இன்று "அவருடைய" சத்தம்
ஜனவரி 13
🔸️ உண்மையான மனந்திரும்புதல் வேண்டும்! 🔸️
"கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம் (அதுவே ABC பாடமாகும்)" என சத்திய வேதம் விளம்புகிறது. (நீதி.9:10). "பாவத்தை விட்டு விலகி" ஜீவிப்பதே நாம் உண்மையாகவே கர்த்தருக்குப் பயப்படுதலாகும் என நீதிமொழிகள் 3:7 கோடிட்டுக் காட்டுகிறது. எனவே, மனந்திரும்பி பாவத்தைவிட்டு விலகாத யாராயிருந்தாலும், கிறிஸ்தவ ஜீவியத்தின் ஆரம்ப ABC பாடத்தைக்கூட கல்லாதவர்கள்தான்!
நீங்கள் மனந்திரும்பி இருக்கிறீர்களா? அப்படியானால், உங்கள் மனந்திரும்புதல் உண்மையானதுதானா என்பதையும் நீங்கள் உறுதி செய்ய வேண்டியது மிகவும் அவசியமாகும். ஏனென்றால், இன்று சாத்தான் போலியான மனந்திரும்புதலின் மூலமாய் "எண்ணற்ற ஜனங்களை"
ஏமாற்றி வஞ்சித்திருக்கிறான்!
"நீ ஒருவராலும் பிடிபடமாட்டாய்" என்ற தைரியத்தின் அடிப்படையில் இன்று அநேக ஜனங்கள் ஜீவித்துக் கொண்டிருப்பதை சாத்தான் நன்கு அறிந்திருக்கிறான். ஆகவே, ஒருவராலும் பிடிக்கப்படாமல் எவ்விதம் பாவம் செய்ய முடியும் (!?) என்ற தந்திர உபாயங்களை எல்லாம் அவர்களுக்கு சாத்தான் இன்று போதித்து வருகிறான். 'ஒரு திருடன்கூட' தான் பிடிபட்டுவிட்டால் மிகவும் மனம் வருந்துவான்! ஆனால், அது உண்மையான மனந்திரும்புதல் இல்லவே இல்லை!!
இவ்வாறு போலியாய் மனந்திரும்பிய சில உதாரணங்களை வேதாகமத்திலும் நாம் பார்க்கிறோம். சவுல் ராஜா தேவனுக்குக் கீழ்படியாமல் போனதும், தான் பாவம் செய்ததாக சாமுவேல் தீர்க்கதரிசியிடம் ஒத்துக் கொண்டான். ஆனால் தன்னுடைய மீறுதலை ஜனங்கள் அறிந்து கொள்ளுவதற்கோ அவன் விரும்பவேவில்லை. அக்கொடிய நேரத்திலும் அவன் மானிடரின் மதிப்பைத் தேடினான்! ஆம், உண்மையான மனந்திரும்புதலை அவன் அடையவே இல்லை! தான் கையும் மெய்யுமாக பிடிக்கப்பட்டதினிமித்தமே சவுல் துக்கமடைந்திருந்தான் (1 சாமுவேல் 15:24-30). ஆனால், தாவீது ராஜாவோ இந்த சவுலுக்கு முற்றிலும் மாறுபட்டுக் காணப்பட்டான். தாவீது ராஜா பாவத்தில் வீழ்ச்சி அடைந்தபோது, அவைகளைப் 'பகிரங்கமாய்' அறிக்கை செய்தே மனந்திரும்பினான்! (சங்கீதம் 51).
ஜெபம்:
அன்புள்ள பரம பிதாவே! எங்களின் மனந்திரும்புதல் உண்மையானதுதானா? என சோதித்தறிய உதவி புரிந்தீர்! உமக்கே ஸ்தோத்திரம்! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.
எழுதியவர்:
சகோதரர் சகரியா பூணன்.
"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".
From:-
0 Comments