"இன்று அவருடைய சத்தம்"
நவம்பர் 10
🔸️ அன்றாட ஜீவியத்தில் பின்பற்ற வேண்டிய இயேசுகிறிஸ்துவின் அடிச்சுவடு! 🔸️
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்கு குறைந்தது நான்கு சகோதரர்களும் இரண்டு சகோதரிகளும் இருந்திருக்கிறார்கள் என்பதை மாற்கு 6:3-ம் வசனம் நமக்கு தெளிவுபடுத்துகிறது. ஆகவே, குறைந்தது 9 பேர்கள் ஒரே வீட்டில் வசித்து வந்தார்கள் என்பதையும்..... அதுவும் அந்த வீடு ஓர் "ஏழை வீடு" என்பதையும் சுவிசேஷ புத்தகங்கள் எடுத்துக்காட்டுகின்றன. ஓர் ஆட்டுக்குட்டியை கூட காணிக்கையாய் செலுத்த முடியாத அளவிற்கு மரியாள் ஏழ்மையில் இருந்தாள் என்பதை லூக்கா 2:24, லேவி.12:8 ஆகிய வசனங்களை ஒப்பிட்டு வாசிக்கையில் நாம் அறிந்து கொள்ள முடிகிறது! ஆகவே, வீட்டில் கஷ்டங்களும் நெருக்கடியும் ஏற்படும் சமயங்களில் இயேசு தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ளவோ அல்லது ஓய்ந்திருப்பதற்கோ அவருக்கென ஒரு தனி படுக்கை அறை இல்லாதவராகவே இருந்தார். மேலும், அவருடைய சகோதரர்கள் அவரை விசுவாசிக்கவில்லை எனவும் யோவான் 7:5 கூறுகிறது.
'ஒருமுறைகூட கோபப்படாத' அல்லது 'ஒருமுறைகூட சுயநலமாய் செயல்படாத' இவரைக் குறித்து அவர்கள் பகிரங்கமாகவே பொறாமை கொண்டிருந்தார்கள்! இவர்கள் யாவரும் ஒன்று சேர்ந்து கொண்டு அவரைப் பலமுறை ஏளனம் செய்து அவருக்கு எரிச்சல் மூட்ட முயற்சித்திருப்பார்கள்.
ஒரு பெரிய குடும்பமாய் இருந்துகொண்டு ஒரு சிறிய வீட்டில் மனந்திரும்பாத தன் வீட்டாரோடு வாழ்ந்தவர்கள் மாத்திரமே, இயேசு நாசரேத்தில் தன் ஏழை வீட்டில் எத்தனை பிரச்சனைகளை சந்தித்திருப்பார் என்பதை எளிதில் விளங்கிக்கொள்ள முடியும். அப்படியெல்லாம் இருந்தும், இயேசுவோ ஒருசமயம் கூட பாவம் செய்யவே இல்லை!
இவ்வாறு அவர் சந்தித்த சோதனைகளை இன்னும் அதிகமாய் கூட்டுவதைப்போல் யோசேப்பு மரித்துவிட்டார்! இயேசு ஊழியத்திற்கென வெளியேறிய வருடங்களில் யோசேப்பைக் குறித்து யாதொன்றும் சொல்லப்படாததை வைத்து, இயேசு சுமார் 13 முதல் 20 வயது பிராயமாயிருந்த வருடங்களில் யோசேப்பு மரித்திருக்க வேண்டும் என்றே கருதமுடிகிறது. எனவே, வீட்டின் மூத்த மகனாகிய இயேசுவின் மீது 8-உறுப்பினர்கள் கொண்ட அவரது குடும்பத்தைத் தாங்கும் சுமை விழுந்தது! தன் குடும்பத்தை போஷிப்பதற்காக இயேசு அரும்பாடுபட வேண்டியிருந்தது. அந்த நெருக்கமான சூழ்நிலைகளில் இன்னமும் அதிகமான சோதனைகளை இயேசு நிச்சயமாய் சந்தித்திருக்கக் கூடும்.... ஆகிலும், அவரோ பாவம் செய்யவேயில்லை!!
ஜெபம்:
எங்கள் பரம தகப்பனே! எங்களைப்போலவே மனிதராய் பிறந்து வளர்ந்த இயேசுவின் முன்மாதிரி வாழ்விற்கு நன்றி! அவரது அடிச்சுவடு நடந்து திவ்விய வாழ்வில் முன்னேற உதவி செய்தருளும்! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.
எழுதியவர்:
சகோதரர் சகரியா பூணன்.
"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".
From:-
https://t.me/hisvoicetoday
0 Comments