இன்று "அவருடைய" சத்தம்
ஆகஸ்ட் 18
🔸️ அனுதினமும் தேவனை சார்ந்து வாழ வேண்டும்! 🔸️
"எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும்" (மத்தேயு 6:11) என்றே நாம் ஜெபிக்க ஆண்டவராகிய இயேசு கற்றுத் தந்தார். இருப்பினும் அநேக நாட்களுக்குத் தேவையான ஆகாரத்தை ஒரே நேரத்தில் மொத்தமாகத் தேவன் கொடுத்திடவும் கூடும்; ஆனால் நம்முடைய விண்ணப்பமோ, ஒரு நாளுக்குரிய நம்முடைய சரீரத் தேவைகளுக்காக மாத்திரமே இருந்திட வேண்டும். நாளை சம்பவிக்கிறவைகளுக்காகக்கூட நாம் கவலைப்படக்கூடாது என இயேசு கூறினார். எதிர் காலத்துக்காக நாம் கவலைப்படக்கூடாது என்றே இந்த நல்ல ஆண்டவர் விரும்புகிறார். ஆகிலும், நாமோ நாள்தோறும் நம் ஆண்டவரை சார்ந்தே சதா ஜீவித்திட வேண்டும். இவ்விதம் அவரைச் சார்ந்து ஜீவிக்கும் பாடத்தை இஸ்ரவேல் ஜனங்களுக்கு வனாந்தரத்தில் மிக அருமையான வழியில் தேவன் கற்றுத் தந்தார்.
வனாந்தரத்தில் அவர்கள் ஒவ்வொரு நாள் காலையும் வெளியே சென்று மன்னாவை சேகரிக்க வேண்டும். அவர்களால் ஒரே சமயத்தில் அநேக நாட்களுக்குரிய மன்னாவை சேகரிக்க முடியவில்லை! ஆம், அவர்கள் நாள்தோறும் தங்கள் ஆண்டவரை சார்ந்தே ஜீவிக்க வேண்டியதாயிருந்தது. இவ்விதமாய் அவர்கள் 40 வருடங்கள் ஜீவித்தார்கள். இவ்வித வாழ்க்கை ஒரு கஷ்டமான வாழ்க்கையா? இல்லை, நிச்சயமாக இல்லை! இவ்வித வாழ்க்கை அவர்களுக்கு மிகுந்த "பரவசத்தையே" கொடுத்தது!!
ஒரே நேரத்தில் நமக்கு தேவன் அதிகமாய் கொடுத்துவிட்டால், நம் இருதயம் அவரைவிட்டுத் தூரமாக விலகிச் சென்றுவிட முடியும். எனவேதான், சரீரப்பிரகாரமான நம் தேவைகள் "அவ்வப்போது உருவாகும்படி" தேவன் நம் ஜீவியத்தில் சூழ்நிலைகளை கட்டளையிடுகிறார். இப்பூமியில் ஆவிக்குரியவைகளைவிட, சரீரத்திற்குரியவைகளே நம்மை அதிகமாய் தொட்டுக் கொண்டிருக்கிறது! எனவேதான், இவ்விதமாய் தேவைகள் நம் வாழ்க்கையில் தோன்றும்படி தேவன் அனுமதிப்பது மூலமாய், நாம் அவரை மறுபடியும் மறுபடியும் சார்ந்திருக்கும்படி செய்கிறார்!
மேலும் "ஒருவன் வேலை செய்ய மனதில்லாதிருந்தால், அவன் சாப்பிடவும் கூடாது" (2தெச. 3:10) எனவும் வேதம் தெளிவாகக் கூறுகிறது. 'நம்முடைய பரம தகப்பனே ஆகாயத்துப் பறவைகளை போஷிக்கிறார்' என ஆண்டவராகிய இயேசு கூறினார். ஆனால் அவர் நேரடியாக பறவைகள் வாய்க்குள் ஆகாரத்தை போடுவதில்லை. இப்பறவைகள் வெளியேறிச் சென்றுதான் தங்கள் இறையைத் தேடவேண்டும். இவைகளைப் போலவே நாமும் கடினமாக உழைக்கவும்.... அதேசமயம், அவரை நம்பியிருக்கவும் தேவன் எதிர்பார்க்கிறார். ஆம், விசுவாசத்தை கடின உழைப்பிற்கு ஒரு மாற்றாக நாம் ஒருபோதும் எண்ணிவிடக்கூடாது!
ஜெபம்:
எங்கள் பரம தந்தையே! எங்கள் இருதயம் உம்மை நாள்தோறும் சார்ந்து வாழ்வதிலிருந்து விலகாதிருக்க கிருபை அருளும்; கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.
எழுதியவர்:
சகோதரர் சகரியா பூணன்.
"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".
From:-
https://t.me/hisvoicetoday
0 Comments