இன்று "அவருடைய" சத்தம்
ஆகஸ்ட் 21
🔸️ கவலை அகற்றும் பிதாவின் அன்பு! 🔸️
ஒரு அடைக்கலான் குருவி மரித்து தரையில் விழுவதையும் அவர் காணத் தவறுவதில்லை... நம் தலையின் ஒரு முடி விழுவதையும் அவர் காணத் தவறுவதில்லை! தன் சொந்தக் குமாரனையே நமக்காக ஒப்புவித்தவர், அவரோடேகூட மற்ற "எல்லாவற்றையும்" நமக்குத் தருவார்! (ரோமர் 8:32). நமக்கு "இல்லை" என சொல்லிவிட்டு எதையும் அவர் வைத்துக் கொள்ளமாட்டார். ஆம், "சகலமும் நம்முடையவைகளே" (1கொரிந்தியர் 3:22).
நம்மால் தாங்கிக்கொள்ள முடியாத ஒரு சோதனைகூட நம்மீது விழாது... ஒருக்காலும் விழாது! அதற்கு தேவனே உத்திரவாதம் அளித்திருக்கிறார் (1 கொரிந்தியர் 10:13). இந்த உத்திரவாதம் சில ஆண்டுகளுக்கு உரியதல்ல.... நம் ஆயுள் காலத்திற்கும் உத்திரவாதம் கொண்டதாகும்! நம்மீது அவர் கொண்ட நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு 'ஒரு யூதாஸ்காரியோத்தும்' நம் அன்பின் பிதாவின் கையில் ஓர் ஆயுதமாகவே பயன்படுத்தப்படுகிறான்!!
ஆகவே, எதிர்ப்பான சூழ்நிலைகள் நம் ஜீவிய பாதையில் குறுக்கிடும்போது, அன்று கெத்சமனேயில் பட்டயத்தை உருவிய பேதுருவைப்போல் நாம் பட்டயம் எடுக்கத் தேவையில்லை! அதற்கு மாறாக, ஒரு மெய்யான ராஜாவைப்போல் இயேசு நடந்து கொண்டது போலவே, நாமும் கண்ணியமாய் நடந்து 'எது சம்பவித்தாலும்' அதற்கு நம்மை ஒப்புக்கொடுத்திட முடியும்! பிலாத்துவிற்கு முன்பாய் நின்ற இயேசு "பரத்திலிருந்து உமக்கு கொடுக்கப்படாதிருந்தால், என்மேல் உமக்கு ஒரு அதிகாரமுமிராது" என்றார் (யோவான் 19:11). இன்று நாமும்கூட நம்மைச் சுற்றியுள்ள உலகத்தையும் அதன் சகல குடியிருப்புகளையும் சுற்றிப்பார்த்து, "இயேசு கூறிய அதே வாக்கியங்களை" கூறிட முடியும்!!
வாழ்வின் "ஒவ்வொரு" நிகழ்ச்சிகளையும் நம்முடைய நன்மைக்கு ஏதுவாகவே தேவன் திட்டம் வகுக்கிறார். ஆகவேதான், இயேசுவின் மெய் சீஷனின் வாழ்க்கையில் கவலைக்கோ அல்லது பயத்திற்கோ சிறிதும் இடம் இருப்பதில்லை! கவலையும் பயமும் பாவங்களே ஆகும்...ஏன் தெரியுமா? அவைகள் ஓர் அவிசுவாசம் கொண்ட பொல்லாத இருதயத்திலிருந்து உருவாகி வெளிவருபவைகளாகும்!! நாம் விசுவாசிப்பதாகக் கூறியும், கவலையும் பயமும் நம்மோடு வைத்திருப்பவர்களாயிருந்தால், நம்மை நாமே வஞ்சிப்பவர்களாய் இருப்போம். சத்தியம் நமக்குள் இராது! இந்த அவிசுவாசத்தினிமித்தம் இயேசு பல தடவை தன் சீடர்களைக் கடிந்திருக்கிறார்.... ஏனெனில், இந்த அவிசுவாசமே அவர்களில் கவலையையும் பயத்தையும் உருவாக்கியதை அவர் கண்டார்!
ஜெபம்:
எங்கள் பரலோகப் பிதாவே! உம்முடைய பூரண அன்பின் பாதுகாப்பில் நாங்கள் இருக்கிறபடியால், யாதொரு சம்பவமும் எங்கள் வாழ்வை கவலையில் ஆழ்த்தாதிருக்க கிருபை தாரும்; கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.
எழுதியவர்:
சகோதரர் சகரியா பூணன்.
"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".
From:-
https://t.me/hisvoicetoday
0 Comments