Header Ads Widget

LightBlog

Ticker

6/recent/ticker-posts

ஜூன் 15

 இன்று "அவருடைய" சத்தம்


ஜூன் 15


🔸️ நம் இருதயம் நாள்தோறும் தேவனால் சோதிக்கப்பட வேண்டும்! 🔸️


சங்கீதக்காரன் ஜெபித்த ஆழமான ஜெபங்களில்,  தேவன் தன் இருதயத்தை சோதித்து அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஜெபம் முக்கியமானதாகும். "தேவனே, என்னை ஆராய்ந்து என் இருதயத்தை அறிந்துகொள்ளும். வேதனை உண்டாக்கும் வழி என்னிடத்தில் உண்டோ என்று பார்த்து நித்திய வழியிலே என்னை நடத்தும்" என்றே  மிகுந்த உருக்கமாய் ஜெபித்தார்.  இந்த ஜெபம் சங்கீதக்காரனாகிய தாவீதுக்கு மாத்திரமல்லாமல்,  தேவனுடைய இருதயத்தை துக்கப்படுத்தாமல்  அவருக்குப்  பிரியமாய் வாழத்துடிக்கும் எல்லா பரிசுத்தவான்களுக்குமுரிய ஜெபமாகும்.


தத்துவ மேதை சாக்ரடீஸ் ஒரு சமயம் கூறும்போது,  "தன்னை சோதித்துப்பார்த்து வாழாதவனின் ஜீவியம் ஒருக்காலும் உருப்படாது!" என்றார்.  இவ்வுலகத்தின் சாதாரண தத்துவஞானி இவ்வாறு கூறுவார் என்றால், பரிசுத்த ஆவியானவர் நம்மிடம் "உங்களை சோதித்து அறியுங்கள்!" என்ற கட்டளைக்கு கிறிஸ்தவர்களாகிய நாம் எத்தனை அதிகமாய் செவி கொடுக்க வேண்டியது அவசியமாயிருக்கிறது.


தன்னைச் சோதித்துப்  பார்த்து வாழாத ஒரு கிறிஸ்தவனின் ஜீவியம் "பராமரிக்கப்படாத தோட்டத்திற்கு"  ஒப்பானதேயாகும்.  உங்கள் தோட்டத்திற்கு நீங்கள் சில வாரங்கள் அல்லது சில மாதங்கள் செல்லாமல் வீட்டிலேயே இருந்து விடுங்கள்.  பின்பு உங்கள் தோட்டத்திற்கு சென்று பாருங்கள்.  அங்கே நீங்கள் காண்பது என்ன? ரோஜா மலர்களும், தக்காளிப் பழங்களும் அல்ல! மாறாக, தோட்டத்தின் நாலு திசைகளிலும் "களைகள்" மண்டியிருப்பதையே காண்பீர்கள்!!


அதுபோலவே, தன்னை சோதித்துப் பார்க்காதவனின் கிறிஸ்தவ ஜீவியம் "ஒரு பூட்டிய வீட்டிற்கு" ஒப்பானதாகும். இதை நீங்கள் அறிய வேண்டுமென்றால்,  உங்கள் வீட்டை கவனமாக பூட்டி வைத்துவிட்டு சில வாரங்கள் கழித்து திறந்து பாருங்கள்.  "எங்கிருந்துதான் தூசி  வந்ததோ" என நீங்கள் ஆச்சரியப்படும் அளவிற்கு வீடு முழுவதும் தூசி அடைந்திருப்பதைக்  காண்பீர்கள்! 


இதைவிட மோசமாய், தன்னை சோதித்துப் பார்த்து வாழாத கிறிஸ்தவனின்  ஜீவியம் "கற்றுத் தேராத ஒரு சிறு பிள்ளைக்கு" ஒப்பாகவும் இருக்கிறது.  ஒரு பிள்ளை முறைப்படி கற்றுத் தேறவில்லை என்றால், அந்தப் பிள்ளை நிச்சயமாய் ஒரு காட்டுமிராண்டியைப்  போலத்தான் இருக்கும். ஒரு பள்ளியில் படிக்கும் பிள்ளைக்கு பரிட்சை உண்டு. போதனைகள் உண்டு. புத்திமதிகள் உண்டு. ஒழுக்கம் நிறைந்த கட்டுப்பாடு உண்டு. கவனமான பராமரிப்பு உண்டு. சுத்தம் செய்தல் உண்டு. ஊட்டச்சத்து தரப்படுத்தல் உண்டு. ஆம், இவை அனைத்தும் இருந்தால்தான், அந்த பிள்ளையின் ஜீவியம் மகிழ்ச்சியுள்ள நிறைவான ஜீவியமாய் இருந்திட முடியும்.  

  

ஜெபம்:

பரலோக பிதாவே!  சோதித்து அறியாத இருதயம் "பூட்டிய வீட்டிற்கு ஒப்பாக" தூசி அடைந்த வீடு என்பதை உணர்த்தியமைக்கு நன்றி! எங்களை நாள்தோறும் சோதித்தறிந்து வாழ கிருபை தாரும்,  கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென். 


எழுதியவர்:

சகோதரர் சகரியா பூணன்.


"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".


From:-

https://t.me/hisvoicetoday



Post a Comment

0 Comments