இன்று "அவருடைய" சத்தம்
மார்ச் 18
🔸️ குற்றம் சாட்டும் சாத்தானை ஜெயித்திட வேண்டும்! 🔸️
சாத்தான் ஒரு குற்றஞ்சாட்டுகிறவன்! சாத்தானின் குற்றஞ்சாட்டுதலுக்கும், பரிசுத்தாவியின் உணர்த்துதலுக்கும் உள்ள வித்தியாசத்தை நாம் வேறு பிரிக்கத் தெரிந்தவர்களாய் இருக்க வேண்டும். தன்னுடைய குற்றஞ்சாட்டுதல்களின் மூலமாய் நாம் ஆக்கினை உணர்வடைந்து, மனமடிந்து போகவே சாத்தான் சதா முயற்சி செய்து கொண்டிருக்கிறான். இதற்கு மாறாக, பரிசுத்தாவியின் உணர்த்துதலோ, மென்மையும், முழு நம்பிக்கையையுமே எப்போதும் தருவதாய் இருக்கும்!
இக் குற்றஞ்சாட்டும் சாத்தானை நாம், "ஆட்டுக்குட்டியின் இரத்தத்தினாலும், நம் சாட்சியின் வசனத்தினாலும் மாத்திரமே ஜெயித்திட முடியும் (வெளி. 12:11). நம் கடந்தகால பாவங்களைக் குறித்த அவனுடைய குற்றஞ்சாட்டுதல்களுக்கு, வேதத்தின்படியான நம்முடைய சாட்சியை அவனுடைய முகத்திற்கு நேராக கூறும்போது மாத்திரமே நாம் ஜெயித்திட முடியும். "என் எல்லா பாவங்களையும் இயேசு கிறிஸ்துவின் இரத்தம் கழுவி விட்டது! நான் அத்தூய இரத்தத்தினால் முற்றிலும் நீதிமானாக்கப்பட்டுவிட்டேன்" என்பதே அந்த சாட்சியாகும்! இவ்வாறு நாமும் "இப்படி எழுதியிருக்கிறதே....." என இயேசு உபயோகித்த அதே ஆயுதத்தை சாத்தானுக்கு எதிராக நாம் உபயோகித்திட வேண்டும்!!
இவ்வாறு சாத்தானுடைய குற்றஞ்சாட்டுதல்களை மாத்திரமல்லாமல், அவன் பல்வேறு சோதனைகளால் நம் மனதைத் தாக்கி நமக்கு கொண்டுவரும் அதைரியத்தையும், பதட்டத்தையும், கவலையையும் ஜெயிப்பதற்கு இவ்விதமே தேவனுடைய வார்த்தையை சாத்தானுக்கு முன்பாக நாம் தைரியமாய் அறிக்கை செய்திட வேண்டும். இதனிமித்தமே நாம் தேவனுடைய வார்த்தையை நன்கு அறிந்து வைத்திருப்பது மிகவும் முக்கியமாகும். அப்போதுதான், நம்முடைய ஏற்ற சமயத்தில் பரிசுத்தாவியானவர் சரியான வேத வசனங்களை நம் மனதில் கொண்டுவந்து நிறுத்த முடியும்!
ஜெபம்:
அன்பின் பரலோக பிதாவே! எங்கள் இரட்சிப்பையே துவம்சம் செய்யும் சாத்தானின் குற்றம் சாட்டுதலை "வேத வசன சாட்சி அறிக்கை" மூலம் ஜெயித்திட கிருபை செய்தீரே, உமக்கு ஸ்தோத்திரம்! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.
எழுதியவர்:
சகோதரர் சகரியா பூணன்.
"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".
From:-
https://t.me/hisvoicetoday



0 Comments