"இன்று அவருடைய சத்தம்"
நவம்பர் 9
🔸️ நான் சுமந்திடும் சிலுவை! 🔸️
"தன்னை வெறுப்பது" என்பது, ஒருவன், தான் தொன்றுதொட்டு ஆதாமிலிருந்து பெற்று ஜீவிக்கும் "சொந்த ஜீவியத்தை" வெறுப்பதேயாகும். இந்த சுய-ஜீவியத்தை மரணத்திற்குள் கொண்டுவருவதே சிலுவையை எடுப்பதின் பொருளாகும். நம் சுய-ஜீவியத்தை நாம் முதலாவதாக வெறுத்துவிட்டால், பின்பு அதை நாம் எளிதில் அழித்துவிட முடியும்!
ஆம், கிறிஸ்துவின் ஜீவனுக்கு நம் சுய-வாழ்க்கையே பிரதான எதிரியாய் இருக்கிறது. இந்த சுய-வாழ்க்கையைத்தான் "மாம்சம்" என வேதாகமம் அழைக்கிறது. நம்மிலுள்ள எல்லாவிதமான தீய-இச்சைகளுக்கும் இந்த மாம்சமே ஒரு பண்டகசாலையாய் இருக்கிறது! நமக்கானதை தேடுவதோ.... நம் சுய கனத்தை நாடுவதோ...நம் சொந்த மகிழ்ச்சியை விரும்புவதோ.... நம் சுய வழிக்குக் செல்வதோ.... போன்ற நம் சுய சித்தங்களை நிறைவேற்றும்படி ஏற்படும் சோதனைகளின் தூண்டுதல்கள் யாவும் இப்பண்டக சாலையிலிருந்தே புறப்பட்டு வருகிறது!!
நாம் நேர்மை உள்ளவர்களாய் இருப்போமென்றால், நாம் செயலாற்றும் நல்ல கிரியைகள்கூட தீமையான நோக்கங்களால் கறைப்படுவதை நாம் காண முடியும். எல்லாம், இந்த மாசு படிந்த இச்சைகளிலிருந்து தோன்றுவதேயாகும். ஆகவே, நாம் இந்த "மாம்சத்தை" வெறுக்காவிட்டால், நம் ஆண்டவரை நம்மால் ஒருபோதும் பின்பற்றவே முடியாது! இதனிமித்தமே, "நம் சொந்த ஜீவனை" வெறுப்பது அல்லது இழப்பது குறித்து இயேசு அதிகமாய் பேசியிருக்கிறார். இந்த வாக்கியம், சுவிசேஷங்களில் 6-முறை திரும்பத்திரும்ப கூறப்பட்டுள்ளது (மத்தேயு 10:39; 16:25; மாற்கு 8:35; லூக்கா 9:24; 14:26; யோவான் 12:25). இவ்வாறு இந்த வாக்கியம் சுவிசேஷங்களில் அடிக்கடி கூறப்பட்டிருந்த போதும், இன்று இந்த வாக்கியத்தின் செய்திதான் 'மிகக் குறைவாய்' 'புரிந்துகொள்ளப்பட்டு' மிகக் குறைவாய் பிரசங்கிக்கபடுகிறது!!
நம் சொந்த உரிமைகளையும், நம் சொந்த லாபங்களையும், தேடுவதை விட்டுவிடுவதும், நம் சொந்த கனத்தைத் தேடுவதை நிறுத்துவதும், சுய-இலட்சியங்களையும், சுய-ஆர்வங்களையும் வெறுத்து விடுவதும்....இன்னும் இதுபோன்ற சுய-வழிகளைத் தேடுவதை நிறுத்தி விடுவதுமே "நம் சொந்த ஜீவனை" வெறுப்பதின் பொருளாகும். ஆம், இந்த மார்க்கமாய் அல்லது இந்த வழியாய் நாம் செல்வதற்கு விருப்பம் கொண்டிருந்தால் மாத்திரமே, நாம் இயேசுவின் சீஷர்களாய் இருந்திட முடியும்!
ஜெபம்:
எங்கள் அன்பின் பிதாவே! ஆண்டவர் இயேசுவின் ஜீவியமே எங்கள் வாஞ்சை! பரத்தின் இந்த வாழ்வை, எங்கள் சிலுவை எடுத்து, எங்கள் சொந்த ஜீவனை இழந்து, சுதந்தரித்திட கிருபை தாரும்! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.
எழுதியவர்:
சகோதரர் சகரியா பூணன்.
"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".
From:-
https://t.me/hisvoicetoday
0 Comments