இன்று "அவருடைய" சத்தம்
மே 17
🔸️ பரிசுத்தாவி வழங்கும் "நடைமுறை" சாட்சி வாழ்க்கை வேண்டும்! 🔸️
சீன தேசத்தில் வாழ்ந்த இரண்டு கிறிஸ்தவ விவசாயிகளை குறித்து 'வாட்ச்மேன் நீ' ஊழியர் கூறுவதுண்டு. இவர்களுடைய தோட்டம் ஒரு மலைச்சாரலின் நடுவே இருந்தது. ஒவ்வொருநாள் அதிகாலையிலும் இந்த இரண்டு விவசாயிகளும் மலைக்குச் சென்று தங்கள் தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவார்கள். மலைச்சாரலில் இருந்த அவர்களின் தோட்டத்திற்கு கீழாக, வேறொருவருடைய தோட்டமும் இருந்தது! ஒருநாள் இரவில் கீழே இருந்த அந்த விவசாயி, மேலேயிருக்கும் இந்த இரண்டு கிறிஸ்தவ விவசாயிகளின் தோட்டத்துக் கால்வாய்களில் பெரிய துவாரத்தைப் போட்டுவிட்டு சென்றுவிட்டான். அதிகாலையில் எழுந்து, மேலே தங்கள் தோட்டத்தில் தண்ணீர் பாய்ச்சிய கிறிஸ்தவ விவசாயிகளின் தண்ணீர் யாவும், கால்வாய் துவாரம் வழியாக, கீழ் தோட்டத்திற்குச் சென்று பாய்ந்துவிட்டது! இவ்வாறு தொடர்ந்து ஏழு இரவுகளிலும் கீழ் தோட்டத்து விவசாயி செய்துகொண்டிருந்தான்!
இந்த இரண்டு கிறிஸ்தவ விவசாயிகளுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை! முடிவாக, விவசாயிகளாயிருக்கும் தாங்கள், அந்த கீழுள்ள விவசாயிக்கு தங்களிடமுள்ள கிறிஸ்துவின் அன்பை காட்டுவதென்று தீர்மானம் செய்து கொண்டார்கள்! அதன்படி, அடுத்தநாள் அதிகாலையில் எழுந்து, 'முதலாவது' கீழ் விவசாயின் தோட்டத்திற்கே தண்ணீர் பாய்ச்சினார்கள்! 'பின்பு' தங்கள் தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சினார்கள்! இவ்வாறாக, தங்களுக்கும் அந்த கீழ் விவசாயிக்கும் நடுவாக சிலுவையை வைத்து, தங்கள் சொந்த உரிமைகளுக்கு முற்றிலுமாய் மரித்துவிட்டார்கள்!! இவ்விதமாய் தொடர்ந்து இந்த சகோதரர்கள் இரண்டு அல்லது மூன்று நாட்கள் செய்ததும், கீழுள்ள கிறிஸ்தவரல்லாத அந்த விவசாயி, இந்த கிறிஸ்தவ சகோதரர்களிடம் மன்னிப்பு கேட்கும்படி வந்து நின்று, "உங்களின் சீரிய நடக்கைகள்தான் கிறிஸ்தவம் என்றால், அந்த கிறிஸ்தவத்தை நானும் அறியும்படி விரும்புகிறேன்" என பணிவுடன் கூறினார்.
பரிசுத்தாவி சீஷர்கள் மீது வந்திறங்கும்போது, அவர்கள் பெலனடைந்து, தனக்கு சாட்சிகளாய் இருப்பார்கள் (அப்.1:8) என இயேசு கூறினார். ஆம், நடைமுறை வாழ்க்கையில் கிறிஸ்துவின் அன்பைக் காட்டிட "சிலுவைக்கே" பரிசுத்தாவியானவர் நம்மை நாள்தோறும் நடத்திட வேண்டும்!!
ஜெபம்:
அன்பின் பரலோக தந்தையே! நடைமுறை ஜீவியத்தில் உமக்கு சாட்சியாய் வாழ்ந்திடவே உம் பரிசுத்தாவியின் வல்லமையை நாள்தோறும் நாடுகிறோம்! தயவாய் எம்மை நிறைத்து 'சிலுவையின் பாதையில்' நடத்தியருளும்! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.
எழுதியவர்:
சகோதரர் சகரியா பூணன்.
"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".
From:-
https://t.me/hisvoicetoday
0 Comments