இன்று "அவருடைய" சத்தம்
மே 27
🔸️ மண்ணுலகில் அல்ல, தேவனிடமே ஐசுவரியவானாய் இருந்திடுங்கள்! 🔸️
ஒரு வாலிபன், இன்று மிகப் பிரபல்யமாக மாறிவரும் "பங்கு சந்தை" வியாபாரத்தில் முன்னோடியான தரகனாக இருந்தான். எந்த கம்பெனி அல்லது தொழிற்சாலையில் முதலீடு செய்தால் "பங்கு விலை உயரும்" என்பதிலேயே இவன் எப்போதும் சிந்தித்துக் கொண்டிருப்பான்!
5-நாள் விரதத்திற்கு பின் தோன்றிய 'ஜின்' ஆவி "உன் விருப்பம் என்ன? அதை நான் தருகிறேன்" என அவனிடம் கேட்டது. சற்றும் தயங்காமல், "அடுத்த வருடம் இதே மாதத்தில் பங்கு சந்தை நிலவரம் இப்போதே எனக்குத் தெரிந்தால், என் பணத்தையெல்லாம் லாபகரமான கம்பெனியில் நான் முதலீடு செய்திட முடியும்! ஆகவே, ஒரு ஆண்டிற்கு பிறகு உள்ள ஸ்டாக் மார்க்கெட் (பங்கு சந்தை) நிலவரம் கொண்ட நியூஸ் பேப்பர் எனக்கு காண்பி" எனக் கேட்டான். அந்த 'ஜின்' அவன் கேட்ட நியூஸ் பேப்பரைக் கொண்டு வந்து காட்டியது!
சொல்லி முடியாத மகிழ்ச்சி நிறைந்த ஆர்வத்தோடு "பங்கு சந்தை நிலவரம்" அடங்கிய பக்கத்தை இந்த வாலிபன் திருப்பினான்! அடுத்த வருடத்தில் பெருத்த லாபம் தரும் பங்கு கம்பெனியை கண்டு, "அந்த கம்பெனியில் தன் பணம் முழுவதையும் முதலீடு செய்துவிட வேண்டியதுதான்" என ஆனந்தமடைந்தான். ஆனால், தற்செயலாய் அதே பக்கத்தின் எதிர்ப்பக்கத்தில் தன் போட்டோ இருப்பதைக் கண்டு துணுக்குற்றான்! போட்டோவுக்கு கீழ், அவன் பெயரை குறிப்பிட்டு, ஒரு கோர வாகன விபத்தில் அவன் இறந்துவிட்ட "காலமானார்" செய்தியும் அதே நாளில் வெளியாயிருந்ததைக் கண்டு வெலவெலத்துப் போனான்! "என்ன, அடுத்த வருடத்தில் நான் ஒரு வாகன விபத்தில் மரித்துப் போவேனா? நான் என்ன செய்வேன்" என அவன் புலம்பினான்!!
உடனே 'ஜின்' கேட்டது "தாமதமின்றி பதில் சொல், உன் முதல் விருப்பம் என்ன?" என்றது. "சாகப்போகும் உன் சரீரத்திற்கு ஐசுவரியம் வேண்டுமா? நிரந்தர உன் ஆத்துமாவிற்கு ஐசுவரியம் தேடப் போகிறாயா? சீக்கிரம் சொல்" என கேட்டது!! அவனோ, மண்ணிற்கே தன் ஐசுவரியம் கேட்டு....மடிந்து மண்ணாய் போனான்!!
ஐசுவரியத்தில் தன் மனதை வைத்திருந்த ஒரு ஐசுவரியவானைப் பார்த்து "மதிகேடனே, உன் ஆத்துமா உன்னிடத்திலிருந்து இந்த இராத்திரியிலே எடுத்துக் கொள்ளப்படும், அப்பொழுது நீ சேகரித்தவைகள் யாருடையதாகும்..."(லூக்கா 12:20,21) என இயேசு குறிப்பிட்ட "மதிகேடனாகவே" இந்த வாலிபனும் மங்கி மறைந்து போனான்! வாலிபரே.... நீங்களும் அப்படியே 'மதிகேடனாய்' வாழ்வது நன்றோ? இன்றே மாயையிலிருந்து விடுபட்டு தேவனைத் தேடும் வாழ்விற்கு உங்களை அர்ப்பணித்திட உறுதியான தீர்மானம் செய்யுங்கள்!!
ஜெபம்:
அன்பின் தகப்பனே! எங்கள் சிந்தை மண்ணின் மாயையில் சிக்கிவிடாதபடி, உம்மோடு கொண்ட தேவ பக்தியில் ஐசுவரியவானாய் மாறிட உதவி செய்தருளும்! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.
எழுதியவர்:
சகோதரர் சகரியா பூணன்.
"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".
From:-
https://t.me/hisvoicetoday
0 Comments