இன்று "அவருடைய" சத்தம்
நவம்பர் 21
🔸️ பதிலுக்கு பதில் செய்யாதிருக்கும் கிறிஸ்துவின் ஆவி வேண்டும்! 🔸️
நம் ஜீவியம் கிறிஸ்துவினுடைய ஆளுகைக்கு முற்றிலுமாய் அர்ப்பணிக்கப்பட்டிருந்தால், பதிலுக்குப் பதில் செய்வதை நாம் மகிழ்ச்சியுடன் மறுத்திட முடியும்! மனுஷர்கள் நமக்கு என்ன செய்ய விரும்புகிறார்களோ, அதற்கு சாந்தமுடன் நம்மை ஒப்புக் கொடுத்திடவும் முடியும்!! ஏனென்றால், நம்மை இவ்வாறு நடத்துவதற்கு "தேவனே அவர்களை அனுமதித்திருக்கிறார்" என்பதை நாம் அறிந்திருக்கிறோம்.
மேற்கண்ட மனோபாவத்தையே சிலுவையின் பாடுகளில் இயேசு கொண்டிருந்தார். அவர் விரும்பியிருந்தால் பட்டயங்கள் உருவிய 72000 தூதர்களை தன் உதவிக்கு அவர் அழைத்திருக்க முடியும். ஆனாலும் அவ்வாறு செய்திட அவர் மறுத்துவிட்டார். தான் பொய்யாய் குற்றம் சாட்டப்படுவதற்கும், வையப்படுவதற்கும், அடிக்கப்படுவதற்கும், சிலுவையில் அறையப்படுவதற்கும் சாந்தமுடன் தன்னை ஒப்புக் கொடுத்துவிட்டார். ஏனெனில், "இவை அனைத்தையும் தன் பிதாவே அனுமதித்தார்" என்பதில் இயேசு உறுதியான விசுவாசம் கொண்டிருந்தார்.
நியாய சங்கத்தில் நடந்த விசாரணையில் இயேசு ஒரு புழுவைப்போல நடத்தப்பட்டார் என சங்கீதம் 22:6 கூறுகிறது. புழுவை வீசுவதைப் போல் அவர் கீழே வீசப்பட்டு, மனிதர்களின் கால்களால் அவர் மிதிக்கப்பட்டார். ஒரு பாம்பிடம் அவ்வாறு நடந்திருந்தால் அது எதிர்த்து நின்று தாக்கும்! ஆனால் ஒரு புழுவை நீங்கள் என்னதான் மிதித்து நசுக்கினாலும், அது ஒருபோதும் பதிலுக்கு பதில் செய்யாது!! ஆம், பாம்பின் செயலில் பிசாசின் ஆவி இருக்கிறது. ஆனால், ஒரு புழுவின் செயலிலோ தேவகுமாரன் வாசமாய் இருக்கிறார்!
ஜனங்கள் நம்மை துன்புறுத்தி அல்லது வசைபாடி அல்லது நம் உரிமைகளை காலினால் மிதிக்கும்போது நம்மிடத்திலிருந்து பிரதிபலிக்கும் கிரியை மேற்கண்ட இரண்டு ஆவிகளில் ஒன்றாகத்தான் இருக்கவேண்டும். இன்றுவரை உங்களிடத்தில் இருந்த ஆவி என்ன ஆவி? என்பதை சற்று நிதானித்துப் பாருங்கள்!
இதுபோன்ற சூழ்நிலைகளில் உங்கள் பிரிய நண்பர்களும், காயமடைந்த உங்கள் சுயமும் "இத்தனை மோசமான இழிவை நீ ஏற்றுக்கொள்ளக் கூடாது" என்றும் "இவ்வளவு கேவலமான வசைச் சொற்களைப் பேசியவனை நீ அப்படியே விட்டுவிடக்கூடாது!" என்றும் உங்களிடம் பேசுவார்கள். ஆனால் பரிசுத்த ஆவியானவரோ சிலுவையின் பாதையை உங்களுக்கு காண்பித்து, "நீ எதுவும் செய்ய வேண்டாம், யாதொன்றும் பேசவேண்டாம், அதற்குப் பதிலாய் உன் மூலமாய் நான் அவனை அன்புகூரட்டும்!!" என்றே கூறுவார்.
ஜெபம்:
எங்கள் அன்பின் பிதாவே! எங்களுக்கு தீமை செய்தவர்களுக்கு, தீமை செய்யாது, இயேசுவைப்போல் அதை சாந்தமுடன் ஏற்று அன்புகூர்ந்திடும் நல்ல இருதயம் தாரும்! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.
எழுதியவர்:
சகோதரர் சகரியா பூணன்.
"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".
From:-
https://t.me/hisvoicetoday
0 Comments