Header Ads Widget

LightBlog

Ticker

6/recent/ticker-posts

மார்ச் 13

 இன்று "அவருடைய" சத்தம்


மார்ச் 13


🔸️ சோதனையில் ஜெயித்திட முடியும்! 🔸️


நாம் சோதிக்கப்படுவதற்கும் பாவம் செய்வதற்கும் இடையில் பெருத்த வித்தியாசம் உண்டு.


யாக்கோபு 1:14,15 இவ் வித்தியாசத்தை தெளிவாக எடுத்துக் காட்டுகிறது. அவ்வசனம் கூறுவது யாதெனில், "அவனவன் தன்தன் சுய இச்சையினாலே இழுக்கப்பட்டு, சிக்குண்டு, சோதிக்கப்படுகிறான். பின்பு இச்சையானது கர்ப்பந்தரித்து, பாவத்தைப் பிறப்பிக்கும்." நம் மாம்சத்தில் இருக்கும் இச்சையானது கர்ப்பம் தரிக்க, அனுமதிக்கப்படுமட்டும், நம் இருதயத்தில் ஒருபோதும் பாவம் பிறந்திட முடியாது. நம் மனதை தூண்டும்படி இச்சை மேலே பொங்கி வரும்போது நாம் அவ்வேளையில் அச்சோதனைக்கு நம்முடைய மனதை சம்மதிக்கச் செய்துவிட்டால், அச்சமயத்தில்தான் கருத்தரித்தல் ஏற்பட்டு பாவமும் பிறந்துவிடுகிறது! 


நாம் சோதிக்கப்படுவது, நம்மை எவ்விதத்திலும் தீமையாக்கிட முடியாது. நம்மைப் போலவேதான் இயேசுவும் சோதிக்கப்பட்டார். ஆனால் அவர் எவ்விதத்திலும் ஒரு தடவைகூட பாவம் செய்யவே இல்லை! இதனிமித்தமே அவர் முற்றிலும் பரிசுத்தம் உள்ளவராய் இருந்தார்.  


"அவர் எவ்விதத்திலும் தம்முடைய சகோதரருக்கு ஒப்பாக வேண்டியதாயிருந்தது" என்றும் "எல்லாவிதத்திலும் அவர் நம்மைப் போலவே சோதிக்கப்பட்டார்" என்றும் வேதம் இயேசுவை சுட்டிக்காட்டி போதிக்கிறது (எபி 2:17; 4:15). இவ்வாறு மிகத்துல்லியமாக இயேசு நம்மைப்போல அப்படியே சோதிக்கப்பட்டார். இருப்பினும், அவரோ ஒருபோதும் பாவம் செய்யவே இல்லை! 


அன்றியும், "தேவபக்திக்குரிய இரகசியமானது யாவரும் ஒப்புக்கொள்ளுகிறபடியே மகாமேன்மையுள்ளது. தேவன் மாம்சத்திலே வெளிப்பட்டார், ஆவியிலே நீதியுள்ளவரென்று விளங்கப்பட்டார்" (1 தீமோத்தேயு 3:16). ஆம், அவர் நம்முடைய மாம்சத்தை உடையவராய் இருந்தும், தன் ஜீவிய காலம் முழுவதும் தன் ஆவியை அவர் தூய்மை உள்ளதாய் காத்துக் கொண்டார்!


அவர் ஜெயம் பெற்றதுபோலவே நாமும் ஜெயம் பெற முடியும் என்ற நம்பிக்கையின் இரகசியம் இங்குதான் அடங்கியுள்ளது!


ஜெபம்:

பரம தந்தையே! எங்களை போல் "சோதிக்கப்படக்கூடிய" மாம்சத்தில் வெளிப்பட்டு, பாவத்தை ஜெயித்த ஆண்டவர் இயேசுவைப் போல், நாங்களும் ஜெயித்திட அருள் புரியும்! இயேசுவின் நாமத்தில், ஆமென். 


எழுதியவர்:

சகோதரர் சகரியா பூணன்.


"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து."


From:-

https://t.me/hisvoicetoday




Post a Comment

0 Comments