இன்று "அவருடைய" சத்தம்
செப்டம்பர் 5
🔸️ பிறரிடம் மன்னிப்பு கேட்கும் தாழ்மை வேண்டும்! 🔸️
நாம் ஏன் ஒரு பரிசுத்தமுள்ள தேவனுக்கு முன்பாகப் பாவங்களை அறிக்கை செய்வதை எளிதாகவும், ஒரு பரிசுத்தமற்ற சகோதரனிடம் பாவங்களை அறிக்கை செய்வதை கஷ்டமாகவும் எடுத்துக்கொள்கிறோம்? (மத்தேயு 5:24). இது எப்படி சாத்தியமாகும்? அதற்கு ஒரே காரணம் யாதெனில், நம் அறைக்குச் சென்று தேவனிடம் அறிக்கை செய்வதாக எண்ணிக் கொள்கிற நாம், உண்மையில் அவைகளை "நமக்கு நாமேதான்" அறிக்கை செய்து கொள்கிறோம்! நாம் தேவனிடம் அறிக்கை செய்யவேயில்லை!! அதாவது, நம்மை நாமே ஏமாற்றிக் கொண்டோம், அவ்வளவுதான்! நீங்கள் உண்மையாகவே தேவனுக்கு முன்பாக உங்களைத் தாழ்த்தி இருக்கிறீர்களா என்பதற்கான பரீட்சை, நீங்கள் தீங்கிழைத்த மனிதரிடமும் சென்று மன்னிப்பு கேட்க விரும்பியிருக்கிறீர்களா என்பதிலேயே அடங்கியுள்ளது!!
இந்திய கலாச்சாரத்தில் மனைவிகள் மாத்திரமே தங்கள் புருஷர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். புருஷர்களோ தங்கள் மனைவிகளிடத்தில் மன்னிப்பு கேட்க வேண்டியதில்லை என்ற தீமையே குடிகொண்டுள்ளது. ஏதோ, "ஆண் புருஷர்கள்" வானத்திலிருந்து குதித்தவர்கள் போல தோற்றத்தை உண்டாக்கிவிட்டார்கள்!
நான் மன்னிப்பு கேட்க வேண்டுமென்றால், அங்கே உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற பேச்சுக்கே இடமில்லை! நீங்கள் உங்கள் அலுவலகத்தில் டைரக்டராகக்கூட இருக்கலாம். டைரக்டராகிய நீங்கள் உங்கள் அலுவலகத்தின் பியூனுக்குத் தீங்கு இழைத்திருப்பீர்கள் என்றால், உங்களைத் தாழ்த்தி, அந்தப் பியூனிடம் சென்று, "நான் வருந்துகிறேன்; இது என்னுடைய தவறுதான்; என்னை மன்னித்துக் கொள்ளுங்கள்" என்று கூறத்தான் வேண்டும். இதற்கு குறைவானது எதுவும் உண்மைக் கிறிஸ்தவமாகாது!
இன்று அநேக சபைகளில் ஒருவருக்கொருவர் உள்ள உறவுகளில் 'விரிசல்' கொண்டிருக்கும் ஜனங்கள், தங்கள் பிரச்சனைகளை சுமுகமாகத் தீர்த்துக் கொள்வதற்கு ஒருவரையொருவர் அணுகுவதே இல்லை! இன்னொருவர் மீது கசப்பை வைத்துக்கொண்டு, அவர்களைச் சந்தித்து சரிசெய்திட இவர்கள் ஒருபோதும் செல்லமாட்டார்கள்!! இருப்பினும் இப்படிப்பட்டவர்கள் தங்களைக் கிறிஸ்தவர்கள் என வாய் கூசாமல் சொல்லிக் கொள்ளுகிறார்கள்! ஆம், இவர்கள் கிறிஸ்தவர்கள் அல்லவே அல்ல. இவ்வித ஜனங்கள், நாங்களும் தேவனுடைய ராஜ்ஜியத்தில் வீற்றிருப்போம் எனக் கூறுவார்கள் என்றால், அது எந்த வஞ்சகத்திலும் கேடான வஞ்சகமாகும்!! நாமோ, மன்னிப்பு கேட்க தாழ்மைப்படக் கடவோம்!
ஜெபம்:
எங்கள் பரம தந்தையே! மானிடர் யாராயிருந்தாலும், எங்களைத் தாழ்த்தி அவர்களிடம் உடனுக்குடன் ஒப்புரவாகிடும் ஜீவியம் வாழ கிருபை தாரும்! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.
எழுதியவர்:
சகோதரர் சகரியா பூணன்.
"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".
From:-
https://t.me/hisvoicetoday
0 Comments