"இன்று அவருடைய சத்தம்"
நவம்பர் 6
🔸️ நம் மனச்சோர்வை அகற்றும் அந்நியபாஷை! 🔸️
ஒரு நபர் அந்நியபாஷை பேசும்போது, அவருடைய ஆவி (இருதயம்) 'ஏதோ பாஷைகளை' நேரடியாக இருதயத்திலிருந்து தன் வாய்மூலம் பேசுவதையே அறிகிறோம். இவ்வாறு பேசுவது அவருடைய மனதைத் தள்ளிவைத்துவிட்டுப் பேசுவதாகவே இருக்கிறது. இதனிமித்தமாய், அவன் தன் இருதயத்தில் இருக்கிற யாவற்றையும் தேவனிடத்தில் ஊற்றி கொட்டிவிடுகிறான்! அது அவனுடைய மகிழ்ச்சியின் பெருக்கமாகவோ அல்லது ஏதோ மனச்சோர்வினாலோ ஏற்பட்ட பாரமாகவோ இருக்கலாம்!! இதன் மூலமாய், அவனுடைய இருதயத்திலிருந்த 'பாரமான அழுத்தம்' அவனை விட்டுப் போய்விடுகிறது. இவ்வாறாகவே அவன் பக்திவிருத்தி அடைகிறான்! (1கொரி. 14:4).
அந்நியபாஷை பேசுபவர் தனக்குத் தெரிந்த பாஷையை பேசாததினால், ஆண்டவர் மீது தன் முழு கவனத்தையும் வைத்து, தன் மனதை (Mind) உதறிவிட்டு தன் இருதயத்திலிருந்து நேரடியாக வார்த்தைகளைத் தன் வாயின் மூலமாய் பேசுகிறார். அவ்வாறு அவன் பேசுவதின் அர்த்தம் அவனுக்குப் புரியாவிட்டாலும், தன்னுடைய இருதயத்திலுள்ள ஏக்கங்களையும் பாரங்களையும் தேவன் இச்சமயத்தில் அறிந்து கொண்டார் என்பதை நன்றாய் உணர்ந்திருப்பான்.
தன் நெஞ்சத்தில் பாரம் உண்டாகும் சமயமெல்லாம், அந்தச் சுமையை நாம் மேற்கண்டதுபோல் தேவனிடத்தில் இறக்கி வைப்பது ஒரு விசுவாசிக்கு பெலனுள்ள நேரமாகும்! குறிப்பாய், ஒரு விசுவாசியின் மனம் (Mind) தன்னுடைய சொந்த பாஷையில் ஜெபிப்பதற்கு களைப்படைந்திருக்கும் சமயமே, அந்நியபாஷையின் ஜெபம் அவனுக்கு மிகுந்த ஆறுதலாயிருக்கிறது. இது எவ்வாறு என்பதை நம்மால் விளக்க முடியாவிட்டாலும், அந்தக் கிரியையை நாம் உணர முடியும்!
இவ்வுலகத்தில் உன்னதமான கிறிஸ்தவர்களாய் திகழ்ந்தவர்கள், அந்நியபாஷை பேசினார்களோ இல்லையோ..... ஆனால், இவர்கள் தங்கள் ஆண்டவராகிய இயேசுவின் மீது முழு இருதயமான சொல்லி முடியா நேசம் கொண்டிருந்தார்கள்! பேதுரு, யாக்கோபு, யோவான், பவுல் போன்ற சீஷர்கள் அந்நியபாஷை பேசினார்கள்! ஆனால், நமக்குத் தெரிந்தவரை ஜான்வெஸ்லி, சார்லஸ் பின்னி, D.L.மூடி, A.B.சிம்சன், வில்லியம் பூத், C.T.ஸ்டட், வாட்ச்மேன் நீ போன்ற தேவ மனிதர்கள் ஒருபோதும் அந்நியபாஷை பேசியதேயில்லை! ஆனால், அவர்கள் அனைவரும் தங்கள் ஆண்டவரை முழுஇருதயமாய் அன்பு கூர்ந்தார்கள்! அவர்கள் அனைவரும் சிலுவையின் வழியில் நடந்து சென்றார்கள்! இவைகள்தான் அவர்கள் வாழ்வின் "மையமாய்" இருந்தது! மற்ற அனைத்தும் அவர்களுக்கு இரண்டாவதாகவே இருந்தது!!
ஜெபம்:
எங்கள் பரலோக தந்தையே! இளைத்தவனை இளைப்பாறச் செய்யும் அந்நியபாஷை வரத்திற்காக ஸ்தோத்திரம்! ஆகிலும், இதுவே பிரதானமில்லாமல், உம் சிலுவை வழியை முன்வைத்து வாழ கிருபை தாரும்! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.
எழுதியவர்:
சகோதரர் சகரியா பூணன்.
"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".
From:-
https://t.me/hisvoicetoday
0 Comments