இன்று "அவருடைய" சத்தம்
மே 22
🔸️ இயேசுவின் பாதம் அமர்ந்திடும் "நல்ல பங்காகிய" தியானம் வேண்டும்! 🔸️
மார்த்தாள் இயேசுவை மகிழ்ச்சியுடன் தன் வீட்டிற்குள் ஏற்றுக் கொண்டாள்...சமையலறையில் தனக்காக அல்ல, அவருக்கும் அவருடைய சீஷர்களுக்குமே சமைத்துக்கொண்டிருந்தாள். இந்த மார்த்தாள் இன்று உள்ள ஒரு விசுவாசியின் நிலையையே இங்கு சித்தரிக்கிறாள். இவர்கள் தங்கள் இருதயத்தில் ஆண்டவரை ஏற்றுக் கொண்டார்கள். மேலும், சுயநலமின்றி ஆண்டவரையும், அவருடைய ஊழியங்களையுமே செய்திட்டார்கள்! இருப்பினும், இப்படிப்பட்ட வைராக்கியம் கொண்ட மார்த்தாளைப் போன்றவர்களைத்தான் இயேசு கடிந்து கொண்டார்! இவர்களுடைய செயலில் அப்படி என்ன தவறு இருந்தது? இதற்கான விடை, இயேசு கூறிய அந்த இரண்டு வார்த்தைகளில் தான் அடங்கியிருக்கிறது : ஆம், "தேவையானது ஒன்றே!" என்பதே அந்த விடையாகும். அவள் செய்த ஊழியத்திற்காக அவள் கடிந்து கொள்ளப்படவில்லை. ஆனால், முதலாவது எதுவோ அதை முதலாவது வைத்திராதபடியால் கடிந்துகொள்ளபட்டாள்!!
"மரியாள் தன்னைவிட்டு எடுபடாத நல்ல பங்கை தெரிந்து கொண்டாள்" என்றே ஆண்டவர் கூறினார். இயேசு இங்கு குறிப்பிட்ட "நல்ல பங்கு" யாது? அவள் இயேசுவின் பாதத்தில் அமர்ந்து, அவருடைய வார்த்தையைக் கேட்டாள் ....அவ்வளவுதான்! இதுவே இயேசு குறிப்பிட்ட நல்ல பங்காகும். வேறு யாதொன்றைக் காட்டிலும், எல்லாவற்றிற்கும் மேலாக, இது ஒன்றே தேவையானதாகும்!
நம்முடைய ஜீவியத்தில் "கர்த்தரை கவனித்துக் கேட்பதில்" எவ்வளவு முக்கியத்துவம் தந்திருக்கிறோம்? கர்த்தருடைய பாதத்தில் எவ்வளவு நேரம் அமர்ந்து, அவருடைய வார்த்தையை வாசித்து, அதன்மூலம் அவர் பேசுவதைக் கேட்க வாஞ்சையாய் இருக்கிறோம்? இந்த வாஞ்சை இன்று அநேகரிடத்தில் இல்லையே! அதற்கு பதிலாய் ஏராளமான பல்வேறு காரியங்கள் நம்மை சூழ்ந்து கொள்கிறபடியால், மார்த்தாள் செய்த அதே தவற்றின் குற்ற உணர்விற்கே நாம் ஆளாகிறோம். உலக அலுவல்கள் மாத்திரமே நம்மை ஆட்கொள்கிறது என்பதில்லை, கிறிஸ்தவ ஊழியங்கள் கூட நம்மை ஆட்கொண்டிருக்க முடியும்! கூட்டங்களுக்குச் செல்வது.... மற்றும், சுறுசுறுப்பான நம்முடைய ஆவிக்குரிய ஊழியத்தின் நடுவில்தான், மார்த்தாளைக் கடிந்து கொண்டதைப் போலவே நம்மையும் கடிந்து கொள்ளும் ஆண்டவரின் சத்தத்தை நாம் கேட்கிறோம்.
"மரியாள் நல்ல பங்கைத் தெரிந்து கொண்டாள்". ஆம், இன்று நம்மைச் சூழ சம்பவிக்கும் அனைத்து உலக நிகழ்ச்சிகளிலும் "தேவனுடைய ஜீவ வார்த்தைகளே!" சகல முடிவுக்கும் நல்ல பங்காய் திகழ்கிறது!
ஜெபம்:
அன்பின் தந்தையே! இன்றைய அவசர உலகில் "ஊழியம்" என்ற அவசரத்தில்கூட உம் பாதம் அமரும் தியான வாழ்வை இழக்காமலிருக்க எங்கள் ஒவ்வொருவருக்கும் கிருபை தாரும்! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.
எழுதியவர்:
சகோதரர் சகரியா பூணன்.
"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".
From:-
https://t.me/hisvoicetoday
0 Comments