் உன் வாசற்படியில் படுத்திருக்கும்" என அறிவித்தார். அவனை பீறியெறியக் காத்திருக்கும் சிங்கத்தைப் போல, பாவம் அவன் அருகில் மிக சமீபமாயிருந்தது. காயீனோ இதை அறியவில்லை. ஆனால், தேவன் உண்மையுள்ளவராயிருந்து, அவனை எச்சரித்தார்! காயீனோ இப்போது 'பொறாமையினாலும்' 'கோபத்தினாலும்' நிறைந்து விட்டான். ஆனால் இதைவிட மோசமான "கொலை வெறியின் ஆவி" காயீனைப் பற்றிக் கொள்ளும்படி வாசற்படியில் தயாராய் காத்திருந்தது. இருப்பினும், காயீனோ பாவத்தை ஜெயித்து ஆள வேண்டும் என்றே தேவன் வாஞ்சித்துக் கேட்டுக்கொண்டார்.
இன்றும், மனிதன் பாவத்தை ஜெயித்து ஆளவேண்டும் என்பதே தேவனின் நிரந்தரமான ஆசை! ஆனால், தன்னை நெருங்கி நின்ற பாவத்தை ஜெயித்து ஆண்டிட காயீன் தவறிவிட்டான்! நாமோ, பாவத்தை தேவ கிருபையால் ஆண்டுகொள்ள கவனம் கொண்டிருக்கக் கடவோம்!
ஜெபம்:
எங்கள் பரம தகப்பனே! உமது பிரமாணங்களில் யாதொரு பாரபட்சமும் இல்லையே... ஆகவே, நாங்கள் தெய்வ பயத்தோடு உமது பிரமாணத்தைப் பற்றிவாழ கிருபை தாரும்; கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.
எழுதியவர்:
சகோதரர் சகரியா பூணன்.
"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".
From:-
https://t.me/hisvoicetoday
0 Comments