இன்று "அவருடைய" சத்தம்
ஆகஸ்ட் 17
🔸️ தன் சொந்த பிள்ளைகளின் "தேவையை" பூர்த்தி செய்திடும் தேவன்! 🔸️
பூமிக்குரிய ஒரு தகப்பன் தன்னைச் சுற்றியுள்ள எல்லோருடைய தேவைகளையும் பூர்த்தி செய்வது அவனுடைய கடமை அல்ல. ஆனால் அவன் தன் சொந்த குடும்பத்தின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கோ நிச்சயமாய் கடமைப்பட்டிருக்கிறான். தன் பிள்ளைகளாய் இராத ஆகாயத்துப் பறவைகளுக்குக்கூட தேவன் ஆகாரம் கொடுக்க அவ்வளவு நல்லவராக இருக்கிறார். அவ்வாறிருக்க, தன் சொந்தப் பிள்ளைகளின் தேவைகளைத் தேவன் பூர்த்தி செய்து வழங்குவது எவ்வளவு நிச்சயம்!
ஒரு சமயம், சீரோபேனிக்கியா தேசத்தாளாகிய கிரேக்க ஸ்திரீ ஒருத்தி தன் மகளை ஆண்டவராகிய இயேசு சுகமாக்கும்படி வேண்டிக் கொண்டாள். அப்போது இயேசு அவளை நோக்கி, "முதலாவது பிள்ளைகள் திருப்தி அடையட்டும்" (மாற்கு 7:27) எனக் கூறினார். அதற்கு அவள், "பிள்ளைகள் சிந்துகிற துணிக்கைகளையாவது தனக்குக் கொடுத்தால், அதுவே தனக்குப் போதும்!" என்பதாக பதில் கூறினாள். அவளுடைய பதிலினிமித்தம், உடனே அவருடைய மகள் பூரண சுகம் அடைந்தாள்.
இதைச் சற்று சிந்தித்துப் பாருங்கள்! கீழே விழும் மீதித் துணிக்கைகள், பிசாசின் பிடியிலிருந்தே விடுதலை அளிப்பதற்கு போதுமானதாய் இருந்தது!! அப்படியானால், தேவனுடைய சொந்தப் பிள்ளைகளாகிய நாம் பெறும் ஒரு "முழு அப்பம்" எவ்வளவாய் நன்மைகளை ஈட்டித்தரும்!! இவ்வாறு, "முதலில் பிள்ளைகள் திருப்தியடையட்டும்" என இயேசு கூறிய வார்த்தை நம்மை பரவசமூட்டவில்லையா!! இப்போது நாம் மிகுந்த தைரியத்தோடு "எங்கள் தகப்பனே! எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும்" என ஜெபிக்க முடிகிறதல்லவா!!
நம் ஆடம்பர வசதிகளுக்காக விண்ணப்பம் ஏறெடுக்கும்படி இயேசு ஒருபோதும் போதிக்கவில்லை என்பதை நாம் மனதில் கொள்ளவேண்டும்! நாம், "தகப்பனே, எங்களுக்கு வேண்டிய ஐஸ்கிரீமை இன்று எங்களுக்குத் தாரும்" என்றல்ல, "எங்களுக்கு வேண்டிய (தேவையான) ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும்" என்று ஜெபித்திடவே ஆண்டவராகிய இயேசு கற்றுத் தந்தார். "நம் தேவன் தம்முடைய ஐசுவரியத்தின்படி நம்முடைய குறைவையெல்லாம் (நம் தேவைகள்) கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையிலே நிறைவாக்குவார்" (பிலி. 4:19) என்றுதான் வாக்குத்தத்தத்தைப் பெற்றிருக்கிறோம். அதாவது நாம் விரும்புகிற யாவையும் அல்ல, நமக்குத் தேவையானவைகளையே நாம் பெற்றிடுவோம். நாம் விரும்புவதற்கும், நமக்குத் தேவையாயிருப்பதற்கும் ஆகிய இந்த இரண்டிற்கும் ஏராளமான வித்தியாசம் உண்டு!
ஜெபம்:
எங்கள் பரலோக பிதாவே! நாங்கள் உம்முடைய சொந்தப் பிள்ளைகள்... எங்கள் 'தேவைகளை' நிச்சயமாய் பூர்த்தி செய்திடும் நல்லவராய் இருப்பதற்காக நன்றி; கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.
எழுதியவர்:
சகோதரர் சகரியா பூணன்.
"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".
From:-
https://t.me/hisvoicetoday
0 Comments