இன்று "அவருடைய" சத்தம்
🔸️ எல்லாத் தீமைகளிலிருந்தும் விடுதலை! 🔸️
நம் தேவன் மிகவும் நல்ல தேவன்! தன்னுடைய பிள்ளைகளுக்கு எவ்வித தீமையாகிலும் சம்பவித்திட அவர் விரும்பவேமாட்டார்!!
இவ்வுலகில் அநேக ஜனங்கள், பிறர் செய்த பில்லி சூனியத்தினாலோ அல்லது செய்வினையினாலோ துன்பம் அனுபவிக்கிறார்கள். உங்கள் இருதயத்தையும் வாழ்க்கையையும் இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவுக்கு அர்ப்பணித்திருப்பீர்கள் என்றால், இதுபோன்ற சாத்தானுக்குரிய கிரியைகள் உங்களைத் துன்புறுத்த ஒருக்காலும் முடியாது! உங்களை இரட்சிக்கும்படி ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தை நீங்கள் கூப்பிடும்போது, உங்கள் மீதுள்ள எவ்வித பில்லி சூனியத்தின் வல்லமையும் "நொடிப்பொழுதில்" "இப்போதே" விரட்டி துரத்தப்பட முடியும்!
இயேசு சிலுவையில் மரித்தபோது, சாத்தானை தோற்கடித்து அவனுடைய வல்லமையை அடியோடு உரித்து போட்டார், என்றல்லவா வேதாகமம் கூறுகிறது! இது ஒரு நிலைத்த சத்தியமாகும். ஆனால், பாவமன்னிப்பைப் போலவே, "நீங்கள் ஏற்றுக் கொள்ளும்வரை" சாத்தானின் தோல்வியும் உங்கள் வாழ்க்கையில் நிஜமாய் மாறிட முடியாது!!
"மரணத்துக்கு அதிகாரியாகிய பிசாசானவனைத் தமது மரணத்தினாலே அழிக்கும்படிக்கு, ஜீவகாலமெல்லாம் மரணபயத்தினாலே அடிமைத்தனத்திற்குள்ளானவர்கள் யாவரையும் விடுதலைபண்ணும்படிக்கும் அப்படியானார்"
(எபிரேயர் 2:14,15) என வேதம் கூறுவதை பாருங்கள்!" "தேவனுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள், அப்பொழுது அவன் உங்களை விட்டு ஓடிப்போவான்" (யாக்கோபு 4:7) என்றும் வேதம் கூறுகிறது!
நாம் தேவனுடைய பிள்ளைகளாய் மாறிய பின்பும்கூட சாத்தான் நம்மைச் சோதிப்பதற்கு தேவன் அனுமதிக்கிறார். ஏனென்றால் இவ்வாறாகத்தான் நாம் பெலன் கொண்டவர்களாய் மாறிடமுடியும். சாத்தானை எதிர்த்து நின்று அவனுடைய எல்லா தாக்குதல்களையும் ஜெயிப்பதற்குரிய வல்லமையை நமக்குத் தரும்படி, நமக்குள் வாசம் செய்யும் பரிசுத்தாவியையும் இப்போது நாம் பெற்றிருக்கிறோம். இனியும் இந்த வையகத்திலுள்ள யாதொரு தீமையும் நம்மை மேற்கொண்டு மடங்கடித்திட ஒருபோதும் முடியாது, முடியவே முடியாது!!
ஜெபம்:
இரக்கமுள்ள பரமபிதாவே! செய்வினை, பில்லிசூனியம் ஆகிய தீமையினால் கட்டப்பட்டவர்களை மாத்திரமல்லாமல் "மரணபயத்தில்" பீடிக்கப்பட்ட "யாவரையும்" விடுதலை செய்யும்படி, சாத்தானை சிலுவையில் ஜெயித்திட அனுப்பித் தந்த உம் அன்பின் குமாரன் இயேசு கிறிஸ்துவுக்கே ஸ்தோத்திரம் உண்டாவதாக! ஆமென்.
எழுதியவர்:
சகோதரர் சகரியா பூணன்.
"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".
From:-
https://t.me/hisvoicetoday
0 Comments