இன்று "அவருடைய" சத்தம்
ஜூன் 25
🔸️ நம் பிழை மாத்திரமே உணர்ந்து வாழ வேண்டும்! 🔸️
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை நோக்கிப் பாருங்கள். அவர் ஒரு தடவைகூட தன் விரலை யார் மீதும் சுட்டிக்காட்டவே இல்லை. அவர் ஜனங்களின் பாவத்திற்கான குற்றத்தை தன்மீதே ஏற்றுக்கொண்டார்! ஒன்று அல்லது இரண்டு ஜனங்கள் அல்ல... இவ்வையகத்தில் வாழும் எல்லா ஜனங்களின் பாவத்திற்கான குற்றங்களையும் அவர் தன்மீதே ஏற்றுக்கொண்டார். ஆனால் உண்மையில், அவைகள் அவருடைய சொந்த பாவமல்ல!! "குற்றம் தன்னுடையதாய் இல்லாதிருந்தும்" அவைகளைத் தன்மீது ஏற்றுக்கொள்ளும் ஆவிதான் கல்வாரி சிலுவையின் ஆவியாகும்!! இந்த ஆவியை நம்முடைய குடும்பங்களில் நாம் பெற்றுவிட்டால், அக்குடும்பம் வசந்த சோலையாய் நிச்சயம் மாறிவிடும்.
எப்படியெனில், அக்குடும்பத்தில் உள்ள கணவனும், மனைவியும் தன்னைத்தானே நியாயந்தீர்க்கும் செய்தியினால் இறுக பற்றப்பட்டுவிட்டால், அப்படியாகும்! "நியாயத்தீர்ப்பு முதலாவது தேவனுடைய வீட்டில் துவங்கும் காலமாய் இருக்கிறது" (1பேதுரு 4:17) என நாம் வாசிக்கிறோம். இந்த வசனம் உங்கள் வீட்டை நீங்கள் எவ்வாறு தேவனுடைய வீடாய் மாற்றியமைக்க முடியும் என்பதைத் தெளிவாக எடுத்துக் கூறுகிறது.
உங்களை நீங்களே நியாயந்தீர்த்து, ஒருபோதும் பிறரை சுட்டிக்காட்ட உங்கள் விரலை நீட்டாமலிருந்தால், உங்கள் வீடு தேவனுடைய வீடாய் மாறும் என்பதில் சந்தேகமேயில்லை.
ஆம், நீங்கள் ஆதாமைப்போல் விரலை நீட்டாமல், "ஆண்டவரே, இச்சூழ்நிலையில் நிச்சயம் என்னிடம் ஏதாவது தவறு இருக்கக்கூடும். ஏனென்றால், நான் தேவனல்ல! நான் இன்னமும் ஆண்டவராகிய இயேசுவைப்போல் மாறவில்லை. எனக்கு வாழ்க்கைத் துணையாய் இருப்பவரிடம் 99% தவறு இருந்து, என்னிடம் 1% மட்டுமே தவறு இருக்கக்கூடும். நான் அந்த 1% தவறைக் காண்பதற்கு உதவி செய்யும்" என்று தன்னை மாத்திரம் நியாயந்தீர்ப்பவர்களே தேவனுக்கு முன்பாக நின்று ஜீவிப்பவர்கள். ஆ, இந்த வீடு "தேவனுடைய வீடாய்" மாறுவது அதிக நிச்சயமல்லவா!!
ஜெபம்:
பரலோக பிதாவே! பிறருடைய பிழைகளைக் கண்டு வாழ்ந்த எங்கள் ஜீவியத்தை மாற்றி, இன்றிலிருந்து எங்கள் பிழைகளைக் கண்டு திருந்தி, எங்கள் வீடு தெய்வீகமாய் மாற உதவிபுரியும்; கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், ஆமென்.
எழுதியவர்:
சகோதரர் சகரியா பூணன்.
"இன்று அவருடைய சத்தம்" என்கின்ற "குடும்ப தியான நூலிலிருந்து".
From:-
https://t.me/hisvoicetoday



0 Comments