இன்று "அவருடைய" சத்தம்
அக்டோபர் 18
🔸️ ஜீவனுக்குள் பிரவேசிக்கும் 'சிலரில்' நாம் இருக்க வேண்டும்! 🔸️
ஒரே ஒரு தடவைகூட பாவம் செய்வதைக்காட்டிலும், ஒரு சிறிய "சந்தர்ப்பவசமாக" தேவனுக்கு கீழ்ப்படியாமல் இருப்பதைக்காட்டிலும், தங்கள் கண்களை பிடுங்கி எறிவதற்கும், தங்கள் கையை வெட்டி எறிவதற்கும் ஆயத்தமாய் தீர்மானித்து நிற்பவர்கள் பாக்கியவான்கள்! இவர்களே ஆண்டவராகிய இயேசுவின் உண்மை சீஷர்கள்!! (மத்தேயு 5:29, 30). இவ்வித உறுதியான தீர்மானத்தோடு, எந்த விலைக்கிரயமானாலும் சிறிதும் தயங்காமல் கீழ்ப்படிந்து, சுயத்திற்கு மரிக்கும் இடுக்கமான வழியாய் நடக்கத் தீவிரிக்கும் ஜனங்களையே தேவன் இப்பாரெங்கும் ஏங்கித் தேடுகிறார். இவ்வழியாய் நடக்க ஆர்வம் கொண்டவர்களோ மிகமிகச் சிலர்! இயேசுவும் இப்படித்தான் தீர்க்கதரிசனம் உரைத்தார்: "ஜீவனுக்குப் போகிற நெருக்கமான வழியைக் கண்டுபிடிக்கிறவர்கள் சிலரே" (மத்தேயு 7:14) என்றார்.
இப்போது கேளுங்கள்:
"உள்ளிருந்து பேசும் ஆவியானவரின் சத்தத்திற்கு" எக்கிரயமானாலும் செலுத்திக் கீழ்ப்படியத் துணிந்தவர்களும் மிகச் சிலரே!
தேவனை தங்கள் முழு மனதோடும் உண்மையாய் நேசிப்பவர்களும் மிகச் சிலரே!
உலக ஆதாயத்தையும், கனத்தையும், அதன் இன்பத்தையும் உதறித்தள்ளி, தங்கள் ஆண்டவரின் அடிச்சுவட்டைப் பின்பற்றுவதற்கு அவைகளை வெறுத்து விட்டதினிமித்தம், அதை மிகுந்த சந்தோஷமாய் எண்ணிக் கொள்பவர்களும் மிகச் சிலரே!
தேவனுடைய பார்வைக்கு முன்பாக மாத்திரமே ஜீவித்து, மனுஷர் தங்கள் ஜீவியத்தை அங்கீகரித்தாலும் அல்லது அங்கீகரிக்காமல் போனாலும், அது தங்களுக்கு எந்த வித்தியாசமும் ஏற்படுத்தாது என அறைகூவி ஜீவிப்பவர்களும் மிகச் சிலரே!
நீதியும், சமாதானமும், பரிசுத்த ஆவியினால் உண்டாகும் சந்தோஷமுமாகிய தேவனுடைய இராஜ்ஜியத்தையே எக்கிரயமானாலும், முதன்மையாய்த் தேடுபவர்களும் மிகச் சிலரே!
இந்த ஆசீர்வதிக்கப்பட்ட "சிலரில் ஒருவராய்" இருந்திடவே நம் உள்ளம் நாடுவதாக!!
ஜெபம்:
பரலோக தந்தையே! கேட்டின் விசால வழியிலிருந்து 'ஜீவனின்' இடுக்கமான வழிக்குள் வந்தோம்; அந்த 'சிலரில்' நாங்களும் ஒருவராய் நிலைத்திருக்க கிருபை தாரும்! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.
எழுதியவர்:
சகோதரர் சகரியா பூணன்.
"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".
From:-
https://t.me/hisvoicetoday
0 Comments