"இன்று அவருடைய சத்தம்"
நவம்பர் 7
🔸️ நம் ஜீவியமே உலகத்திற்கு வெளிச்சமாக வேண்டும்! 🔸️
ஒருசமயம், ஆண்டவர் தன்னைப் பற்றிக் கூறும்போது, "நான் உலகத்தில் இருக்கையில் உலகத்திற்கு ஒளியாக இருக்கிறேன்" எனக் கூறினார் (யோவான் 9:5). ஆனால் இயேசு இவ்வுலகத்தை விட்டு சென்ற பின்போ, "உலகத்திற்கு வெளிச்சமாக" நம்மையே நியமனம் செய்தார்! (மத்தேயு 5:14). இதுவே எந்த உத்தம கிறிஸ்தவனுக்கும் உரிய மிகப்பெரிய பொறுப்பாகும்!!
இயேசு வெளிப்படுத்தின ஒளியானது, சில உபதேசங்களோ அல்லது போதனைகளோ அல்ல!! அது, புதிய உடன்படிக்கை சத்தியம் கூட அல்ல!! தன்னுடைய ஜீவியத்தையே ஒளியாகப் பிரகாசித்தார். இயேசுவினுடைய ஜீவியத்திலிருந்துதான் தெய்வீக சுபாவங்கள் நமக்கு ஒளியாக வீசியது!! "நாங்கள் வெளிச்சம் பெற்றிருக்கிறோம்" எனக்கூறி, பரிசுத்தாவியின் அபிஷேகத்தையும், பாவத்தின் மேல் பெற்றிடும் ஜெயத்தையும், இன்னும் இதுபோன்ற சத்தியங்களையே நாம் பெற்ற வெளிச்சமாக கூறிக்கொள்கிறோம். ஆனால் அது அல்ல... "ஆண்டவராகிய இயேசுவின் ஜீவீயத்தையே" நாம் வெளிச்சமாக பிரகாசித்திட வேண்டும்!
புதிய ஏற்பாட்டில் இரண்டு முறை "தேவனை ஒருவனும் ஒருக்காலும் கண்டதில்லை" என எழுதப்பட்டிருக்கிறது. ஆம், முதன்முதலாக நமக்கு தேவனைப்பற்றி இயேசுவே வெளிப்படுத்தினார் (யோவான் 1:18). இயேசு தன் கரங்களை ஒரு குஷ்டரோகியின் தோளோடு வைத்து அணைத்துக் கொண்டபோது "தேவன் எப்படிப்பட்டவர்" என்பதை வெளிப்படுத்தினார்! அவர் காசுக்காரர்களை ஆலயத்திலிருந்து துரத்தியபோதும் "தேவன் எப்படிப்பட்டவர்" என்பதை வெளிப்படுத்தினார்!...... இவ்வாறாக, "என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான்" என்றே இயேசு தன் சீஷர்களிடம் திட்டமாகக் கூறினார். அந்த இயேசுவோ இப்பொழுது பரலோகத்திற்கு சென்றுவிட்டார்!
பிதாவை, இயேசுவினிடத்தில் சீஷர்கள் கண்டதைப்போலவே, "நாம் ஒருவரிடத்தில் ஒருவர் அன்பாய் இருந்தால்" தேவன் நமக்குள் நிலைத்திருப்பதையும், நம் சபையில் தேவன் இருப்பதையும் இன்றும் ஜனங்கள் காணமுடியும்! (1யோவான் 4:12).
சபையில் நம்மை கவனித்துப் பார்ப்பவர்கள் "கிறிஸ்து எப்படிப்பட்டவராக இருப்பார்!" என்பதை நம் மூலமாய் அறியக்கூடியதாக இருக்க வேண்டும்! இவ்வாறு நம் ஜீவியத்தின் மூலமாய் "இயேசுவின் ஜீவனை" நாம் வெளிச்சமாக பிரதிபலிக்க தவறியிருந்தால், நம்முடைய பிரதான அழைப்பிலிருந்தே தவறிவிட்டோம்!
ஜெபம்:
எங்கள் பரம தகப்பனே! வெறும் உபதேசமல்ல, இயேசுவைப்போலவே எங்கள் ஜீவியம் பிறர் காணக்கூடிய ஒளியாக மாறிட கிருபை தாரும்! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.
எழுதியவர்:
சகோதரர் சகரியா பூணன்.
"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".
From:-
https://t.me/hisvoicetoday
0 Comments