இன்று "அவருடைய" சத்தம்
ஜனவரி 24
🔸️ இயேசுவின் ராஜகெம்பீரம் நமக்கும் வேண்டும்! 🔸️
யூதாஸ் இயேசுவை காட்டிக் கொடுத்தான்! பேதுரு அவரை மறுதலித்தான்! அவருடைய சீடர்களும் அவரை கைவிட்டுச் சென்றனர்! திரளான ஜனங்கள் அவருக்குப் பின்முதுகு காட்டி பிரிந்து சென்றனர்! அவர் அநீதியாய் துன்புறுத்தப்பட்டும், பொய்யாய் குற்றம் சாட்டப்பட்டும், சிலுவையில் அறையப்படும்படி அழைத்துச் செல்லப்பட்டார்!!.... இருப்பினும் அவர் கல்வாரிப் பாதையில் செல்லும்போது திரளானோரைத் திரும்பிப் பார்த்து, "எனக்காக அழாதீர்கள்; நான் நன்றாகவே இருக்கிறேன்" என்று அவரால் சொல்ல முடிந்தது!! (லூக்கா 23:28). ஆம், அவரிடம் சுய அனுதாபத்தின் சிறிய தடயம்கூட காணப்படவில்லை! பரிசுத்தாவியின் வல்லமையினால் அன்றி, இந்தப் பொன்னான வாழ்வை யார் வாழ்ந்திட முடியும்!!
தான் பானம் பண்ணிக் கொண்டிருந்த பாத்திரம் பிதாவினாலேயே அனுப்பப்பட்டது என்று அவர் நன்றாய் அறிந்திருந்தார். யூதாஸ்காரியோத்து, அந்தப் பாத்திரத்தைக் கொண்டுவந்த பணிவிடையாள் மாத்திரமே! எனவேதான் அவர் யூதாசை அன்போடு பார்த்து "சினேகிதனே " என்று அழைக்க முடிந்தது. தேவனுடைய பரிபூரண ஆளுகையில் விசுவாசம் இல்லாமல் நீங்கள் இவ்விதமாய் சொல்லிவிட ஒருக்காலும் முடியாது!
அடுத்தபடியாக, இயேசு பிலாத்துவிடம் "என் பிதா அதிகாரம் கொடுக்காமல், உமக்கு என்மேல் ஒரு அதிகாரமும் இல்லை" என்றார். (யோவான் 19:11). இந்த உறுதியான நம்பிக்கையே, இயேசுவை இந்த உலகில் கனம் பொருந்திய ஒரு ராஜாவைப்போல் நடக்கச் செய்தது! அவர் ஆவிக்குரிய கனத்தோடு ஜீவித்து, அதே ஆவிக்குரிய கனத்தோடு மரித்தார்!!
இப்போது நாமும் "இயேசு நடந்தபடியே நடப்பதற்கு" அழைக்கப்படுகிறோம். அவர் பிலாத்துவுக்கு முன்பாக மேற்கண்ட "நல்ல அறிக்கையை சாட்சியாக விளங்கப் பண்ணியது" போல, நாமும் இந்த அவிசுவாசமுள்ள சந்ததி முன்பாக நல்ல அறிக்கை செய்து (2தீமோத்தேயு 6:12-14) கெம்பீரமாய் நடந்திடக்கடவோம்!!
ஜெபம்:
எங்கள் பரலோக பிதாவே! "உமது அதிகாரமே" ஆண்டவராகிய இயேசுவின் பின்னணியில் இருந்த கெம்பீரத்திற்கு காரணம் என அறிந்தோம்! அதே 'கெம்பீரம்' எங்களுக்கும் அருளி உமது நாமத்திற்கு புகழ் சேர்க்க தயை புரிந்தருளும்! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.
எழுதியவர்:
சகோதரர் சகரியா பூணன்.
"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து"
From:-
0 Comments