Header Ads Widget

LightBlog

Ticker

6/recent/ticker-posts

ஜூன் 03

இன்று "அவருடைய" சத்தம்

ஜூன் 3

🔸️ பரிசுத்த இருதயத்தில் தேவனை தரிசிக்கும் சிலாக்கியம்! 🔸️

புதிய ஏற்பாட்டில் பரலோகராஜ்யத்தை சுதந்தரிப்பவர்களின் பரிசுத்தமோ "இருதயத்தின் பரிசுத்தம்" ஆகும்.  இவ்வாறு இருதயத்தில் பரிசுத்தமாகும் செயலை நியாயப்பிரமாணத்தினால் செய்யக்கூடாதிருந்தது (ரோமர் 8:3).  ஒரு மனிதன் வெளியரங்க வாழ்க்கையில் பரிசுத்தமாய் ஜீவிப்பதற்கே நியாயப்பிரமாணம் உதவியது.  வெளியரங்கமாய் கொலை செய்யாமல் இருப்பதற்கும்,  விபச்சாரம் செய்யாமல் இருப்பதற்கும் நியாயப்பிரமாணம் உதவியது.  வெளியரங்கத்தில் நற்சாட்சிப் பெற்ற இவர்கள், தங்கள் இருதயத்தில் அசுத்த சிந்தை கொண்டு, பிறரிடம் தீமையான நோக்கம் கொள்ளும்போது அவைகளை ஜெயிப்பதற்கு இந்த நியாயப்பிரமாணம் அவர்களுக்கு உதவி செய்ய முடியவில்லை!  இதனிமித்தமே பழைய உடன்படிக்கை அழிந்து புதிய உடன்படிக்கை தோன்றியதென எபிரேயர் 8-ம் அதிகாரம் கூறுகிறது.

இப்போது நியாயப்பிரமாணம் செய்யக்கூடாத..... நமக்குள்  (Inside us) நியாயப்பிரமாணத்தின் நீதி நிறைவேறும்படியே தேவன் இயேசு கிறிஸ்துவின் மூலமாய் மாம்சத்திலே பாவத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்தார்" (ரோமர் 8:3,4)  என வாசிக்கிறோம். ஆம், இருதயத்திற்குள்ளேயே நாம் பரிசுத்த ஜீவியம் செய்யமுடியும் என்பதே புதிய உடன்படிக்கை வழங்கும் உன்னத ஆசீர்வாதமாகும்.

இருதயத்தில் பரிசுத்தமாய் இருப்பதனிமித்தம் "தேவனை தரிசிக்கும்" அனுபவத்தைப்போல் ஒரு சிலாக்கியமான வாழ்க்கை வேறு எதுவுமே இல்லை எனலாம்! பழைய ஏற்பாட்டில் ஆரோனும்,  மிரியாமும் மோசேக்கு விரோதமாய் முறுமுறுத்தபோது தேவன் அவர்களுக்கு முன் தோன்றி, "உங்களுக்குள்ளே ஒருவன் தீர்க்கதரிசியாயிருந்தால், கர்த்தராகிய நான் தரிசனத்தில் .... சொப்பனத்தில் அவனோடே பேசுவேன்.  ஆனால் மோசேயிடமோ மறைபொருளாக அல்ல, முகமுகமாகவும் பிரத்தியட்சமாகவும் பேசுகிறேன்; அவன் கர்த்தரின் சாயலைக் காண்கிறான்" (எண்ணாகமம் 12:6,7,8) எனக்  கூறினார். தரிசனத்தையும், சொப்பனத்தையும் காட்டிலும் கர்த்தரை பிரத்தியட்சமாய் முகமுகமாய் காண்பதே மகா மேன்மையானது என இதிலிருந்து அறிந்து கொள்கிறோம்.

இந்நாட்களில் "தரிசனம் கிடைத்தது" என்ற பரவசத்தில் வாழும் ஜனங்களைத்தான் நாம் பார்க்கிறோம். ஆனால் தேவனை முகமுகமாய் தரிசித்து அவரோடு உறவாடும் வாழ்க்கையின் மேன்மையை இவர்கள் இன்னமும் அனுபவியாமல் இருப்பது மிகுந்த துயரமே ஆகும்!

ஜெபம்:
பரலோகத் தந்தையே! இருதயத்திலேயே பரிசுத்தமாய் வாழ கற்றுத்தந்த எங்கள் இயேசுவுக்காய் ஸ்தோத்திரம்! அனுதினமும் உம்மை தரிசித்து வாழ அனுக்கிரகம் செய்தருளும்! கர்த்தராகிய  இயேசு கிறிஸ்துவின் நாமத்தில்! ஆமென்.

எழுதியவர்:
சகோதரர் சகரியா பூணன்.

"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".

From:-
https://t.me/hisvoicetoday



Post a Comment

0 Comments