இன்று "அவருடைய" சத்தம்
மார்ச் 31
🔸️ கிறிஸ்துவின் வருகைக்கு ஆயத்தமாகக்கடவோம்! 🔸️
கிறிஸ்து வரும்பொழுது அவருக்குச் சொந்தமானவர்களாகிய நாம் அனைவரும் ஒரு இமைப்பொழுதிலே மறுரூபமாக்கப்படுவோம். அச்சமயம், முதிர்வயதும் சாவாமையும் இல்லாத, புதிய சரீரங்களை நாம் யாவரும் தரித்துக் கொள்வோம் (1கொரி. 15:51-53). நாம் அடையும் புதிய சரீரம், இயேசு உயிர்த்தெழுந்தபின் பெற்ற அதே மகிமையான சரீரத்திற்கு ஒப்பாகவே இருக்கும் (பிலி.3:20,21). மேலும், அச்சமயம் கிறிஸ்துவுக்குள் மரித்தவர்களும் தங்கள் கல்லறைகளிலிருந்து புதிய சரீரத்தோடு உயிர்த்தெழுந்து, உயிரோடிருக்கும் இயேசுவின் சீஷர்களோடு சேர்ந்து, தங்கள் ஆண்டவரை மத்திய ஆகாயத்தில் சந்திக்கும்படி துரிதமாய் வானங்களில் ஏறுவார்கள் (1தெச.4:13-17).
பின்பு, கிறிஸ்து தன்னுடைய நியாயத்தீர்ப்பின் சிங்காசனத்தில் வந்து அமர்வார். அவ்வேளையில் கிறிஸ்து நம் ஒவ்வொருவருக்கும் சரியான மதிப்பீடு தந்து நியாயந்தீர்ப்பார். மேலும், நாம் இப்பூலோக ஜீவியத்தில் ஜீவித்த உண்மையான ஜீவியத்தின் அளவின்படி, தனித்தனியாக நாம் ஒவ்வொருவரும் நம்முடைய பிரதிபலனை அவரிடமிருந்து அச்சமயத்தில் பெறுவோம்!!
அந்நாளில், "முந்தினோர் அநேகர் பிந்தினோராயும், பிந்தினோர் அநேகர் முந்தினோராயும்" இருப்பதை நாம் கண்கூடாகக் காண்போம் (மத்.19:30). இப்பூமியில் நம்முடைய பார்வைக்கு ஆழ்ந்த ஆவிக்குரிய மனிதர்களைப்போல் காணப்பட்ட அநேகர், தேவனுடைய பார்வையில் உண்மையற்றவர்களாய் ஜீவித்ததை அன்று நாம் கண்டு வியப்போம்! இதற்கு மாறாக, நாம் சாதாரணமாக எண்ணிய சிலர் தேவனுடைய பார்வையில் மகா உத்தமமான வாழ்க்கை வாழ்ந்ததையும் அன்று நாம் கண்டு வியக்க போகிறோம்!!
அந்நாளில் 'ஒருவரும் அறியாத' உத்தமமாய் ஜீவித்த அற்பமான விதவை, உலகப்புகழ் கலாநிதியான உண்மையற்ற பிரசங்கியை முந்திச் சென்றிருப்பதை நம் கண்கள் கண்டு வியக்கும்!
அந்நாளில், இப்பூமியில் மனுஷர்கள் விலையேறப்பெற்றதாக மதிப்பிட்ட பணம், புகழ், போன்ற ஏராளமானவைகள் தேவனுக்கு முன்பாக கடுகளவும் மதிப்பு பெறாததையும் நாம் காண்போம். ஆனால், மனுஷர்கள் மதிப்பு கொடுக்காத பரிசுத்தம், தாழ்மை, சுயநலமின்மை, இரக்க குணம், நன்மை செய்யும் நற்குணம், போன்ற அநேக தெய்வ சுபாவங்களையோ அன்று தேவன் பெருமதிப்புக் கொடுத்து அங்கீகரிப்பதையும் நாம் கண்டு கொள்வோம்!
ஜெபம்:
பரம தந்தையே! கிறிஸ்துவின் நியாயாசனத்திற்கு முன்பாக அடைந்திடப்போகும் பிரதிபலனே நிரந்தரமானது! அதற்கு ஏதுவான தெய்வ சுபாவத்தை இப்பூமியில் வாழ்ந்து ஆயத்தமாயிருக்க கிருபை தாரும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.
எழுதியவர்:
சகோதரர் சகரியா பூணன்.
"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".
From:-
https://t.me/hisvoicetoday



0 Comments