இன்று "அவருடைய" சத்தம்
ஜூன் 18
🔸️ நியாயப்பிரமாணம் நமக்குள் நிறைவேறிட வேண்டும்! 🔸️
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து போதிக்கையில்,
"நியாயப்பிரமாணத்தையானாலும் தீர்க்கதரிசனங்களையானாலும் அழிக்கிறதற்கு வந்தேன் என்று எண்ணிக்கொள்ளாதேயுங்கள்; அழிக்கிறதற்கு அல்ல, நிறைவேற்றுகிறதற்கே வந்தேன்.வானமும் பூமியும் ஒழிந்துபோனாலும், நியாயப்பிரமாணத்திலுள்ளதெல்லாம் நிறைவேறுமளவும், அதில் ஒரு சிறு எழுத்தாகிலும், ஒரு எழுத்தின் உறுப்பாகிலும் ஒழிந்துபோகாது என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்" (மத் 5:17,18) என்றார்.
இன்று அநேகர் புதிய உடன்படிக்கையின் கிருபைக்குக் கீழ் நாம் இருக்கிறபடியால், 'இனியும்' பிரமாணங்களைக் கைக்கொள்ள வேண்டியதில்லை என்று எண்ணுகிறார்கள். இது போன்றவர்களுக்காகவே ஆண்டவராகிய இயேசு, "நியாயப்பிரமாணத்தை அழிக்கிறதற்கு அல்ல, நிறைவேற்றுகிறதற்கே வந்தேன்" எனக் கூறினார். இவ்வாறு புதிய ஏற்பாட்டின் கிருபையை காமவிகாரத்துக்கேதுவாகப் புரட்டுவார்கள் என யூதா தன்னுடைய நிருபத்தில் முன்கூட்டியே எச்சரித்தார் (யூதா 4). ஆங்கில வேதாகமத்தில் 'காம விகாரத்திற்கேதுவாய்' என்ற வார்த்தை பாவம் செய்வதற்கு 'லைசென்ஸாகப்' புரட்டுவார்கள் என்றே கூறப்பட்டுள்ளது. தேவனுடைய பிரமாணங்களை 'மிக எளிதாய்' எடுத்துக் கொள்ளும்படி கிருபை உதவி செய்கிறது என்றே இவர்கள் எண்ணிக் கொள்கிறார்கள். இவ்வாறு ஒரு தரம் குறைந்த வாழ்க்கைக்காக தேவகிருபை தரப்படவேயில்லை.
புதிய ஏற்பாட்டில் ஒருவன் பெற்றுக்கொள்ளும் தேவ கிருபை அவனைப் பாவத்தின் வல்லமையிலிருந்து விடுதலையாக்கும் என்றே ரோமர் 6:14 கூறுகிறது. அதாவது, நாம் பிரமாணங்களைக் கைக்கொள்ளும்படியே இக்கிருபை உதவி செய்கிறது. பழைய உடன்படிக்கையில் தன் சொந்த பெலனால் கைக்கொள்ள முயற்சித்து தோற்றுப்போன ஒருவன், புதிய உடன்படிக்கையின் கீழ் பரிசுத்த ஆவியின் பெலனாகிய கிருபையைப் பெற்று, தான் முன்பு தோற்றுப்போன பிரமாணங்களை எல்லாம் ஜெயமாய் கைக்கொண்டிட முடியும்! இவ்விதமாகவே நாம் நியாயப்பிரமாணத்திலிருந்து விடுதலை பெற்றிருக்கிறோம். எப்படியெனில், கிருபையின் மூலமாய் பிரமாணங்கள் என் இருதயத்திலேயே கீழ்ப்படிகிறபடியால், வெளியரங்கமான பிரமாணத்திற்கு நான் கட்டுப்பட அவசியமில்லாமல் விடுதலை பெற்றிருக்கிறேன்.
இதைத் தெளிவுபடுத்தியே, "நியாயப்பிரமாணத்தை அழிக்க அல்ல, அதை நிறைவேற்றுவதற்கே வந்தேன்" என இயேசு கூறினார். "விபச்சாரம் செய்யாதிருப்பாயாக, கொலை செய்யாதிருப்பாயாக...." என்ற வெளியரங்கமான கற்பனைகளை இயேசு நிறைவேற்றாமல், இப்பிரமாணங்களை "தனக்குள்" தன் சிந்தை வாழ்க்கையில் நிறைவேற்றினார்!!
ஜெபம்:
அன்பின் தகப்பனே! ஆண்டவராகிய இயேசுவின் கிருபையை விருதாவாய் பெற்று, பாவம் செய்யும் இந்நாட்களில், நாங்கள் கிருபை பெற்று "இருதயத்திற்குள்" பரிசுத்தமாய் வாழ தயை செய்தருளும்; கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஆமென்.
எழுதியவர்:
சகோதரர் சகரியா பூணன்.
"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".
From:-
https://t.me/hisvoicetoday



0 Comments