"இன்று அவருடைய சத்தம்"
நவம்பர் 8
🔸️ ஒருவருக்கும் கடன்படாத வாழ்க்கை வேண்டும்! 🔸️
எந்த மனிதனுக்கும் தேவன் ஒருபோதும் கடன்பட்டதே கிடையாது! புதிய உடன்படிக்கையில், அவரின் திவ்விய சுபாவத்தில் பங்குபெறும்படியே நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம்!! எனவேதான், "ஒன்றிலும் ஒருவனுக்கும் கடன்படாதிருங்கள்" (ரோமர் 13:8) என நாமும் கட்டளையிடப்பட்டிருக்கிறோம்.
இன்னொருவரிடம் கடன் வாங்கி அவரிடம் கடனாளியாவது நியாயப்பிரமாண சாபங்களில் ஒன்றாகும். இந்த சாபமானது, நியாயப்பிரமாணத்திற்கு இஸ்ரவேலர்கள் கீழ்ப்படியாமல் இருக்கும்போது அவர்கள் மீது வந்திறங்கும் என தேவனே கூறியதாகும் (உபா. 28:43-48). ஆம், 48ம் வசனம் கூறுகிறபடி, இஸ்ரவேலர்கள் "சகலமும் குறைவுபட்டு" போகும் பரிதாபத்திற்கே தள்ளப்பட்டு விடுவார்கள்!!
இதற்குமாறாக, இஸ்ரவேலர்கள் கற்பனைகளுக்கு கீழ்ப்படிந்து நடக்கும்போது அவர்களை ஆசீர்வதிப்பேன் என தேவன் வாக்குத்தத்தம் செய்த ஆசீர்வாதங்களில் ஒன்று என்னவென்றால், "நீ அநேகம் பேருக்கு கடன் கொடுப்பாய், நீயோ கடன் வாங்காதிருப்பாய்" (உபாகமம் 28:12) என்பதாகும். பிறருக்கும் கொடுத்து ஆசீர்வதிப்பதற்கென தேவையான கையிருப்பு வைத்திருப்பது தேவன் தன் ஜனத்தை ஆசீர்வதிக்கும் விதத்தில் ஒரு வழியாகும்!
ஆனால், நீங்களோ ஒரு "தொடர்ச்சியான" பொருளாதார தேவையில் உழன்று கொண்டிருப்பவராய் இருந்தால், உங்களையே ஓர் ஆவிக்குரிய பரிசீலனை செய்து, என்ன தவறு? என்றும் அது எங்கு நிகழ்ந்தது? என்றும் கண்டறிய வேண்டியது மிகவும் அவசியமாகும்.
"கடன் வாங்கினவன் கடன் கொடுத்தவனுக்கு அடிமை" (நீதி. 22:7) என வேதம் விளம்புகிறது. 'கடன் வாங்குதல்' என்ற வார்த்தை எபிரேய பாஷையில், கடன் கொடுத்தவனுக்கு கடன் வாங்கினவன் "கட்டப்பட்டு இருத்தல்" என்றே பொருள்படுகிறது. பார்த்தீர்களா உங்களுக்கு கடன் தந்தவரால் நீங்கள் மேற்கொள்ளப்பட்டு, ஒரு சங்கிலியால் பிணைக்கப்பட்டுவிட்டீர்கள்! தேவனுடைய பிள்ளைகள் ஒருவராகிலும் இவ்வாறு பிறரால் மேற்கொள்ளப்பட்டிருப்பது, ஒருபோதும் தேவனுடைய சித்தம் அல்லவே அல்ல! நாம் கிறிஸ்துவின் இரத்தத்தால் தேவனுக்கென கிரயத்திற்குக் கொள்ளப்பட்டபடியால், எந்த மனுஷருக்கும் நாம் அடிமையாகக்கூடாது என நமக்கு ஆணித்தரமான கட்டளை தரப்பட்டிருக்கிறது (1கொரிந்தியர் 7:23). "சிறைப்பட்டவர்களை" (கடன்பட்டு சங்கிலியால் கட்டப்பட்டவர்களை) விடுதலை செய்வதற்காக இயேசு வந்தார் என எழுதியிருக்கிறதே! (லூக்கா 4:18). இது நம்மை பரவசமூட்டும் நற்செய்தி அன்றோ!
ஜெபம்:
எங்கள் பரம தகப்பனே! உமது பிள்ளைகள் கடன்படுவதை விரும்பாத ஆண்டவரே, எங்கள் ஆவிக்குரிய நிலையை சீர்படுத்தி கடன் கட்டிலிருந்து உம் பிள்ளைகள் யாவரும் விடுதலைபெற கிருபை தாரும்! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.
எழுதியவர்:
சகோதரர் சகரியா பூணன்.
"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".
From:-
https://t.me/hisvoicetoday
0 Comments