இன்று "அவருடைய" சத்தம்
ஜூன் 7
🔸️ ஜீவியமும் ஊழியமும் தேவ பெலனால் கட்டப்பட வேண்டும்! 🔸️
நித்தியத்தில் என்றென்றும் நிலைத்து நிற்கும் தரம் கொண்ட ஊழியம் யாதெனில், மிகுந்த மனத்தாழ்மையுடன் பரிசுத்தாவியின் வல்லமையை சார்ந்து கொண்டு செய்திடும் ஊழியமே ஆகும்! ஆகவேதான் நம் சுயத்தை வெறுமையாக்கும் பாடத்தை "இப்பொழுதே"
நாம் கற்றுக்கொள்ள வேண்டும்!
நம் சுய வாழ்க்கை மிகுந்த தந்திரம் கொண்டதாய் இருக்கிறபடியால், ஊழியம் என்ற பெயரில் தேவனுடைய பரிசுத்த ஸ்தலத்திற்குக் கூட துணிந்து செல்லும் அளவிற்கு வஞ்சனை நிறைந்ததாக இருக்கிறது! ஆகவே, தேவனுக்கு ஊழியம் செய்வதில்கூட சுயம் தோன்றுவதைக் கவனித்து, அந்த சுயத்தையும் நாம் மரணத்திற்குட்படுத்த வேண்டும்.
தேவனுடைய ஊழியம் 'விசுவாசத்தின் கிரியையாக' மாத்திரமே இருந்திட வேண்டும்! அதாவது, தன்னால் யாதொன்றும் இயலாமல் தேவனையே முழுவதுமாய் சார்ந்து கொள்வதிலிருந்து பொங்கிவரும் விசுவாசக் கிரியைகள் அல்லது விசுவாச ஊழியங்கள்! ஆகவே நம்முடைய ஊழியங்கள் மனுஷருடைய கண்களுக்கு முன்பாக எவ்வளவு வல்லமை பொருந்தியதாக இருந்தது? என்ற கேள்விக்கு யாதொரு இடமுமில்லை. நமக்கு முக்கியமான கேள்வியாக இருப்பதெல்லாம், நம்முடைய ஊழியம் பரிசுத்தாவியின் கிரியைகளின் நிமித்தம் தோன்றிய ஊழியமா? அல்லது நம் சொந்த முயற்சியில் தோன்றிய ஊழியமா? என்ற கேள்வியே மிக முக்கியமாகும். எவ்வளவு ஊழியங்கள் நடந்தது என்பதைக் குறித்து தேவன் ஆர்வம் காட்டுவதே இல்லை ....அந்த ஊழியப் பணிகள் "எந்த வல்லமையினால்" செய்யப்பட்டது? என்பதிலேயே தேவன் ஆர்வம் கொண்டிருக்கிறார்.
அந்த ஊழியங்கள் பணத்தின் வல்லமையினால், புத்திக் கூர்மையின் வல்லமையினால் செய்யப்பட்டதா? அல்லது பரிசுத்தாவியின் வல்லமையினால் செய்யப்பட்டதா? என்ற கேள்விகளே முக்கியமாகும்!! நாம் செய்வது மெய்யாகவே விசுவாச கிரியையான ஆவிக்குரிய ஊழியங்கள்தானா? என்பதை அறிந்து கொள்ள இந்த கேள்விகள் மிக நல்ல பரீட்சையாயிருக்கிறது! ஆம், தேவன் "அளவில்" அல்ல.... 'தரத்திலேயே' அதிக ஆர்வம் உள்ளவராயிருக்கிறார். அன்று பழைய ஏற்பாட்டின் நாட்களைப் போலவே இன்றும் தேவனுடைய மெய்யான ஊழியங்கள் 'பலத்தினாலும் அல்ல பராக்கிரமத்தினாலும் அல்ல, பரிசுத்தாவியின் வல்லமையைக் கொண்டுதான்' செயல்படுகிறது (சகரியா 4:6). இந்த அடிப்படையான சத்தியத்தை நாம் மறந்து விட்டபடியால்தான், ஜீவியத்திலும் ஊழியத்திலும் தேவன் மகிமைப்படவில்லை!
ஜெபம்:
அன்புள்ள தகப்பனே! எங்கள் சுய பெலனை மரணத்திற்கு ஊற்றி, உம் பரிசுத்தாவியின் பெலனைப் பெற்று அதன் மூலமாக ஜீவித்து, ஊழியம் செய்திட கிருபை தாரும்! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.
எழுதியவர்:
சகோதரர் சகரியா பூணன்.
"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".
From:-
https://t.me/hisvoicetoday
0 Comments