இன்று "அவருடைய" சத்தம்
ஆகஸ்ட் 19
🔸️ கிறிஸ்தவ ஜீவியம், சுயநலமில்லாத ஜீவியம்! 🔸️
தன் ஜீவியத்தில் தேவனை முதன்மையாக வைப்பவன், தன்னை 'இரண்டாவதாக' வைத்துக்கொள்ள முடியாததை சீக்கிரத்தில் கண்டுகொள்வான். நாம் பிதாவின் சாப்பாட்டு மேஜையைச் சுற்றி பந்தியிருக்கும் ஒரே குடும்பத்தின் அங்கத்தினர்களாவோம். தன்னோடு அமர்ந்திருக்கும் மற்றவர்களுக்கும் சாப்பிடப் போதுமானது இருக்கிறதா என்பதில் அக்கறை கொள்ளாமல், தானே எல்லாப் பண்டங்களையும் வாரிப் புசித்திடும் சுயநலமான பிள்ளைகளை பிதா ஒருபோதும் விரும்புவதில்லை!! இவ்வித சுபாவத்தை மனந்திரும்பாத மனிதர்கள்கூட கெட்ட சுபாவம் என்றுதான் கூறுவார்கள். அப்படியானால், இந்த தீய சுபாவத்தை ஒரு கிறிஸ்தவன் கொண்டிருந்தால்.... அது எவ்வளவு கொடுமை!
நியாயத்தீர்ப்பின் நாளைக் குறித்து ஆண்டவராகிய இயேசு கூறிய வசனங்களை சற்று எண்ணிப் பாருங்கள். அவர் ஜனங்களை நியாயம் தீர்க்கும்படி தனது சிங்காசனத்தில் வீற்றிருக்கும்போது தன்னைச் சுற்றியுள்ளவர்களைப் பார்த்து, "பசியாயிருந்தேன், நீங்கள் எனக்கு போஜனம் கொடுக்கவில்லை; வஸ்திரம் இல்லாமல் இருந்தேன், நீங்கள் எனக்கு வஸ்திரம் கொடுக்கவில்லை; வியாதி உள்ளவனாய் இருந்தேன், நீங்கள் என்னை விசாரிக்க வரவில்லை" எனக் கூறினார். அதற்கு அவர்கள், "ஆண்டவரே இதெல்லாம் எப்போது சம்பவித்தது? உம்மைப் பசியுள்ளவராகவும், வஸ்திரம் இல்லாதவராகவும் நாங்கள் ஒருபோதும் காணவில்லையே" என பதிலுரைத்தார்கள். அதற்கு ஆண்டவர் பிரதியுத்தரமாக, "நான் மறுபடியும் பிறந்த கிறிஸ்தவர்கள் மத்தியில் வாழ்ந்தேன்! என்னுடைய சகோதரரில் ஒருவன் குறைச்சல் இருப்பதை நீங்கள் கண்டபோது, அவ்விதம் குறைச்சலில் இருந்தது நான்தான் என்பதை உங்களால் கண்டுகொள்ள முடியவில்லை! நான்தான் பசியோடும், தாகத்தோடும் என் சகோதரர் மத்தியில் இருந்தேன் என்பதையும் நீங்கள் அறியவில்லை!!" என்றும் பதிலுரைத்தார் (மத்.25:31-46 விரிவாக்க வசனங்கள்).
இதுவே, பரலோகத்திற்கும் பாதாளத்திற்கும் இடையில் காணப்படும் முக்கியமான அடிப்படை வித்தியாசங்களில் ஒன்றாகும். பாதாளம், பாவத்தாலும்... சுயம்-மையம் கொண்ட வாழ்வாலும் நிறைந்திருக்கிறது. பாதாளத்தில் வாழும் ஒவ்வொரு மனுஷனும் தனக்காகவே ஜீவிப்பவனாவான். இவன், தேவனுக்கோ
அல்லது மற்றவர்களுக்கோ இடம் தரமாட்டான். ஆனால், பரலோகத்தின் ஜீவியமோ இதற்கு முற்றிலும் நேர்மாறானதாகும். அங்கே தேவனே முதன்மை பெற்றிருப்பார்!! இரண்டாவது இடத்தையோ, மற்றவர்களே பெற்றிருப்பார்கள்!!
ஜெபம்:
எங்கள் பரம தகப்பனே! உமக்கு முதலிடம் கொடுத்து வாழ்ந்த எங்களை, இரண்டாவதாக 'எங்களை' வைத்து வாழாமல் 'பிறருக்காக' கரிசனை கொண்டு வாழ கிருபை செய்தருளும்; கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.
எழுதியவர்:
சகோதரர் சகரியா பூணன்.
"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".
From:-
https://t.me/hisvoicetoday
0 Comments