இன்று "அவருடைய" சத்தம்
ஆகஸ்ட் 14
🔸️ வரம் அல்ல, ஜீவிய கனிகள் கொண்டவர்களே ஆவிக்குரியவர்கள்! 🔸️
பவுல் கொரிந்தியர்களைக் குறிப்பிட்டு "நான் உங்களை ஆவிக்குரியவர்களென்று எண்ணி உங்களுடனே பேசக்கூடாமல், மாம்சத்துக்குரியவர்கள் என்று எண்ணிப் பேசவேண்டியதாயிற்று" (1கொரிந்தியர் 3:1) என மிகுந்த வருத்தத்துடன் கூறினார். இத்தனை இழிவான ஆவிக்குரிய நிலையில் இருந்தபோதும், அவர்களோ 'வேத அறிவிலும், உபதேச பிரசங்கங்களிலும், ஆவிக்குரிய வரங்களிலும், சம்பூரணம் உள்ளவர்களாக இருந்தார்கள்' என 1கொரிந்தியர் 1:5,7 வசனங்களில் வாசிக்கிறோம். இந்த மூன்று மேன்மையான வரங்கள் அவர்களிடம் இருந்தபோதிலும், அவர்களோ ஆவிக்குரியவர்களாக இல்லை!!
இவ்வாறு வரம்பெற்ற வல்லமையான பிரசங்கியாயிருந்து, வேதாகம அறிவிலும் பண்டிதம் பெற்று, ஆவிக்குரிய அற்புத வரங்களை கிரியை செய்யும் ஒருவர்கூட "ஆவிக்குரிய மனிதராக" இல்லாமல் இருக்கக் கூடும் எனப் பகுத்தறியும் திறன் கொண்டவர்கள், இன்றைய விசுவாசிகளில் வெகு சொற்பமானவர்களே இருக்கிறார்கள்! பவுல் குறிப்பிடுவதுபோல், இத்தனை அற்புத ஊழியங்களைக் கொண்டவர்களும் "முழுக்க முழுக்க மாம்சீகம் கொண்டவர்களாய்" இருந்திட முடியும்!
ஒரு மனிதனை "மெய்யான ஆவிக்குரியவனாய்" மாற்றுபவைகள் எவை என்பதை கீழ்காணும் மூன்று குணாதிசயங்கள் நமக்கு தெளிவுபடுத்துகின்றன. அவன் மேல்நோக்கி காண்பவன்; உள்ளந்திரியங்களைக் காண்பவன், வெளியரங்கமானவைகளையும் காண்பவன்! ஆம், ஒரு ஆவிக்குரிய மனிதன் இந்த "மூன்று திசைகளையும்" இடைவிடாது தொடர்ந்து காண்பவனாகவே இருக்க வேண்டும்!
1) மேல் திசை: தேவனையும் கிறிஸ்துவையும் பற்றிய தியானமும், ஆராதனையும் நிறைந்தவனாக இருப்பான்.
2) உள் திசை: கிறிஸ்துவைப்போல் அல்லாத தன் அந்தரங்க ஜீவியத்திற்காய் இடைவிடாது மனந்திரும்புவான்!
3) வெளி திசை: சுற்றியுள்ள மற்ற ஜனங்களுக்கு எவ்வாறு உதவி செய்யலாம்? அவர்களை எவ்வாறு ஆசீர்வதிக்கலாம்? என்றே தொடர்ச்சியாக நாடுவான்! இதுபோன்ற ஜீவியம் கொண்டவன் நிச்சயமாய் கனிநிறைந்த வாழ்வை கண்டடைவான் என்பதில் சந்தேகமேயில்லை!!
ஜெபம்:
எங்கள் பரம பிதாவே! கனியுள்ள ஜீவியம் இல்லாமல், வரங்களில் நாட்டம் கொண்டு வெளித்தோற்ற வாழ்வில் திருப்தி கண்ட எங்களை மன்னியும்; எங்களையும் ஆவிக்குரியவர்களாய் மாற்றும்! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.
எழுதியவர்:
சகோதரர் சகரியா பூணன்.
"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".
From:-
https://t.me/hisvoicetoday
0 Comments