இன்று "அவருடைய" சத்தம்
டிசம்பர் 12
🔸️ நாம் ஒளியில் நேர்மையுடன் நடந்திட வேண்டும்! 🔸️
"அவர் ஒளியிலிருக்கிறது போல நாமும் ஒளியிலே நடந்தால் ஒருவரோடொருவர் ஐக்கியப்பட்டிருப்போம்" (1 யோவான் 1:7).
ஒளியில் நடப்பதற்கு முதலாவது தகுதியாய் இருக்கவேண்டியது நாம் ஒன்றையும் தேவனிடத்தில் மறைக்காமல் இருக்க வேண்டும்!! அதாவது, அவரிடத்தில் உள்ளதை உள்ளபடியே எல்லாவற்றையும் சொல்வதாகும்! தேவனை நோக்கிச் செல்வதற்குரிய முதல்படி நேர்மைதான் என்பதை நான் ஆணித்தரமாய் கண்டிருக்கிறேன். புரட்டிப் பேசும் உண்மையற்றவர்களை தேவன் அருவருகிறார். வேறு எவரையும் கடிந்து கொள்ளாத அளவிற்கு, மாய்மாலக்காரர்களையே இயேசு அதிகமாய் கடிந்து கொண்டார் என்பதை நாம் அறியவேண்டும்.
நாம் பரிசுத்தமாகவோ அல்லது பூரணமாகவோ இருக்கும்படி முதலாவதாக தேவன் கேட்கவேயில்லை. ஆனால், முதலாவதாக நேர்மையாய் இருக்கும்படியே நம்மிடம் கேட்கிறார்!
இதுவே உண்மையான பரிசுத்தத்தின் ஆரம்பமாகும். இந்த ஊற்றுக் கண்ணிலிருந்துதான் மற்ற அனைத்தும் புரண்டுவர முடியும். நாம் அனைவருமே மிக எளிதாய் செய்யக்கூடிய ஒன்று இருக்குமென்றால், அது நேர்மையாக இருப்பதுதான்!
ஆகவே, எந்தப் பாவத்தையும் உடனடியாக தேவனிடம் அறிக்கை செய்துவிடுங்கள். பாவமான சிந்தனைகளுக்கு மழுப்பலான நாகரீகமான வார்த்தைகளைச் சூட்டாதிருங்கள். நீங்கள் உண்மையில் உங்கள் கண்களினால் விபச்சார மயக்க இச்சை கொண்டுவிட்டு, "நான் தேவனுடைய சிருஷ்டிப்பின் அழகை மாத்திரமே ரசித்தேன்" என்று கூறாதிருங்கள். அதேபோல், கோபத்தை "நியாயமான கோபம்" என்றும் அழைக்காதிருங்கள்!
இவ்வாறு நேர்மையற்றவர்களாக இருந்தால், நீங்கள் ஒருக்காலும் பாவத்திலிருந்து ஜெயம் பெறவே மாட்டீர்கள்!! ஆகவே, ஒருபோதும் பாவத்தை "தவறு" என்று அழைக்காதிருங்கள். ஏனென்றால், இயேசுவின் இரத்தம் உங்களுடைய எல்லா 'பாவங்களை' மாத்திரமே கழுவ முடியுமேயல்லாமல், உங்கள் 'தவறுகளை' அவருடைய இரத்தம் கழுவாது! ஆம், நேர்மையற்ற ஜனங்களை அவர் ஒருக்காலும் கழுவி சுத்திகரிப்பதேயில்லை. "தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான்" (நீதிமொழிகள் 28:13). ஆகவே நேர்மையுள்ள ஜனங்களுக்கு மாத்திரமே சுவிசேஷத்தில் நம்பிக்கை இருக்கிறது!
ஜெபம்:
எங்கள் அன்பின் தகப்பனே! குறைகள் ஏராளம் இருந்தாலும், அவைகளை மறைக்காமல் 'ஒளியில்' வைத்து நேர்மையாய் உம்மிடம் அறிக்கை செய்து பரிசுத்தத்தில் வளர கிருபை செய்தருளும்! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.
எழுதியவர்:
சகோதரர் சகரியா பூணன்.
"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".
From:-
https://t.me/hisvoicetoday
0 Comments