இன்று "அவருடைய" சத்தம்
செப்டம்பர் 21
🔸️ நம் வீழ்ச்சியிலும் நம்மை நேசிக்கும் தகப்பன்! 🔸️
ஆண்டவர் நம்மைப் பார்த்து "என் மகனே, என் மகளே, நீ ஒருபோதும் வீழ்ச்சியடையவே கூடாது என்றே நான் உனக்காக ஜெபிக்கிறேன்" எனக் கூறும்படியே நாம் விரும்புகிறோம். ஆனால், இதுபோன்ற ஜெபத்தை ஆண்டவர் நமக்காக ஜெபிப்பதில்லை என அறிவது நமக்கு மிகுந்த ஆச்சரியத்தையே தருகிறது!!
அப்படியானால், இயேசு சீமோனுக்காக என்னதான் ஜெபித்தார்? பேதுரு, சோதனையில் வீழ்ச்சியடையக்கூடாது என்பதற்காக ஜெபிக்காமல், அவன் வீழ்ச்சி அடைந்தவுடன், தேவனுடைய சம்பூர்ண அன்பில் அவன் கொண்ட விசுவாசம் அவனைவிட்டு ஒழிந்து போகக்கூடாது என்பதற்காகவே ஜெபித்தார்! (லூக்கா 22:31,32). அதாவது, பேதுரு வீழ்ச்சியின் படுகுழியில் விழுந்தாலும், "தேவன் என்னை இன்னமும் அன்புகூருகிறார்!" என பேதுரு அறிக்கை செய்வதே அதன் பொருளாகும்.
இதுதான் விசுவாசம்! ஆம், இந்த அறிக்கையைத்தான் நாம் எப்போதும் நம் உதடுகளிலும், நம் இருதயத்திலும் கொண்டிருக்க வேண்டும்!! எத்தனை ஆழத்தில் அமிழ்ந்து, எவ்வளவு பெரிய படுகுழியில் வீழ்ந்தாலும் "நாம் இருக்கும் வண்ணமாகவே, தேவன் நம்மை தொடர்ந்து நேசிக்கிறார்!" என்பதே அந்த அறிக்கையின் முழக்கமாகும்!!
இந்த அறிக்கையைத்தான் கெட்ட குமாரன் கொண்டிருந்தான். அவன் வீழிச்சி அடைந்தபோதும், தன் தகப்பன் இன்னமும் தன்னைத் தொடர்ந்து நேசித்துக் கொண்டுதான் இருக்கிறார் என்பதை அவன் தன் இருதயத்தில் ஆழமாக விசுவாசித்திருந்தான். வீழ்ச்சியின் அகோரத்தில் "பன்றியின் உணவை" தின்னும் அளவிற்கு நம்மில் ஒருவரும் அத்தனை மோசமான வீழ்ச்சியை அடைந்திருக்கவேமாட்டோம். ஆனால், அவனோ வீழ்ச்சியின் படுபாதாளத்தை அடைந்தபோதும் "என் தகப்பன் இன்னமும் என்னை நேசிக்கிறார்!" என்பதை மனதார நினைவுகூர்ந்தான். ஒருவேளை, அவனுடைய தகப்பன் இறந்துவிட்டதாகவும்.... இப்போது வீட்டைத் தன் மூத்த சகோதரனே நடத்திக் கொண்டிருப்பதாகவும் இவன் கேள்விப்பட்டிருந்தால், அவன் வீட்டிற்குத் திரும்ப வந்திருப்பான் என நீங்கள் நினைக்கிறீர்களா? நிச்சயமாய் அவன் திரும்ப வரவேமாட்டான்! ஏனென்றால், தன் மூத்த சகோதரன் எப்படிப்பட்டவன் என்பதை அவன் நன்கு அறிந்து வைத்திருந்தான்!! ஆகவே, அவன் ஒருக்காலும் வீட்டிற்குத் திரும்ப வந்திருக்க மாட்டான். ஆனால், தன்னை நேசிக்கும் தகப்பன் அங்கிருப்பதை அவன் அறிந்தபடியினால்தான் அவன் திரும்ப வந்தான்!!
ஜெபம்:
அன்பின் பிதாவே! எங்கள் வீழ்ச்சியில் நாங்கள் ஒருபோதும் சோர்வடையாது இருக்கவும், திரும்பவும் எங்களை ஏற்றுக் கொள்ளும் அன்பின் தகப்பனாகிய நீர் உண்டென்றும் விசுவாசித்திட கிருபை தாரும்! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.
எழுதியவர்:
சகோதரர் சகரியா பூணன்.
"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".
From:-
https://t.me/hisvoicetoday



0 Comments