இன்று "அவருடைய" சத்தம்
மார்ச் 16
🔸️ பரிசுத்தமாகுதலில் நாளுக்கு நாள் வளர்ச்சி அடைந்திட வேண்டும்! 🔸️
தேவன்தான் நம்மை முற்றிலும் பரிசுத்தமாக்குகிறவர்! (1தெச.5:23). இச்சீரிய கிரியையை நாமாகவே நிறைவேற்றிட முடியாது. நாம் அவரையே முழுவதுமாய் சார்ந்துகொள்ள வேண்டும். ஏனெனில், நாம் அவருடைய சித்தத்தை செய்வதற்குரிய விருப்பத்தையும் அவைகளை நிறைவேற்றி முடிப்பதற்குரிய செய்கையின் திறனையும் நமக்குத் தரும்படி அவரே நமக்குள் கிரியை செய்கிறார். இருப்பினும் நாம்தான், "பயத்தோடும் நடுக்கத்தோடும் நம்முடைய இரட்சிப்பு நிறைவேறப் பிரயாசப்பட வேண்டும்" (பிலி.2:12,13). பார்த்தீர்களா, தேவன் நமக்குள் கிரியை செய்வதை (works in) நாம்தான் செயல்படுத்தி (works out) நிறைவேற்றுகிறோம். ஆம், இந்த நல்ல தேவன் நம்மை வெறும் "ரோபோர்ட்ஸ்" (Robots---இயந்திர மனிதன்) ஆக மாற்றிட விருப்பங்கொள்ளவே இல்லை.
அதேபோல், நம் பாவத்தின் குற்றங்களையும் தேவன்தான் கழுவுகிறார். இருப்பினும், "நம் மாம்சத்திலும் ஆவியிலும் உண்டான எல்லா அசுசியும் நீங்க, நம்மைநாமே சுத்திகரித்துக்கொண்டு, பரிசுத்தமாகுதலைத் தேவபயத்தோடே பூரணப்படுத்தக்கடவோம்" (2 கொரி. 7:1) என்றும் நாம் கட்டளையிடப்பட்டிருக்கிறோம்! எப்போதெல்லாம் நாம், நமக்குள்ளிருக்கும் அசுசியை வெளிச்சத்தில் காண்கிறோமோ, அப்போதெல்லாம் நாம்தான் அவைகளைவிட்டு சுத்திகரிக்கும் கிரியையில் ஈடுபட வேண்டும்!
இவ்வாறாகத்தான் நாம், "ஆவியினாலே சரீரத்தின் செய்கைகளை அழிக்கிறோம்" (ரோமர் 8:13). இக்கிரியை தொடர்ந்து நமக்குள் நடந்தால் நம் ஜீவியத்தில் ஆவியின் கனியாகிய --- அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம் ஆகிய திவ்விய சுபாவங்கள் அதிகமதிகமாய் நம்மில் நிச்சயமாய் வெளிப்பட்டு மிளிர்ந்துவிடும். இதுவே, நாம் கிறிஸ்துவின் சாயலாய் மறுரூபம் அடைவதின் பொருளாகும்!
இவ்வாறே, நம்முடைய பாதை அதிகமதிகமாய் பிரகாசிக்கிற சூரியப்பிரகாசத்தைப் போல் மாறுகிறது (நீதி 4:18). இவ்வாறு தேவன் நமக்காக உண்டுபண்ணிய பரிசுத்தமாகுதலின் மகிமையான பாதைக்கு நாம் யாவரும் செவிமடுப்போமாக!
ஜெபம்:
நேசமுள்ள தகப்பனே! எங்களுக்குள் பரிசுத்தமாகுதலின் கிரியையை தீவிரமாய் நடப்பிப்பதற்காக ஸ்தோத்திரம்! நாங்கள் இப்பாதையில் கவனமாய் வளர்ந்துவர உதவி செய்தருளும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.
எழுதியவர்:
சகோதரர் சகரியா பூணன்.
"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".
From:-
https://t.me/hisvoicetoday
0 Comments