"இன்று அவருடைய சத்தம்"
நவம்பர் 1
🔸️ தெய்வீக அன்பு மாத்திரமே ஒருக்காலும் அழிவதில்லை! 🔸️
நம்முடைய இருதயத்திற்குள் உருவான ஒரு சிறிய அன்பற்ற தன்மைகூட கலர் சாயத்தின் கறை மெதுவாய் இறங்குவதுபோல் படர்ந்து, முடிவில் ஓர் எதிர்பாராத பெலஹீனமான நிகழ்ச்சியின் தருணத்தில் குறிப்பிட்ட அந்த ஆத்துமாவைத் தாக்கிவிடும்! இச்சேதம் கிறிஸ்துவின் சரீரத்திற்கு ஏற்பட்ட பெருத்த சேதமாய்... அச்சேதம் சீர்படுத்த முடியாததாய்கூட மாறிவிடக்கூடும்!!
அன்பின் பாதையில் நடந்து செல்வதென்பது ஒருபோதும் ஓர் எளிய வழியே அல்ல! நாம் இவ்வழி செல்ல மனப்பூர்வமாய் தீர்மானித்தவர்களாய் இருந்தால், பாடுபடுவதற்கும் ஆயத்தமாய் இருக்கவேண்டும். ஏனெனில், நமக்கு முன்சென்ற நம்முடைய குருவாகிய கிறிஸ்துவும் இப்படித்தான் இவ்வழியாகக் கடந்து சென்றார். நம்மைச் சூழ்ந்து கொள்ளும் சில சூழ்நிலைகள்தான் எத்தனையாய் நம் மனுஷீக அன்பெல்லாம் மாயமாய் மறைந்துபோகச் செய்கின்றன!
உதாரணமாய், ஊழியம் செய்யும்படி தேவன் நமக்குத் தந்த ஸ்தலத்தில் அங்குள்ள சில ஆத்துமாக்களை தேவனுடைய பிள்ளைகளாகும்படி வழிநடத்தி, அவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டு..... ஒரு நாளில் அவர்களும் கிறிஸ்துவின் ஊழியர்களாய் மாறி அநேகரை ஆசீர்வதிப்பதற்கு தகுதியடைவார்கள் என்ற நம்பிக்கையோடு ஊழியத்தில் நாம் கடுமையான பிரயாசங்கள் எடுத்திருக்கலாம்.....அதனிமித்தம், நம் சரீர சுகத்தைக்கூட நாம் இழந்திருக்கலாம்! ஆனால், அந்தோ! நாம் பாடுபட்டு உழைத்த ஜனங்களோ நாம் எதிர்பார்த்த பலனைத் தராமல், நம் நம்பிக்கை யாவையும் கவிழ்த்துவிடுகிறார்களே!! இச்சூழ்நிலைகளில் நாம் என்ன செய்யப்போகிறோம்? ஆத்துமாவிற்காக உழைத்திடத் தூண்டிய அன்பிலிருந்து நாம் விலகிப்போகலாமா? அல்லது நாம் இன்னமும் அன்பில் நிலைத்திருந்து, "பிதாவே இவர்களை மன்னியும்.....
தாங்கள் செய்வது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே" என தொடர்ந்து நாம் ஜெபித்திடக்கூடுமா? ஆம், அன்பு ஒருக்காலும் ஒழியாது! (1கொரி 13:8).
அன்பற்ற சூழ்நிலையை நாமும் அன்பற்ற உள்ளத்தோடு சந்திக்கலாமா? இவ்வித சூழ்நிலைகளில்தான், "தேவரீர் என் இருதயத்தில் தோன்றும் எல்லாத் தடைகளையும் அகற்றிவிட்டு உம்முடைய அன்பை எனக்குள் ஊற்றிவிடும்!" என்று ஜெபித்து கதறுபவர்களாய் நாம் இருக்கவேண்டும்!!
ஜெபம்:
எங்கள் பரம பிதாவே! மானிட எங்கள் அன்பு எரிக்கும் வெயிலில் வாடிப்போகிறதே! என்றென்றும் ஒழியாத உம் தெய்வ அன்பை உம் தூய ஆவியினால் நிரப்பி எங்களை நடத்தியருளும்! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.
எழுதியவர்:
சகோதரர் சகரியா பூணன்.
"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".
From:-
https://t.me/hisvoicetoday
0 Comments