இன்று "அவருடைய" சத்தம்
ஆகஸ்ட் 24
🔸️ கர்த்தராகிய இயேசுவின் சீடர்கள் தாழ்மையுள்ள வேலைக்காரர்கள்! 🔸️
எலியா தன் கைகளைக் கழுவிக்கொள்ளும்படி தண்ணீர் வார்த்ததை மாத்திரம்தான் எலிசா செய்தாரா? (2 இராஜா 3:11). இதே எலிசா "யோர்தான் நதியை இரண்டாகப் பிளந்தான்!"... "எரிகோவின் தண்ணீரினால் ஏற்பட்ட கொள்ளை நோயைத் தடுத்து நிறுத்தினான்!".... இதுபோன்ற செயல்கள் யாவும் குறிப்பிடத்தக்க அபூர்வ செயல்கள் அல்லவா? ஆனாலும் அவனோ, "ஒரு வேலைக்காரனாகவே" இங்கு அறிமுகப்படுத்தப்பட்டான்!!
தனக்கு தரப்பட்ட "வேலைக்காரன்" என்ற பட்டத்தைக் குறித்து எலிசா எந்த சலனமும் அற்றவனாகவே காணப்பட்டான். அவனுடைய ஊழியத்தில் "எலியாவின் வேலைக்காரன்" என்பதையே ஜனங்கள் வெளிப்படையாகக் கண்டிருந்தபடியால், "அவன் ஒரு வேலைக்காரன்!" என்ற எண்ணம் ஜனங்கள் மனதில் அவ்வளவாய் பதிந்துவிட்டது!! ஆகவேதான், ராஜாவின் வேலைக்காரன்கூட எலிசாவை "தண்ணீர் வார்ப்பவன்!" என குறிப்பிட்டான்.
இன்று நாமும்கூட "பிறருக்கு வேலைக்காரர்களாய்" இருப்பதற்கே அழைக்கப்பட்டிருக்கிறோம். நம் குருநாதர் இயேசுவேகூட "தன் சீடர்களின் கால்களைக் கழுவ தண்ணீர் வார்த்தவராகவே" காணப்பட்டார். இதை இயேசுவையே குறிப்பிட்டுக் கூறும்போது, "நான் ஊழியங்கொள்ளும்படி வராமல், ஊழியஞ்செய்யும்படிக்கே வந்தேன்!" என கூறினார் (மத்தேயு 20:28). இந்த பூமியில் "ஒரு தலைமை ஸ்தானத்தை" விரும்பியவர்களைப் பார்த்து, "என்னுடைய ராஜ்ஜியமோ, இந்த பூமியிலுள்ள ராஜ்ஜியங்களின் மனோபாவத்திற்கு முற்றிலும் மாறுபட்டது" என்றே இயேசு கூறினார்.
ஆகவே கர்த்தருடைய ஒவ்வொரு ஊழியக்காரனும் எல்லா மனிதர்களுக்கும் ஒரு வேலைக்காரனாகவே இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாத பட்சத்தில், "தேவனுடைய ஊழியக்காரன்" என்ற கனத்தை அவன் நிச்சயமாய் இழந்துபோவான்!! ஒரு வேலைக்காரனுடைய சுபாவத்திற்கு முரணாக உள்ள இரண்டு காரியங்களை நாம் அறிந்திருக்க வேண்டும்:
1) எல்லோராலும் அறியப்பட்டு புகழடைய விரும்பும் நோக்கம்.
2) மற்றவர்களை ஆளுகை செய்திடும் "தலைவா"வின் மனப்பான்மை (A Bossy Attitude).
ஆனால், நம் ஆண்டவர் இயேசுவிடமோ "இந்த இரண்டு" மனப்பான்மைகளுக்கும் முற்றிலும் எதிரிடையான மனப்பான்மை இருந்ததையே நாம் காண்கிறோம். ஆம், 1)அவர் தம்மைத்தாமே வெறுமையாக்கினார்; 2)ஓர் அடிமையின் ரூபமெடுத்தார் (பிலிப்பியர் 2:7).
இந்த இரண்டு திவ்ய குணாதிசயங்களை நாம் யாவருமே உற்று நோக்குவது நலம்!!
ஜெபம்:
எங்கள் பரலோக தகப்பனே! எங்கள் குரு இயேசுவின் அடிச்சுவட்டில், அவரைப்போலவே தாழ்மையான வேலைக்காரனாய் வாழ்ந்திட கிருபை செய்தருளும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.
எழுதியவர்:
சகோதரர் சகரியா பூணன்.
"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".
From:-
https://t.me/hisvoicetoday
0 Comments