இன்று "அவருடைய" சத்தம்
டிசம்பர் 22
🔸️ எத்துன்பத்திலும் எளியவர்களின் ஜெபமே ஜெயம்! 🔸️
நீங்கள் எவ்வளவுதான் கோழையும் பெலவீனருமாய் இருந்தாலும், பரலோகத்தின் கதவை நீங்கள் தட்டும்போது, அது உங்களுக்கு நிச்சயமாய் திறக்கப்பட்டுவிடும்! காரிருள் அமைதி நேரங்களில் உங்கள் இருதயத்திலிருந்து தேவனை நோக்கிக் கூப்பிடுங்கள்! சிறிது நேரத்தில் பரலோகம் திறந்து, உங்கள் விண்ணப்பத்திற்கு தேவன் பேசும் பதிலை நீங்கள் கேட்பீர்கள்!!
துன்பத்தின் அக்காரிருள் நேரத்தில் தேவன் உங்களுக்குத் தந்த வாக்குத்தத்தங்களை எழுதி வைத்துக் கொள்ளுங்கள். அவை ஒவ்வொன்றும் ஒரு வானவில்லாகவும், விலையேறப்பெற்ற வைடூரியமாகவும் உங்களுக்கு இருப்பதைக் காண்பீர்கள்! அவைகளைப் பத்திரப்படுத்தி வையுங்கள்! என்றாவது ஒருநாள், பிறருக்கு உதவி செய்யும்படி அதை நீங்கள் மற்றவர்களுக்குத் தரவேண்டியிருக்கும்!! துன்பத்தின் அந்தரங்கத்தில் கேட்கும் உங்கள் பிதா, வெளியரங்கமாய் உங்களுக்கு நிச்சயமாய் பலனளிப்பார். தன் பதிலை "விரைவாய் தருவதாகவும்" அவர் மேலும் வாக்களித்திருக்கிறார். ஆகவே நீங்கள் பதிலை பெறும் வரை ஜெபத்திலே உறுதியாய் தரித்திருங்கள். உங்கள் துக்கத்தில் அமிழ்ந்துபோவது தேவனுடைய சித்தம் அல்லவே அல்ல. பலவந்தம் செய்யும் யாவருக்கும் தேவனுடைய இராஜ்ஜியம் சொந்தமாகவே வைத்திருக்கிறார்! அவ்விதமாய் தன் இராஜ்ஜியத்தை சுதந்தரிக்கும்படியே இயேசு நமக்கு சவால் கொடுத்து அழைக்கிறார்!!
"கர்த்தருடைய தூதன் அவருக்குப் பயந்தவர்களைச் சூழ பாளையமிறங்கி அவர்களை விடுவிக்கிறார்" (சங். 34:10) என்றும், "நாம் வேண்டிக் கொள்ளுகிறதற்கும், நாம் நினைப்பதற்கும் மிகவும் அதிகமாய் கிரியை செய்திட தேவன் வல்லவராயிருக்கிறார்" (எபேசியர் 3:20) என்றும் வேதம் கூறுவதைப் பாருங்கள்.
ஆகவே, மிகுந்த விசுவாசத்தோடு அவரிடம் கேளுங்கள். தைரியமாய் கிருபாசனத்தண்டை வந்து, ஜெபத்திலே உறுதியாய் இருங்கள். "எழுந்திரு, இராத்திரியிலே முதல் சாமத்தில் கூப்பிடு. ஆண்டவரின் சமூகத்தில் உன் இருதயத்தைத் தண்ணீரைப்போல ஊற்றிவிடு; எல்லாத் தெருக்களின் முனையிலும் பசியினால் மூர்ச்சித்துப் போகிற உன் குழந்தைகளின் பிராணனுக்காக உன் கைகளை அவரிடத்திற்கு ஏறெடு" (புலம்பல் 2:19) என்ற ஜெபத்தின் கூக்குரலையே நாமும் செய்திடக் கடவோம்.
ஜெபம்:
எங்கள் பரம தந்தையே! சோதனையின் பெலவீன நேரத்தில், எங்கள் துயர் தீர்க்கும் உம் இரட்சிப்பிற்கு ஜெபித்திட, ஓடிவரச் செய்திடும் கிருபை தந்தருளும்! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.
எழுதியவர்:
சகோதரர் சகரியா பூணன்.
"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".
From:-
https://t.me/hisvoicetoday
0 Comments