இன்று "அவருடைய" சத்தம்
ஏப்ரல் 10
🔸️ இயேசு கிறிஸ்துவின் சாட்சிக்காக துன்பம் அடைவது நமது பாக்கியம்! 🔸️
இயேசுவுக்காய் தைரியமான சாட்சிகளாய் நிற்பவர்கள், தாங்கள் இருக்கும் ஸ்தலங்களில் "பல நதிகள் உள்ளது போல. . . . இரட்சிக்கப்படுவதற்கு எத்தனையோ வழிகள் உண்டு" என மற்றவர்கள் கூறுவதைக் கேட்டால், இவர்கள் என்ன செய்வார்கள் தெரியுமா? "இரட்சிக்கப்படுவதற்கு இயேசு தான் ஒரே வழி!" என தைரியமாய் கூறுவார்கள். மேலும் இயேசு கிறிஸ்து ஒருவரே உலகத்தின் பாவங்களுக்காக மரித்தவர் என்றும், இவர் ஒருவரே மரித்து உயிர்த்தெழுந்தவர் என்றும், ஒருவன் தெய்வத்தை (பிதாவை) இயேசுகிறிஸ்து மூலமாக மாத்திரமே அடைய முடியும் என்றும் தைரியமாய் சாட்சி சொல்வார்கள். இவ்வித நிலையில் உறுதியாக நிற்கும் ஒருவன், ஏதாகிலும் ஒரு வகையில் துன்பப்படத்தான் வேண்டியிருக்கும். ஆனால். . . அவ்வேளையில் இயேசு உங்களைப் பார்த்து "நீ பாக்கியவான்" எனக் கூறும் குரலை கேட்க மறந்துவிடாதீர்கள்.
இவ்வாறு துன்பப்படும் வேளையில் நாம் ஒருபோதும் முகவாடலாய் இருக்கக்கூடாது என்றும், அதற்கு பதிலாக, "அந்நாளிலே சந்தோஷப்பட்டுக் களிகூருங்கள்" என்றே இயேசு கட்டளையிட்டார். "உங்களைப் போலவே தீர்க்கதரிசிகளும் துன்பப்பட்டபடியால், இயேசுவினிமித்தம் துன்பப்படும் நீங்கள் தீர்க்கதரிசிகளின் அடிச்சுவட்டில் நடந்து வருகிறீர்கள் என்பதை அறிந்து சந்தோஷப்பட்டுக் களிகூருங்கள்" என்று இயேசு கூறினார் (லூக்கா 6:23).
மேலும் இயேசு கடைசி நாட்களைக் குறித்து எச்சரித்தபோது, "உங்களை ஜெப ஆலயங்களுக்குப் (சபைக்கு) புறம்பாக்குவார்கள், மேலும் உங்களைக் கொலைசெய்கிறவன் தான் தேவனுக்குத் தொண்டுசெய்கிறவனென்று நினைக்குங் காலம் வரும்"
(யோவான் 16:2) எனக் கூறினார். ஆம், கடைசி நாட்களின் உபத்திரவங்கள் சக கிறிஸ்தவர்கள் மூலமாகவும் வரும்! நீங்கள் தேவனுடைய முழு ஆலோசனைகளையும் கடைப்பிடித்து அவைகளைத் தைரியமாய் அறிவிப்பதை இவர்கள் எதிர்ப்பார்கள்!
இச்சூழ்நிலையில் நாம் தேவனுடைய முழு ஆலோசனைகளையும் கூறாமல், நமக்கு ஏற்படவிருந்த உபத்திரவங்களை மிக எளிதில் தவிர்த்துக் கொள்ள முடியும். ஆனால், நாமோ உபத்திரவங்களினிமித்தம் தேவனுடைய முழு ஆலோசனைகளையும் அறிவிப்பதற்கு சிறிதும் அஞ்சவே கூடாது. நீங்கள் சத்தியத்திற்கு உறுதியாக நிற்பதினிமித்தம் சபையைவிட்டு தூக்கி எறியப்பட்டால்கூட சந்தோஷப்பட்டுக் களிகூருங்கள் என்றே இயேசு நம்மை அழைக்கிறார்!!
ஜெபம்:
பரலோக தகப்பனே! இயேசுகிறிஸ்துவின் பூரண சுவிசேஷத்தை பிரசங்கிப்பதில் துன்பம் உண்டு எனவும் அதில் உறுதிபட நிற்பவர்கள் பாக்கியவான்கள் எனவும் உணர்த்தியமைக்கு உமக்கு நன்றி! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.
எழுதியவர்:
சகோதரர் சகரியா பூணன்.
"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".
From:-
https://t.me/hisvoicetoday



0 Comments