இன்று "அவருடைய" சத்தம்
மார்ச் 28
🔸️ இயேசுவின் அடிச்சுவடு பின்பற்றுபவர்களுடனே ஐக்கியப்படுங்கள்! 🔸️
தேவன் நம்மை கிறிஸ்துவின் சாயலாய் மாற்றுவதற்கே விரும்புகிறார். ஆனால் இவ்வித மறுரூபம் (Transformation) இயேசுவின் பிற சீஷர்களைத் தள்ளிவைத்துவிட்டு நமக்கு மாத்திரம் 'தனியாக' ஏற்படாது! அவர்களோடு இணைந்திருக்கும் ஐக்கியத்தில்தான் நாமும் சேர்ந்து மறுரூபம் அடைய முடியும்!! (மத்தேயு 18:20).
நீங்கள் மனந்திரும்பிக் குணப்பட்டவுடன், தேவனுடைய வார்த்தைக்கு கீழ்படிய வாஞ்சித்து இயேசுவின் அடிச்சுவடுகளைப் பின்பற்றத் தீவிரிக்கும் சீஷர்களின் ஐக்கியத்தோடு சேர்ந்து கொள்ள நீங்கள் முயற்சிக்க வேண்டியது அவசியமாகும்.
இங்குதான் ஒரு புதிய விசுவாசி தன்னைச் சுற்றியுள்ள கிறிஸ்தவ உலகில் காணும் எண்ணற்ற ஸ்தாபனங்களையும் குழுக்களையும் கண்டு குழப்பம் அடைந்திட முடியும்! துரதிருஷ்டமாக உபதேசத்தின் ஒரு முனையிலிருந்து மறுமுனை வரைக்கும் ஏராளமான ஸ்தாபனக் குழுக்கள் தோன்றிவிட்டன. இக்குழுக்களில் ஒருவர் பாக்கியில்லாமல், தாங்கள்தான் இப்பூமியில் கிறிஸ்துவை வெளிப்படுத்தும் உண்மையான ஸ்தானாதிபதிகள் எனவும் மார்தட்டிக் கொள்கிறார்கள்!!
இக்குழுக்களில் அநேகர், "நீங்கள் எங்கள் குழுவில் சேராவிட்டால் கிறிஸ்துவின் சரீரத்தில் அங்கமாயிருக்க முடியாது!" என தங்கள் வேதாகமத்தை 'அடித்து' ஆணித்தரமாகக் கூறி, உங்களிடம் நிரூபிக்கவும் செய்வார்கள்!?
"அவர்களின் குழுவில் இல்லாமலும், அவர்கள் பற்றிக் கொண்டிருக்கும் அதே 'விந்தை உபதேசங்களைப்' பற்றிக் கொள்ளாமலும் இருக்கும் அநேகம் பிள்ளைகள் தேவனுக்கு உண்டு!" என்ற உண்மையை பெரும்பாலான இக்குழுவினர்களுக்கு உணர்த்துவிப்பது கிட்டத்தட்ட சாத்தியமற்ற செயலாகவே இருக்கிறது. அவ்வளவாய் இவர்களின் "அகந்தை" வலிமை நிறைந்திருக்கிறது. இவ்வாறு இன்றைய கிறிஸ்தவ உலகத்தை பீடித்திருக்கும் பரிசேயத்துவத்திற்கும், தனிநபர் ஆதிக்க உணர்வுகளுக்கும் நீங்கள் சிக்கிக் கொள்ளாதபடி எச்சரிக்கையாயிருங்கள்!!
ஆகவே, தன் ஆண்டவரை நேசித்து அவரை உத்தமமாய் பின்பற்ற வாஞ்சிக்கும் எல்லோரிடமும் நீங்கள் திறந்த மனதுள்ளவர்களாய் இருங்கள்!!
ஜெபம்:
அன்பின் பிதாவே! உம் சாயல் பெற்றிட, அருமை ஆண்டவரின் அடிச்சுவட்டைப் பின்பற்றும் மெய் சீஷர்களின் ஐக்கியத்தை கண்டடைய உதவி செய்தருளும்; கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.
எழுதியவர்:
சகோதரர் சகரியா பூணன்.
"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".
From:-
https://t.me/hisvoicetoday



0 Comments